சுகமான சுமைகள் சாந்தி நாதன்
சுகமான சுமைகள்
சாந்தி நாதன்
"யாரு
போன்? உன்
ஆருயிர் தோழி திரிபுர சுந்தரி தானே?"
சதாசிவனின் கிண்டல் கேள்வியால் சிறிது கோபம்
வந்தாலும், எப்படி இவ்வளவு சரியா கண்டுபிடிச்சீங்க?
“அவதான்
என்றாள் அகிலா. இந்த வாரம் முழுக்க மாதங்கி ஆபிசிலிருந்து லேட்டா வரதால நான்
கோயிலுக்கே போக முடியலை. அதான் ஒரு தகவல் சொன்னா....." "என்னவாம்?" நம்ப கோவில் கமிட்டி ஒரு ஆன்மிக டூர்
ஏற்பாடு பண்றாங்களாம். கர்நாடக கோவில் சுற்றுலா மங்களூர் வரை ரயில் அங்கிருந்து
டீலக்ஸ் பஸ்ஸில் உடுப்பி,தர்மஸ்தலா,சுப்ரமண்யா,
சிருங்கேரின்னு அஞ்சாறு கோவில் போயிட்டு திரும்ப மங்களூர் வந்து சென்னைக்கு
ரயில். இன்னும் ரெண்டு வாரத்துல கிளம்பறதால சீக்கிரமா பேர் கொடுக்கணுமாம். அவ
போகப் போறாளாம்......"
" இங்க பாரு அகிலா, நம்ப
மருமக மாதங்கி ஒரு பெரிய
பிராஜெக்டுக்கு தலைமை ஏத்துண்டு ராப்பகலா
அதுக்கு வேலை பாத்துண்டு இருக்கா. பையன் கல்யாண் பாதி நாள் ஆபிஸ் டூர் போயிடறான். நாம
குழந்தைகளையும் வீட்டு நி்ர்வாகத்தையும் பொறுப்பா பார்த்துப்போம்ங்கற தைரியத்துல
தான் அவாரெண்டு பேரும் முழுமையா தங்கவேலையில ஈடுபட முடியுது. பெற்றோர்களைப்
பாத்துக்கறது பிள்ளைங்க கடமைங்கறது போல பெற்றோர்களும் தங்களால முடிஞ்ச வரைக்கும்
பிள்ளைகளுக்கு உதவியா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்." "எனக்கும் இதெல்லாம் தெரியும். ஏதோ ஆன்மீகப் பயணம் போறாங்கன்னு
கேட்டதும் ஒரு நிமிஷ நப்பாசை அவ்வளவு தான். இதோட இந்த பேச்சு வேண்டாம்." அகிலா
சிறிது கோபமாக இடத்தை விட்டு நகர்ந்தாள்.
இரண்டு
நாட்களுக்குப் பின் இரவு சாப்பாட்டு மேஜையில் எல்லாரும் கூடியிருக்க,மாதங்கி"கோயில்ல ஏதோ டூர் அரேஞ் பண்ணியிருக்காங்களாமே, நீங்க போகணம்னு ஆசைப்
படறீங்களா?"என்று கேட்க அகிலா திகைப் படைந்தாள்.
"உனக்கு இது எப்படித் தெரியும்? முதல்ல அதைச்
சொல்லு". "நான் ஆபிசிலிருந்து வரும் போது
திரிபுரா மாமியைப் பாத்தேன். வீட்டில் டிராப் செய்யறேன்னு சொல்லி காரில்
ஏத்திக்கிட்டேன். ஊருக்குப் போறதுக்கு ஷாப்பிங் போயிடடு வரதாகவும் வந்த ஆட்டோ
ரிப்பேர் ஆனதால வேற ஆட்டோ வருமான்னு பார்த்திட்டு நிக்கறதா சொல்லி இந்த டூர் பத்தி
சொன்னாங்க.அவங்க மருமக பாங்கில் வேலை பார்க்கறாங்க இல்லையா அவங்களுக்கு இயர்
எண்டிங் என்பதால வேலை நிறைய இருக்குமாம்.
அவளுக்கு லீவு கிடைக்காவிட்டா மாமியின் கணவரும் மகனுமாக வீட்டையும் குழந்தைகளையும்
பார்த்துக்க வேண்டியதுதான் இந்த மாதிரி
சான்ஸ் கிடைக்காது அதனால் நான் போகத்தான் போறேன் என்று சொன்னாங்க அத்தை நீங்க
இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே " என்று கேட்ட மருமகளுக்கு பதிலாக ,"என் சின்ன வயசில எங்க பாட்டி சொன்ன ஒரு கதை இப்ப எனக்கு நினைவுக்கு
வரது"......ஹேய் என்ன கதை சொல்லுங்க" குழந்தைகளும் மகன் மருமகள்
கணவரும் சுவாரஸ்யமாய் கேட்க,
"ஒரு கிராமத்தில் ஒரு பொறுப்பான
குடும்பத் தலைவி கணவர், குழந்தைகளே தன் உலகம் என வாழ்ந்து
வந்தாளாம். ஐப்பசி மாத துலா ஸ்தானம் மிக நல்லது என்பதால் அவர்கள் ஊரிலிருந்து
தொலைவில் இருந்த காவேரி ஆற்றுக்கு நிறையப் பேர் கூட்டமாகக் கிளம்பினார்களாம்.
இவளையும் கூப்பிட்டபோது தன் கணவருக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை என்றும்
கணவர், குழந்தைகளை
விட்டுவிட்டு தான்வர இயலாது என்று மறுத்து விட்டாள். "துலா ஸ்தானம் செய்ய
உனக்குக் கொடுப்பினை இல்லை பாவம் நீ " என்று கிண்டல் செய்து பக்கத்து
வீட்டுப் பெண்மணியும் அவர்களோடு சென்றுவிட்டாள். ஐப்பசி மாதப் பிறப்பன்று
அதிகாலையில் எழுந்துத் தன் வீட்டுக் கிணற்று நீரை
இறைத்து காவிரித் தாயை மனமாரப்
பிரார்த்தித்தவாறே ஸ்நானம் செய்தாள்.
குடம் குடமாய் தலையில் விழுந்த நீரில் இருந்து ஏதோ அவள் தலையில் விழ,
எடுத்துப் பார்த்தால் ஒரு மோதிரம் இருந்தது. அதைக் கொண்டு சுவாமி பிரையில் வைத்துவிட்டுத்
தன் வேலைகளை அவள் பார்க்கத் துவங்கினாள். இரு நாட்கள் கழித்து யாத்திரை சென்றவர்கள்
உற்சாகமாய் திரும்பி வந்தனர். தங்கள் பயண அனுபவத்தை அவளிடம் கூறும் போது பக்கத்து
வீட்டுப் பெண் முகவாட்டத்தோடு காணப்பட்டாள். விசாரித்ததில் காவிரியில் குளிக்கும்
போது அவள் கையிலிருந்த மோதிரம் நழுவி நீரில் விழுந்து விட்டதாக வருத்தத்தோடு கூறினாள். உடனே உள்ளே சென்று சுவாமி பிறையில்
வைத்திருந்த மோதிரத்தை எடுத்து வந்து காட்ட, மோதிரத்தைத்
தொலைத்தவள் "இதுதான் என் மோதிரம்," என்று கூவினாள். மோதிரம் தன்னிடம் வந்த
விபரத்தை இவள் கூற, அனைவரும் வியப்படைந்தனர். அவளது கடமை தவறாத குணத்தையும் ஆழ்ந்த
இறைபக்தியையும் உணர்ந்த இறைவன் அவள் வீட்டுக் கிணற்றுக்குள் காவிரி நீரைப் பாயச்
செய்துள்ளார் என்று யாவரும் உணர்ந்தனர். இந்தக் கதை வெறும் கற்பனையாக இருக்கலாம்.
ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் நமக்குரிய கடைமைகளை உள்ளன்போடு செய்வதே கடவுளை
நெருங்க அடிப்படையாகும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். இந்த
ஆன்மிகப் பயணம் போகவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லவே இல்லை. இனி போய்
அவரவர் வேலைகளைப் பாருங்கள்" அகிலா செல்ல அதட்டலோடு எல்லாரையும் இயல்பு
நிலைக்குத் திரும்பச் செய்தாள்.
அடுத்து வந்த நாட்களில் மாதங்கியின் ப்ராஜெக்ட் மும்பையில் உள்ள தலைமை
அலுவலகத்தில் பெறும் பாராட்டைப் பெற்று அவளை
மும்பாய்க்கு கூப்பிட்டு ஒரு பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.
"உங்கள் ஒத்துழைப்பால் தான் நான் இதில் வெற்றிபெற முடிந்தது" என்று
மாதங்கி மாமனார் மாமியாரை பாராட்டி,"
நாளை நான் வந்தபிறகு உங்களுக்கு ஒரு
சர்ப்ரைஸ்" என்று போனில் பேசும்போது
அகிலா மிகவும் பெருமிதமடைந்தாள்.
"கோயிலுக்குக் கிளம்பி மனமார
இறைவனுக்கு நன்றி கூறி வீடு திரும்பிய அகிலாவுக்கு டூர் சென்றவர்கள் திரும்பி
இருப்பார்கள் என்பது நினைவுக்கு வர,
திரிபுராவை தொடர்பு கொண்டாள். "அகிலாவா," என்று
மெல்லிய குரலில் அவள் பேச,
"என்ன பயணக் களைப்பா? நான் அப்புறமா
பேசட்டுமா?" என்றாள் அகிலா. "போனை வைச்சுடாதே என்றவள் என் நேரமே
சரியில்லை.எவ்வளவு ஆசையா கிளம்பினேன் ஆனா மங்களூரில் ரயிலை விட்டு இறங்கும் போதே
கால் பிசகி விழுந்துட்டேன்." ஒத்தருக்காக நம்ம ப்ரோக்கிராமை
மாற்றக்கூடாதுன்னு எல்லாரும் முணுமுணுக்க, டூர் மானேஜர் தெரிந்தவர் ஒருவர் வழியாக நடக்கவே
முடியாமல் இருந்த என்னை ஆம்புலன்ஸ் ஏற்பாடு பண்ணி ஆஸ் பத்திரிக்குக் கூட்டிண்டு
போக வைச்சுட்டு மத்தவளோட கோயிலுக்குப் போயிட்டார். விழுந்ததில் காலில் பிராக்ச்சர்
என்று தெரிந்ததில் எம் பையனுக்குத் தகவல் சொன்னா. அவன் கிளம்பி
வருவதற்குள் கட்டுப் போட்டு மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்து பார்த்துண்டா.
மறுநாள் வந்த பிள்ளை எங்கிட்ட முகம் கொடுத்துப் பேசவேயில்லை.டாக்டர்கள் அனுமதியோடு
அங்கிருந்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு பண்ணி இங்க
கூட்டிண்டு வந்துட்டான்."மத்தவாளைப் பத்திக் கொஞ்சம்கூட கவலைப்படாம
போனியே இப்ப உன்னால எல்லாருக்கும் எவ்வளவு தொல்லைன்னு இவர் கரிச்சுக் கொட்டறார். மருமக பார்வையாலேயே
எரிக்கறா. கடனுக்கு எல்லாத்தையும் பண்ணி என் ரூமில் வைச்சுட்டு மாமனாரிடம்
சொல்லிண்டு அவ பாட்டுக்கு ஆபிஸ் போயிடறா....."
"அடப் பாவமே, கவலைப் படாம
பகவானை நினைச்சிண்டு இரு. கூடிய சீக்கிரம் கால்
சரியாகி பழைய மாதிரி நடக்க ஆரம்பித்து விடுவே பார். நம்ப குழந்தை, கணவன் கோபத்தில்
ஏதோ சொல்றான்னு நினைச்சிண்டு பொறுமையா இரு. நாளைக்கு நான்வந்து உன்னைப்
பாக்கறேன்" போனை வைத்தாள் அகிலா.
மறு நாள் மும்பையிலிருந்து திரும்பி வரும்
மாதங்கியின் வரவை யாவரும் ஆவலோடு எதிர் பார்த்திருக்க, அகிலா
சமையலறையில் ஒரு விருந்தே தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். "அத்தே, மாமா"
என்று கூப்பிட்டவாறே உள்ளே வந்த மாதங்கி இருவரையும் நமஸ்கரித்தாள். " இந்த
சவாலான வேலையை நான் கொடுத்த காலக்
கெடுவில் சரிவர முடித்துக் கொடுத்தற்கு எனக்கும் என் டீமிற்கும் ஹெட் ஆபிஸில் ஒரே பாராட்டு.எல்லாருக்கும்
ஊக்கத் தொகை. எனக்குப் பதவி உயர்வு. இதெல்லாம் உங்க ஒத்துழைப்பால தான்
நடந்ததது." "உன் திறமையால ஈ ஜெயிச்சிருக்க. நாங்க என்னம்மா பெரிசா
செஞ்சிட்டோம் ?" "இல்லை மாமா, கிட்டத்தட்ட ஒரு
மாசமா வீட்டைப் பத்தியோ குழந்தைகளைப் பத்திய கவலையோ இல்லாம நான் இதில் முழு கவனம்
காட்டமுடிஞ்சதுக்குக் காரணம் நீங்க அந்தப் பொறுப்பை பார்த்துக் கொண்டதால்
தானே...." சொன்னவாறே ஒரு கவரை அவர்களிடம் "என்னோட அன்புப் பரிசு "
என்று கொடுத்தாள். "அப்பா சஸ்பென்ஸ் தாங்கலையா? நானே சொல்றேன். உங்க இரண்டு பேருக்கும் காசி, ரிஷிகேஷ்,ஹரித்வார் போக
ஒரு நல்ல டிராவல் ஏஜென்சி மூலமாக ஏற்பாடு செஞ்சிருக்கோம். நீங்க தேதி பார்த்து
சொன்னா பிளைட்டிக்கெட் கைக்கு வந்துடும்.
நீங்க வசதியா தங்கறது, மத்த வசதிகள் எல்லாம் அவங்க கச்சிதமா பாத்துப்பாங்க. மாதங்கி அந்த
சமயம் லீவு போட்டுட்டு வீட்டைப் பார்த்துப்பா. நீங்க ஜாலியா எந்தக் கவலையும்
இல்லாம போயிட்டு வரலாம்" மகன் கூறுவதைக்கேட்டுப் பெரியவர்கள் இருவரும்
புன்னகையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"ஆனா பாட்டி, எனக்கும்
அக்காவுக்கும் தான் சிரமம்..." பேரன்கவலைப் படுவது போல் சொல்ல,"உங்களுக்கு
என்னடா கஷ்டம்" பாட்டி கேட்க,
நீ்ங்க டூர் போயிட்டு வரவைக்கும் அம்மாவோட
சமையலை சாபபிடணுமே அதான்" என்று குறும்புச்சிரிப்போடு கூற அத இடமே
சிரிப்பலலைகளால் அதிர்ந்தது,
நிஷ்காம கர்மா செய்ததற்க்கு குழந்தைகள் கொடுத்த பரிசு !!
ReplyDelete