என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்
என்ன தவம் செய்தனை
சாந்தி நாதன்
"வாங்க கல்யாணி,கமலா வண்டி
சரியான நேரத்துக்கு வந்ததா? டிரைவர் கரெக்டாக வந்துட்டான் இல்லையா?" முகம் மலர வரவேற்கும் அண்ணி விசலத்தை பார்த்து அரைகுறை
புன்னகை ஒன்றை உதிர்த்தாலும் பார்வை அந்த அழகிய பரந்த பங்களாவை
அளவெடுத்துக்கொண்டிருந்தது.
"ரயிலடிக்கு சுதாகர் வருவான்னு நினைச்சோம். பங்களூர்
வண்டியும் கோவை வண்டியும் ஏறத்தாழ ஒரே நேரத்துக்கு வந்தாலும் பிளாட்பாரம் வேறவேறதானே ? உங்க டிரைவர் மாறிமாறி
செல்லடிச்சு ஒருவழியா எங்களை பிடிச்சுக் கூட்டிவந்தாரு" குற்றம் சாட்டும்
குரலில் கூறியவாறே படியேறிய கல்யாணியை ஆமோதித்தபடியே பின்தொடர்ந்தாள் கமலா.
"சுதா அண்ணா ஆபீஸ் வேலையா டெல்லி போயிட்டு ராத்திரி வரவே
ரொம்ப நேரமாயிடுத்து. எங்க டிரைவர்தான் கரெக்டா
கூட்டிவந்துட்டாரில்ல. உள்ள வாங்க அத்தை வாய்நிறைந்த புன்னகையுடன்
வரவேற்பவளை ஏற இறங்க பார்த்த கமலா அட பாவனா,கல்யாணப்பொண்ணு .ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு
வளர்ந்துட்டியே என்றாள் ,கண்கள் விரிய.
"வாங்க அத்தை" வரேவற்றபடி வந்த சுதாகர்,"பாவனாவை அடையாளம்
தெரியாலைங்கறீங்க , நீங்க அவளை ஐந்து வயசுக்குழந்தையா எங்க அப்பா இறந்தபோது
பார்த்ததுக்கு அப்புறம் இப்பதானே பாக்கறீங்க ?"கிண்டல் தொனிக்க பேசியவன் "நான்
ரயிலடிக்கு வந்திருந்த என்னையும் அடையாளம் தெரிஞ்சிருக்குமான்னு தெரியலை"
என்றான்.
"அதான் எங்க அண்ணனையே உரிச்செடுத்த மாதிரி இருக்கியே"
தொடர்ந்து கமலா பேசுவதற்குள் "வணக்கம் அத்தை" என்றபடி சௌமியா வர ,"என் மருமக"
என விசாலம் அறிமுகம் செய்தாள்."முகம் கழுவிட்டு வந்தீங்ஙன்ன சூடா காபி
குடிக்கலாம் .நீங்க என்ன குடிப்பீங்க"? "நாங்க வண்டியிலேயே பல் தேய்ச்சாச்சு காபிதான்
குடிப்போம்" என்ற கல்யாணி "அண்ணி மக மருமக ரெண்டுபேருமே நல்ல அம்சமா
இருக்காங்க" என்றாள்
"எல்லாருக்குமே காபி கொண்டுவாங்க மாமி" என்ற பாவனாவின்
குரலைத்தொடர்ந்து ஒரு நடுத்தரவயது மாது கொண்டுவந்த காபியை ருசித்தபடியே
"பரவாயில்லையே சமையலுக்கு ஆளெல்லாம் இருக்காங்களா?"
என்ற கல்யாணிக்கு
பதிலாக"நாங்க மூணுபேருமே வேலைக்குப் போறவங்க. பொறுப்பான பதவியில இருப்பதால தாமதமா வரதும் சீக்கிரம போறதும்
ஒவ்வொருநாள் எங்களுக்கு ஒவ்வொரு மாதிரியிருக்கும்
பாதிநேரம் அம்மா தனியாகத்தான் இருக்கவேண்டியிருக்கு. இருபது லருட ஓயாத
உழைப்பு அவங்க உடல் ஆரோக்கியத்தை நன்றாக சீர் குலைச்சிருக்கு. அதான் அவங்களுக்கு
துணையாகவும் உதவியாகவும் இந்த அம்மாவை வீட்டோட இருக்கவச்சிருக்கோம்" சுதாகர்
பதிலை கவனிக்காதது போல்
"அண்ணி,வீடு ரொம்ப அழகா இருக்கு"வீட்டை சுற்றி பார்வையை
சுழலவிட்டபடி இருவரும் கூற, "அத்தை, இந்த வீட்டுக்குப் பிளான் போட்டுக் கட்டிய செல்வி சௌமியா
முதல்ல அம்மாவின் பிரியமானவளாகி , அடுத்துஎன் ஆருயிர் தோழியாகி பிறகு எங்க அண்ணணின் அன்புக்
காதலியாகி இப்ப எங்கவீட்டு மகாலட்சுமி ஆகிட்டாங்க" பாவனா நாடக பணியில் பேச
வெட்கத்தில் முகம் சிவக்க நாணிநிற்கும் சௌமியாவையும் அசட்டுச்சிரிப்போடு நிற்கும் சுதாகரையும்
பார்த்து ரசித்துசிரித்தனர் மற்ற நால்வரும்.
ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்ட புகைப்படத்தில்
சிரித்துக்கொண்டிருநத அண்ணன் சபேசனின் படத்திற்கருகில் சென்ற கல்யாணி,"எங்க அண்ணாதான்
பாவம் இந்த வசதியான வாழ்க்கையை அனுபவிக்கக் கொடுத்துவைக்காதவரா
போய்சேர்ந்துட்டாரு.ஏதோ அவர் சேர்த்து வைச்ச புண்ணியமும் எங்களைப் பெத்தவங்க
ஆசியும் சேர்ந்து இன்னிக்கு உங்க குடும்பத்தை இந்த நிலைமைக்கு உயர்த்தியிருக்கு
"மனதில் பொங்கியெழும் பொறாமையை
மறைத்துக்கொண்டு கல்யாணி கூறுவதை" சரியாச்சொன்ன அக்கா" என ஆமோதித்தாள்
கமலா.
"கூடப்பிறந்த உங்க இரண்டு பேருக்கும் குறையில்லாம தன் கடமையை பெத்தவங்க இடத்துல நின்னு
நிறைவேற்றிய திருப்தியில எங்க அப்பா திடிரென இறந்தப்ப எங்கம்மா நிலைகுலைஞ்சு
போனாலும் பெத்த குழைந்தைகளுக்காக உழைக்கத்
தயார் ஆனாங்க. குடியிருந்த வீடு, அவங்ககிட்ட இருந்த சொற்ப நகையெல்லாம் கடனுக்கு
சரியாகிவிட தன் உழைப்பை மூலதனமாக்கி அவங்க உழைச்ச உழைப்புதான் இன்னிக்கு எங்களை
இந்த நிலைக்கு உசத்தியிருக்கு. வயசான அவங்க அம்மா பொறுப்பில எங்களை விட்டுட்டு
காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் கார்மெண்ட் கம்பெனியில அவங்க ஓடா தேய்ஞ்சு
பட்டபாடு தான் எங்க உயர்வுக்கு
பாதைபோட்டுக் கொடுத்திருக்குன்னு புரிஞ்சுக்கோங்க" ஆத்திரமும் உணர்ச்சியும்
பொங்க சுதாகர் பேச விசாலம் முகத்தில் கலவரம் குடிகொண்டதை சௌமியா கவனித்தாள்.
"இப்ப எதுக்குங்க இந்த பழைய நினைப்பெல்லாம்? மாமாவோட
தன்னலமில்லாத நற்செயல்கள் உங்க அம்மாவோட உழைப்புங்கற அஸ்திவாரத்துக்கு அரணா
அமைஞ்சு குடும்பத்தை நல்ல உயர்வுக்குக் கொண்டுவந்திருக்குன்னும்
வச்சுக்கலாமில்லையா? இன்னிக்கு நம்ம எல்லாருக்கும் நிறைய வேலை இருக்கு. பாவனா
அத்தைங்களை கூட்டிட்டுப் போய் அவங்க அறையை காமி அவங்க பெட்டியெல்லாம் ஏற்கனவே அங்க
வச்சாச்சு. அத்தை, நீங்க ரெண்டுபேரும் குளிச்சு தயாரானீங்ஙன்னா டிபன் சாப்பிட்டுட்டு நாம புடவைகடைக்குப்
போகணும் பாவனா, நீயும் சுதாவுமா அம்மா பூஜை சாமான்கள் லிஸ்டு
போட்டிருக்காங்க இல்லையா அதுபடி சாமான்கள் வாங்கிட்டு தையல்கடையிலிருந்து உன்
ஜாக்கட்டெல்லாம் சரி பார்த்து வாங்கிட்டு
வந்துடு." சூழலை சகஜமாக்கினாள் சௌமியா.
"ஆமா நீங்க
ரெண்டுபேரும் சௌமியா கூடப்போயி மனசுக்குத் திருப்தியா நல்ல சேலைகளாப் பாத்து
வாங்கிக்கங்க.சுதாகர் கல்யாணத்துக்கே நீங்கவராதது எனக்குக்குக் குறையா இருந்தது.
குடும்பத்து மூத்தவங்க ஆசிவேண்டி நாளைக்கு செய்யப்போற சுமங்கலி பூஜையும் பாவனா
கல்யாணமும் நல்லபடியா நடக்கணும் நான்
வேண்டிக்கிட்டிருக்கறது உங்க ஆசியால நல்லபடியா நிறைவேறணும்" நெகிழ்ந்த குரலில்
விசாலம் பேசினாள்.
"நீங்க சுதாகர்
கல்யாணத் தகவல் சொன்னப்ப எம்புருஷனுக்குக்கண் ஆபரேஷன். கமலா மக பிரசவ நேரம் .
சௌமியாஅக்கா பிரசவத்துக்கு அவங்க அம்மாஅப்பா வெளிநாடு போறாங்கான்னு சொல்லி அவசரமா
திருமணத்தை நடத்திட்டீங்க" குறைசொல்வது போல் பேசும் கல்யாணியை முடிக்கவிடாமல், "அதனால் என்ன இப்ப, அண்ணா
கல்யாணத்துக்கு ஒண்ணு, என் கல்யாணத்துக்கு ,. ஒண்ணு நாளைய பூஜைக்கு ஒண்ணுன்னு அமர்க்களமா
மூணு புடவையா சேர்த்து வாங்கிக்கங்க
.கூடவே ரெண்டு மாமாக்களுக்கும் பட்டு
வேட்டி சட்டைகளும் மறக்காம வாங்கிடுங்க. கவ்யாணத்துக்கு முதல் நாள் தான் அவங்க
வருவாங்கான்னு அம்மா சொன்னாங்க.அப்ப கடைக்கெல்லாம் போக நேரமிருக்காது"
பேசியபடியே அத்தைகளுடன் மாடியேறினாள் பாவனா.
அவர்கள் மூவரும் அறைக்குள் செல்லக் காத்திருந்த விசாலம்"
சுதா ,அவங்க என்னமோ
பெசிட்டுப் போகட்டும் நீ அதுக்கெல்லாம் ஆத்திரப்பட்டு அவங்க மனம் நோக பேசாத
பொறுமையா இருப்பா" என்றாள் கெஞ்சுவது போல.
"ஆத்திரப்படாம எப்படி இருக்க முடியும்? இவ்வளவு நாளா நாம இருக்கோமா இல்லையான்னு கவலைப்
படாதவங்க ,நம்ம கஷடத்துக்கு
உதாவதங்களை மதிச்சு கூப்பிட்ட உங்க மதிப்புத் தெரியாதவிதமா எல்லாம் எங்க அண்ணா
ஆசியாலான்னு சொல்லும் போது ரத்தம் கொதிக்குது" என்றான் கோபமாக.
"நீங்க சொல்றதெல்லாம் சரின்னே வச்சுக்குவோம் ஆனா
பாதிக்கப்பட்ட அத்தை பழசையெல்லாம் மறந்து எவ்வளவு பெருந்தன்மையோட அவங்க உறவை
புதுப்பிச்சுக்க விரும்பறாங்கன்னு புரிஞ்சுக்கப் பாருங்க. எந்தவித தடங்கலும்
இல்லாம நாளைய பூஜையும் தொடர்ந்துவரும் பாவனா திருமணமும் நடக்கணும்னு அவங்க மனசில
ஒரு பதட்டம் இருந்துக்கிட்டேயிருக்கு. இதனால ராத்திரி சரியா தூங்காம அவங்க பி.பி
கொஞ்சம் அதிகமாயிருக்கு. இதையெல்லாம் மறக்காம, அவங்க சொல்றமாதிரி பொறுமையாஇருக்கப்
பாருங்க" சிறிது அதட்டலாகப் பேசும் மருமகளை அணைத்துக் கொண்டாள் விசாலம்.
அடுத்த அரைமணியில் அனைவரும் காலை உணவை
உண்டு முடித்து பாவனா அண்ணனுடன் ஒரு வண்டியில் கிளம்பிச் சென்றாள்.சௌமியா
மாமியிடம் மதியம் உணவு மற்றும் இரவுக்கான தேவைகள் பற்றி
பேசியதுடன்"அம்மாவுக்கு மாத்திரை கொடுத்திருக்கேன்.அவங்க இப்ப நல்லா
தூங்கணும்.போன் வந்தாலோ காலிங்பெல் அடிச்சாலோ நீங்களே பாருங்க" என்று கூறி
விசாலத்திடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்."போற வழியில சம்பந்திவீட்டுக்கு
அத்தைகளோட போயி நாளைக்கு பூஜைக்கு அழைச்சுடு" என்ற மாமியாரின் வார்த்தைகளுக்கு
தலையசைக்க டிரைவர் வண்டியை கிளப்பினார்.
" பாவனாவின் மாமனார் இந்த ஊரில பிரபலமான டாத்டர்.எங்க குடும்ப
மருத்துவர். கொஞ்சநாள் முன்பு அத்தைக்கு ரொம்ப உடல்நலம் மோசமானபோது அவர் தான்
கூடுதல் அக்கறை எடுத்து நிலைமையை சரிசெய்தார். அப்பப்ப வீட்டுக்கே வந்தும்
பார்த்ததில் அவருக்கு நம்ம குடும்பத்தை, முக்கியமா பாவனாவை ரொம்ப பிடிச்சுப் போயி அவர்
மகன் நரேனுக்கு பெண் கேட்டார். பாவனா போல அவரும் ஒரு பிரபல நிறுவனத்தில் முதன்மை
இன்ஞினியர்." சௌமியா கூறிமுடிக்கவும் வண்டி ஒரு பெரிய பங்களாவின் முன் வந்து
நிற்கவும் சரியாக இருந்தது.
"அண்ணி பெரிய இடமாகத்தான்
பிடிச்சிருக்காங்க"முணுமுணுக்கும் கமலாவிற்கு, மகன் மக ரெண்டுமே
தங்க ஜோடியை தாங்களே பிடிச்சிருக்காங்க,ஆனா கொடுக்கற விளக்கம் வேற மாதிரியில்ல இருக்கு?கிண்டலான
கல்யாணியின் பதில் சௌமியாவின் காதில் தெளிவாக விழுந்தாலும் பொருட்படுத்தாமல்
வாயிலில் வந்து வரவேற்கும் டாக்டர் கைலாசம் நரேன்
ஆகியோரைப் பார்த்து புன்னகை பூத்தவளாய் அத்தைகளோடு வீட்டிற்குள்
நுழைந்தாள்.
பின் தொடர்ந்து
வந்த நரேனின் அம்மா லட்சுமி அவர்களை வரவேற்று அமரச்செய்து பரஸ்பர அறிமுகத்துக்குப்
பின் "என்ன குடிக்கிறீங்க காபியா ஜூஸா?" என்றாள். "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்
இப்பத்தான் வயிறு முட்ட சாப்பிட்டுட்டு வரோம்" என்ற மறுப்பையும் மீறி லட்சுமி
தந்த ஜூஸை பருகும் போது "சௌமி, உங்க அப்பா அம்மா
வந்தாச்சா" என்று கேட்டாள் லட்சுமி.
"அவங்க வர இன்னும்
நாலுநாளிருக்கு. நீங்களும் உங்க மாமியார் இறந்து ஒரு வருடம் ஆகலைன்னு பூஜை இலையில
உட்கார இயலாதுன்னு ஆயிடுச்சு.என் அம்மா, அக்கா குழந்தையோட
வரதால அவங்க வருவதும் கொஞ்சம் தாமதமாகுது. ஒரு சம்பந்தி கூட புஜையைலயில உட்கார
முடியாமபோச்சேன்னு என் அத்தைக்கு கொஞ்சம் குறைதான்" என்றாள் சௌமியா.
"இலையில உட்காரட்டாலும் நாங்க பூஜையில கலந்துக்க வரதானே போறோம். லட்சுமி, நாளைக்கு நரேன்
நம்மோட வரானா?" என்று கைலாசம் கேட்க "பாவனாவைப் பாக்கற சந்தர்பம் எப்ப
வரும்னு காத்துக்கிட்டு இருக்கிற அவன் நமக்கு முன்ன தயார் ஆயிடுவான் பாருங்க"
லட்சுமியின் பதிலால் எழுந்த நகைப்பொலியைத் தொடர்ந்து மூவரும் விடைபொற்றுக்கொண்டு கிளம்ப கூடவே வந்த
கைலாசம் "சௌமி, அம்மா மருந்தெல்லாம் வேளை தவறாம சாப்பிடறாங்களான்னு கவனமா
பாத்துக்க" என்ற எச்சரிக்கையுடன் கையசக்க வண்டி கிளம்பியது.
மறு நாள் காலை மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் விழாக் கோலம்
பூண்டிருந்த வீட்டைச் சுற்றி வந்த விசாலம் அமைதியாக கணவனின் படத்திற்கெதிரே
கண்மூடி அமர்ந்துவிட்டாள். சமையலறையில் மாமி உதவிக்கு ஒரு பெண்மணியுடன் பம்பரமாகச்
சுழன்று வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தாலும் "பூஜை நேரம் நெருங்குது.
எல்லாம் தயாரா" என்ற கல்யாணியின் அதிகாரக் குரலால் மேலும் விரைந்து செயல்படத்
துவங்கினாள் .குறித்த நேரத்தில் பூஜை துவங்க அதே சமயம் நரேனும் பெற்றோர்களுடன்
வந்து சேர்ந்தான். "சௌமி, உன் கையாலதான் எல்லாம் செய்யணும்.பரிமாறுவதும் நீயும்
பாவனாவுமாசெய்யுங்க" மறைமுகமாக இதில் பங்குபெற விசாலம் தகுதியற்றவள் என்பதை
சொல்லாமல் சொல்வது புரிந்தாலும் யாரும் பதில் பேசாமல் விருந்து பரிமாறப்பட்டு
சுமங்கலிப் படையல் நடந்து முடிந்தது. கை கழுவிக்கொண்டு வந்த கல்யாணி, "இப்ப
எங்களையெல்லாம் உட்கார்த்தித் தாம்பூல
மரியாதைசெய்து, எங்களைத் திருப்திபடுத்தி, நாலு பேருமா எங்களை வணங்கிய பிறகு தான் நீங்க
சாப்பிடணும். தாம்பூலத்தட்டு எல்லாம் நான் சொன்னமாதிரி தயாரா வைச்சிருக்கில்ல"? என்றாள்.
"சரி அத்தை ஆனா அதுக்கு முன்னாடி நாங்க நாலுபேருமா செய்யப் போற ஒரு முக்கிய
வேலை இருக்கு." சொல்லியபடியே சௌமியா மாமியாரை, மாமனாரின் புகைப்படத்தை ஒட்டி ஒரு நாற்காலியில்
அமரச்செய்தாள்."என்னம்மா இதெல்லாம் "
என்று மறுப்புக் கூற வந்த அம்மாவின் கைபிடித்த பாவனா "இவ்வளவு நேரம் மௌனமாயிருந்த மாதிரி இப்பவும் அமைதியா
இரும்மா" என்றாள் புன்னகையுடன்.
"வாழவேண்டிய வயசுல
எல்லாத்தையும் இழந்த எங்க அம்மா மனசாலயும் தோற்றத்துலயும் இப்ப வரைக்கும்
ஆடம்பரமான உடைகளோ நகைகளோ பொடறதேயில்லை. நாங்க வேலைக்குப்போக ஆரம்பிச்ச பிறகும்
ஒவ்வொருமுறை நாங்க அவங்களுக்கு ஏதாவது வாங்க முயற்சி செஞ்சாலும் "வீடுகட்டி
முடி. பாவனா கல்யாணத்துக்கு பணம் சேருன்னு" எதாவது சொல்லி
தடுத்துடுவாங்க" தொடர்து பேசமுடியாமல் சுதாகர் நிறுத்த,"அண்ணிதான்
இதுக்குத் தீர்வா ஒரு திட்டம் போட்டாங்க" என்று நிறுத்தினாள்.
"முன்னோர்களையும்
நம்ம முன்னேற்றத்துக்கு பாடுபட்ட மூத்தவங்களையும் வணங்கிக் கொண்டாடற இந்த தாளில்
எங்க முதல் மரியாதைக்குரியவங்க இவங்களைத் தவிர யாராயிருக்கும?" பேசியபடியே
சௌமியா கணவன் அருகில் நிற்க விசாலத்தின் நலி்ந்த கைபற்றி ஒரு ஜோடி
வலையல்தளைஅணிவிக்க தொடர்ந்த வந்த நரேன் பாவனா "வைரம் போன்ற மனவலிமையும்
தங்கமான மனசும் கொண்ட எங்க அம்மாவுக்கு எங்க ரெண்டு பேரோட அன்பானசின்னப் பரிசு
இந்தவைர டாலருக்கு நடுவில எங்க அப்பாவோட படத்தைப் போட்டிருக்க8தால அவங்க இதை
கழட்டவே மாட்டாங்க" பேசியபடியே பாவனா ஒரு செயினை தாயின் கழுத்தில்
பூட்டினாள்.
"ஒரு தாயோட கடமையை
தான் நா செஞ்சிருக்கேன்"இதெல்லாம் எதுக்குப்பா" நெகிழும் தாயின் கால்களில் நால்வரும் விழுந்து நமஸ்கரிக்க
தொடர்ந்து வந்த கல்யாணியும் கமலாவும் அவள் கால்களில் விழுந்தனர்."எங்களை
மன்னிச்சுடுங்க அண்ணி, உங்க கஷ்ட நேரத்துல கை கொடுக்காம சுயநலமிகளா ஒதுங்கி நின்னு
வேடிக்கை பார்த்த எங்க கிட்ட நீங்க காட்டற உங்க பெருந்தன்மையும் இளையவங்களானாலும் உங்க வாரிசுகளோட பண்பட்ட
செயல்களும் பத்தாம் பசலிகளான எங்க கண்களைத் திறந்து மனசையும் சுத்தமாக்கிடுச்சு.
சௌமி கண்ணு, அந்த தாம்பூலத் தட்டைகொண்டுவந்து எங்க அண்ணி கைல கொடு. அவங்க டகையால வாங்கிக்கறதுதான் எங்களுக்குப்
பெருமை." ... கல்யாணி சொல்லிய படியே கண்கள் பனிக்க தாம்பூலத் தட்டை
விசாலம் நாத்தனார்களிடம் நீட்ட சபேசனின்
புகைப்படத்திலிருந்து பூ ஒன்று அந்தத் தட்டில் விழுந்தது.
----------------
Comments
Post a Comment