வாழ நினைத்தால்..... சாந்திநாதன்


வாழ    நினைத்தால்.....
                            
சாந்திநாதன்
                                     
             
               காலை மணி எட்டு இருக்கும் உடலை உருத்தாத இளம் வெய்யிலையும் கூந்தலை அலைக்கழிக்கும் தென்றல் காற்றையும் ஒருசேர ரசித்துக்கொண்டு மிதமானவேகத்தில் மொப்பட்டில் வயக்காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் சுந்தரி.        
               பள்ளி செல்லும் பிஞ்சுகள் பூக்கூட்டம்போல் எதிர்பட  புன்னகையோடு வண்டியை நிறுத்தியவளை  சூழ்ந்துகொண்டு "வணக்கம் டீச்சர்" என்று ஒருசேர கூவ பதில் வணக்கத்தை  கூறினாள். "வீட்டுப்பாடமெல்லாம் முடிச்சீங்களா? பள்ளிக்கூடத்தோட்டமெல்லாம் எப்படியிருக்கு?" தோட்டத்துல "இப்ப நிறைய பூப்பூக்குது. அதை அவங்கவங்க வகுப்புல சாமிபடத்தில வைக்கிறோம். பின்னால இருக்கற தோட்டத்தில குட்டி குட்டியா கத்திரிக்கா வெண்டைக்காயெல்லாம் வருது." உற்சாக குரலில் ஒரு சிறுவன் கூற, "அதோட நிறைய பறவைங்க வருது டீச்சர். கலர்கலரா அழகான பட்டாம்பூச்சிகளும் வந்துட்டேயிருக்கு."கண்கள் விரிய ஒரு சிறமி அபிநயத்தோடு கூற, "அப்படியா  இன்னிக்கு சாயங்காலம் நான் தோட்டம் பார்க்க  வருவேனில்ல அப்ப எனக்கு காட்டுங்க" என்றவள்"அதெல்லாம் சரி தோட்டவேலை மும்மரத்துல  பள்ளிப்பாடத்தை  மறந்துடாதீங்க பரிட்சை நெருங்குதில்லே" .கையில் மதிய உணவு தூக்குச்சட்டியுடன் குழந்தைகளைப் பின்தொடர்ந்து வந்த பெண்களில் ஒருத்தி "அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சுந்தரிம்மா. வீட்டுப்பாடமெல்லாம் முடிக்காம விளையாடக்கூடப் போறதில்லை கருத்தாப் படிக்கறாங்க"முகமெல்லாம் புன்னகை விரியக்கூற, தொடர்ந்த மற்றொருத்தி "ராத்திரி வேலை முடிச்சபிறகு எனக்கும் எம் புருசனுக்கும் எம் பையன் எழுதப்படிக்கச் சொல்லிக் குடுக்கறாம்மா "என்றாள் பெருமிதமாக. "விடிஞ்சு நாங்க கண்முழிக்கறதுக்கு முன்னமே இதுங்க எல்லாம் எழுந்து முகம் கழுவி அவுங்கஅவுங்க வீட்டுப்பக்கமிருக்கிற  மைதானத்துல  கூடி மூர்த்தித்தம்பி சொல்லிக் கொடுக்கற உடற்பயிற்சி செய்யற அழகைப் பாக்கற போது எங்க கண்ணே பட்டுடும் போலிருக்கு ", உணர்வு பொங்க பேசுபவளை இடைமறித்து"கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு குழந்தைங்க மனசு பச்சைமண்ணு மாதிரி, நாம சொல்லறதெல்லாம் உடனே நல்ல பதிஞ்சுடுது". "மொத்தத்துல இந்த ஊர் செஞ்ச புண்ணியம் நீயும் மூர்த்தித்தம்பியும் இங்க குடி வந்தது. சோம்பிக் கிடந்த ஊரை சோலையா மாத்திக்கிட்டு வர அழகை வார்த்தையால சொல்ல முடியுமா? இதுக்கெல்லாம் அச்சாரமா நின்னு உங்களை வழி நடத்துற புண்ணியவதி பெரியம்மாவை நிதம் எங்க குலதெய்வமா நினைச்சுக் கும்பிடறோம்"

            தொடர்ந்து ஓரிரு விநாடிகள் நிலவிய மௌனத்தை கலைக்கும் விதமாக சுந்தரி," இதுக்கெல்லாம் பாதை அமைச்சவங்க பெரியம்மாதான். அவங்க பரந்த மனசும் தயாள குணமும் ரொம்ப உசந்தது. தாயைப்போல மகனும் குணங்கொண்டவரா அமைஞ்சதும், கூடவே எந்த வேலையைக் கையில எடுத்தாலும் சிறப்பா முடிக்கற சாமர்த்தியசாலியா மூர்த்தி இருக்கறதும் நமக்கு கூடுதல் பலமில்லையா?... அவங்க நிழல்ல நிக்கற அநாதையான என் நிலமை தெரிஞ்சும் கேவலமா பாக்காம உங்கள்ல ஒருத்தியா ஏத்துக்கிட்டீங்களே அது எல்லாத்தையும் விட பெரிய விசயமில்லையா? ...சரி பள்ளிக்கூட மணி அடிச்சுடப்போவுது பசங்களை விட்டுட்டு நீங்களும் சங்கத்துக்கு போகணுமில்லே கிளம்புங்க" விடை பெறும்விதமாக வண்டியை கிளப்பியவள்,  "சனிக்கிழமை மதியம் பசங்களை எல்லாம் புத்தகப்பையோட நம்ம வீட்டுக்கு அனுப்பிவைங்க  மதியச் சாப்பாடு  அவங்களுக்கு அங்கதான். புரியாதபாடமெல்லாம் சொல்லித்தரணும் பரிட்சையில சிறப்பா எழுதணுமில்லையா"? வண்டி வேகமெடுத்துச் செல்ல மற்றவர்கள் தங்கள் வழியில் விரைந்தனர்.
          
          வண்டியை வரப்போரம் மரநிழலில் நிறுத்தியவள் மனத்தை நீரில் குளித்த மண்ணின் மணமும் சூல்பிடித்த நெற்கதிர்களிலிருந்து எழுந்த பால்மணமும் பரவசப்படுத்தியது. பம்புசெட்டிலிருந்து பாயும் நீரை வரப்புகளுக்கு சரியானமுறையில் ஒழுங்கு படுத்திக் கொண்டே அருகில் யாருமில்லாத சுதந்திர உணர்வில் குரலெடுத்து ஏதோதிரைப்பாடலைப் பாடிக்கொண்டிருந்த மருதை சுந்தரியைப் பார்த்து சட்டென்று பாடுவதை நிறுத்த."ஏன் என்னைப் பார்த்தவுடன் நிறுத்தீட்டீங்க?  நல்லா பாடறீங்க தொடர்ந்து பாடுங்கண்ணே" ... "அட போம்மா கிண்டல் பண்ணாதீங்க" வெட்கத்தோடு நெளியும் மருதை "இல்லீங்கண்ணே உங்க குரல் நல்லாயிருக்கு. இந்த வருடப் பொங்கல் விழாவில பசங்க  கலை
நிகழ்ச்சியைத் தொடர்ந்து உங்களையும் மேடை ஏத்திடலாம் சரியா"? "அதுக்குள்ளாற நானும் நல்லாப் பாடிப் பழகிடமாட்டேன்?" என்றவன்  "எம் பொஞ்சாதி மீனா வரநேரம் அதுக்குள்ள மதிய சாப்பாட்டுக்கு நம்ம வீ்ட்டுக்கு என்ன காய் தேவைன்னு ஆத்தா சொல்லியிருப்பாங்களே அதுபடி பறிச்சு தயாராவைக்கணும் இல்லைன்னா அவ....." "சொல்லவந்ததை முடிப்பதற்குள் "என்ன சுந்தரிம்மா என் பெயர் அடிபடுது?" செல்லச்சிணுங்கலுடன் அங்கு வந்தாள் மீனா. அதெல்லாம் ஒண்ணுமில்லை அக்கா உங்க கைப்பக்குவத்துல எந்த கறிகாயும் ரொம்ப அருமையா இருக்கு .அதான் அம்மா என்னையேப் பாத்து பொரியலுக்கும் சாம்பாருக்கும் ஏதாச்சும் அனுப்பிட சொன்னாங்க. காலையில கிளம்பி வரதுக்கு முன்ன நம்ம வீட்டுக் கீரையைப் பறிச்சு வச்சிருக்கேன் அதைக் கடஞ்சுடலாம்".... "ஏங்க ,அப்ப கத்திரிக்காய் பொரியலுக்கும் வெண்டைக்காய் குழம்புக்கும் பறிச்சிடுங்க. மூர்த்தித் தம்பி மசாலா போட்டு எண்ணெய் கத்திரிக்காய் செஞ்சா விரும்பி சாப்புடும்."மருதை கூடையோடு நகர கூடவே நடந்த மீனாவைப் பின்தொடர்ந்த சுந்தரி"நீங்க செய்யற எல்லாமே மூர்த்தி ரசிச்சுதான் சாப்பிடறாரு. நேத்து சாப்பிடும்போது மூர்த்தி ,"இந்த அளவுல சாப்பிட்டேன்னா பிரசவத்துக்குப் போயிருக்கற கோமதி திரும்பி வந்து என்னை யாரு இவருன்னுக் கேக்கப் போற அளவுக்கு ஊதிடப் போறேன்னு தோணுதுன்னு சொல்லி் சிரிக்கறாரு" சுந்தரியின் பாராட்டில் முகம் மலரும் மீனாவைப் பார்த்து "இந்தப் பாராட்டுல  முழுசும் உனக்கில்ல தெரிஞ்சுக்க.. இயற்கை உரத்துல விளைஞ்ச இந்த காய்களுக்கே தனி ருசி இருக்குமில்ல"  என்ற மருதை "நேத்து சந்தைக்குக் காய்கொடுக்கப் போனபோது அந்தக் கடைக்காரரு இன்னும் கூடுதல் அளவுல காய் தேவைங்கறாரு..  இதெல்லாம் நம்ம முதலாளிங்க வழிகாட்டல்ல  நாம செய்யற இயற்கை முறை விவசாயத்தோட மகிமை தானே." சொன்னபடியே கூடையை மீனாவிடம் நீட்டியவன், "போதுமில்ல ... போதும் நான் கிளம்பறேன். மதிய  சாப்பாட்டை கூடையில வைச்சிருக்கேன்.நேரத்தோடு சாப்புடுய்யா" என்று கிளம்பினாள். "சுந்தரிம்மா, நான்போய் சந்தைக்கு அனுப்பக் காயெடுக்கறேன். மூர்த்தித் தம்பி கொஞ்ச நேரம் முந்தி போன் செஞ்சு உங்களைக் கேட்டாரு. பக்கத்து நிலச்சொந்தக்காரரோட பேசிட்டாருபோல. அவங்க மகனும்  நமக்கு நிலத்தை விக்க சம்மதம் சொல்லிட்டாராம். இன்னும் கொஞ்ச நேரத்துல தம்பி இங்க வந்து உங்களைக் கூட்டிக்கிட்டு பாங்க் போகணுமாம். பாங்க் வேலையெல்லாம் பார்க்க நமக்கு பொறுமை கிடையாது. அதுக்கெல்லாம் சுந்தரிதான் சரிப்படுவான்னாரு" சொல்லிவிட்டு மருதை நகர, கிடைத்த தனிமையில் சுந்தரியின் மூடிய விழித்திரையில் கடந்தகாலம் திரைப்படமாய் விரியலாயிற்று.

       "டேய், நீ சொல்றதெல்லாம் நிசமா?" அதிர்ச்சி நிறைந்த குரலில் கேட்கும் நண்பனுக்கு மௌனமாக தலையசைத்தவன் ஓசையின்றி அழத்துவங்கினான். சிறிது ஆசுவாசத்திற்குப் பின் "கொஞ்ச நாளாகவே எனக்கு இந்த அவதி இருக்குடா. காலேஜுல பசங்க எம்முதுகுக்குப் பின்னாடி கேலிசெய்யறதெல்லாம் கண்டும் காணதவனா இருந்து கடைசிவருடப் பரீட்சையை நல்லபடியா எழுதி முடிச்சிட்டேன். ரெண்டு நாள் முன்னே வீட்டுல யாருமில்லன்ற நினைப்புல என் தங்கச்சியோட சீலையை போட்டுக்கிட்டு நின்னதை பார்த்த எங்க அண்ணி செஞ்ச கலாட்டால அப்பா ரொம்ப  அதிர்ச்சிஆயிட்டாரு. அண்ணன் வேலையிலிருந்து வந்ததும் இனி நானிருக்கிற வீ்ட்டுல அவங்க இருக்க முடியாதுன்னு சொல்லி அண்ணணோட தனியாப் போக முடிவெடுத்ததும்  அப்பா என்னை வெளியே போகச் சொல்லிட்டாரு. தலைப்பிரசவத்துக்கு வரப் போற மூத்த அக்கா, கலியாணத்துக்கு நிக்கற சின்னவள்ளுன்னு வரப்போற செலவை அதிக வருமானம் இல்லாத அவரு எங்க அண்ணன் தயவில்லாம எப்படிசமாளிப்பாரு? என் அக்கா தங்கச்சியும் அவரோட சேர்ந்து எங்கேயாவது கண்காணாம போன்னு விரட்டியடிச்சாங்க. அம்மாதான் பாவம் இவங்களை எதிர்க்கவும் முடியாம என்னைப் பிரியவும் இயலாம ஒரே அழுகை. இப்படி ஒரு அவமானசின்னமா உயிர் வாழறதுக்கு பதிலா செத்திடலாம்னு தோணுது.  எனக்குன்னு இருக்கற ஒரே நண்பன் நீதான். அதான் உன்னை ஒருவாட்டி கடைசியாப் பாக்கணும்னு தோணிச்சு" திக்கித் திணறி ராமு பேசிமுடிக்க "ஏண்டா நீ என்ன பைத்தியமா? சாகற அளவுக்கு இப்ப என்ன ஆயிடிச்சு? முதல்ல உள்ள வா சாப்பிடலாம். அம்மா ஒரு வேலையா ஊருக்குப் போயிருக்காங்க. எனக்கு தெரிஞ்சபடி சமைச்சிருக்கேன்" வற்புறுத்தி சாப்பிட வைத்தவன், "நம்ம  நடேச வாத்தியார் ஊருல விவரமானவரு.கெட்டிக்கார பையன்னு உம்மேல அவருக்கு்த் தனிபிரியம். அவரைப்போய் பாத்தா நம்ம மேற்கொண்டு என்ன செய்யலாம்னு ஒரு தெளிவு கிடைக்கும். "இருவரும் கிளம்பி வெளிவரும் சமயம் மூர்த்தியின் கைபேசி ஒலிக்க,"சொல்லும்மா" என்றவனின் முகம் புன்னகையால் விரிய நண்பனை பக்கத்தில் இழுத்தவாறே ஸ்பீக்கரை உயிர்பித்தான். "கடவுள் அருளும் நம்ம ஊரில இருக்கற சில நல்ல மனுசங்க தயவும் கூடி கேசு நமக்கு சாதகமாத் தீர்ப்பாயிடிச்சுமூர்த்தி. நம்மளை ஏமாத்தி நிலத்தைப் புடுங்க உறவுக் கூட்டம் முழுமூச்சா வேலை செஞ்சாலும் உன் அப்பாவோட நல்ல மனசு நண்பர்கள் ஒத்துழைப்புல இன்னிக்கு நாம ஜெயிச்சிருக்கோம். நிராதரவா நின்ன நம்ம நிலமை புரிஞ்சு பணத்தை மட்டும் பெரிசா நினைக்காம நியாயத்தை உசத்தியா எண்ணி வாதாடிய வக்கீலும் அமைஞ்சது தெய்வஅருளுன்னு தான் தோணுது." .. "கேக்கவே ரொம்ப சந்தோஷமாஇருக்கும்மா.இப்ப நான் கிளம்பிஅங்க வரணுமா"? இல்லராசா நான் காலை பஸ்ஸில கிளம்பி அங்க வரேன்.இன்னும் இரண்டு வாரத்துலபத்திரப்பதிவு செஞ்சிடலாம்னு சொல்றாங்க. அதுக்கு நீ வரணும். இப்ப நம்மகிட்ட இருக்கற சொல்ப நகைநட்டெல்லாம் வித்து வக்கீலுக்கும் மத்த செலவுக்கும் ஏற்பாடு செய்யணும்.மீதித் தொகைக்கு நம்ப பூவராகன் ஐயா உதவறதா சொல்றாரு. கொஞ்சங்கொஞ்சமா அவரு பணத்தைத் திருப்பினா போதுங்கறாரு." "சரிம்மா ஜாக்கிரதையா வாங்க." போனை துண்டித்தவன் "ஏறு வண்டியில. இப்பவாத்தியார் வீட்டில தானிருப்பாரு. இந்த வழக்கு போட அம்மாக்கு ஆலோசனை சொல்லி தைரியம் கொடுத்ததே அவருதான்.இந்த நல்ல விஷயத்தை சொல்லிட்டு அப்படியே உன்னைப் பத்தியும் பேசிடுவோம்." நண்பன் கையிலிருந்த பையை வாங்கி வீட்டிற்குள் வைக்க,தயங்கிய ராமு "உங்க அம்மா என் வரவை எப்படி எடுத்தப்பாங்கன்னு தெரியாம நான் இங்க தங்கறது....." "எங்க அம்மாவைப் பத்தி எனக்குத் தெரியும்.அவங்க படிப்பு இல்லாதவங்களா இருந்தாலும் பண்பும் கனிவும் நிறைஞ்சவங்க. நீ நல்ல படிக்கறதோட உன்னோட பணிவுஅடக்கம் எல்லாத்தையும் ரொம்ப பாராட்டுவாங்க. இந்த மாதிரி பிள்ளையைப் பெத்தவ புண்ணியவதிபாங்க. நாம ரெண்டு பேரும் ஒண்ணா பிளஸ் டூ படிக்கும் போது நீ விடியவிடிய எனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து என்னை பாஸ் செய்ய வச்சதை இப்பவும் சொல்வாங்க உன் அருமை யாருக்கு தெரியுதோ இல்லையோ அவங்களுக்கு நல்லா தெரியும் கிளம்பு. "

பையிலிருந்து ஒரு கவரை எடுத்த ராமு "இதில  கொஞ்சம் பணம் இருக்குடா. லீவு நாளெல்லாம் நான் ஏதாச்சும் வேலைக்குப் போயி கிடைக்கற பணத்தை அம்மா கிட்ட கொடுத்து அவங்களை ஏதாச்சும் வாங்கிக்கச் சொல்வேன்.அவங்க அதை அப்படியே வச்சிருந்து கூட அவங்க கையில இருந்த சிறுவாட்டுப் பணத்தையும் சேர்த்து ரகசியமா இருபதாயிரம் கொடுத்தாங்க. "நீ கெட்டிக்காரன் எப்படியும் சுய உழைப்பில முன்னுக்கு வந்துடுவ. அதுவரைக்கும் செலவுக்கு இருக்கட்டும்னு அழுதுகிட்டே இதைக்கொடுத்தாங்க". விம்மிய படியே நண்பன் தரும் பணக்கவரை  வாங்கி வைத்தவன் "உங்க அம்மா வார்த்தை பலிக்கப் போவுது பாரு. வண்டியில ஏறு." சொன்னபடியே அடுத்த பத்தாவது நிமிடம் நடேச வாத்தியார் வீட்டிற்குள் இருவரும் நுழைய, விரியும் புன்னகையுடன்,"உயிர் தோழர்கள் இருவரும் ஒண்ணாசேர்ந்து  எங்க இந்த பக்கம்?" என வரவேற்றார்.அவர்.

             கையில் இருந்த இனிப்பு, பழங்கள் பையை அவரிடம் கொடுத்து வணங்கிய மூர்த்தி"சார், உங்க ஆலோசனையும் ஆசியும் துணை நின்னு கேஸ்ல  எங்க பக்கம் ஜெயிச்சிடுச்சு. அம்மா முதல்ல உங்களுக்கு இதைத் தெரிவிக்கச் சொன்னாங்க"... "ரொம்ப சந்தோஷம்பா. நீ ஏதோ ஸ்கார்ப் பிசினஸ் செய்யறதா அம்மா சொன்னாங்க.அது நல்லாப் போவுதா?" "நல்லபடியாதான் போவுது. ஆனா அம்மாவுக்கு இந்த வேலை சுத்தமா பிடிக்கலை. நமக்கும் படிப்புக்கும் எட்டாத தூரம்னு ஆனபிறகு ஏதோ உழைச்சுப் பிழைக்கேறேன்னு அவங்க வாய்விட்டு ஏதும் சொல்றதில்லை."  "ஏமாத்தாம திருட்டுப் பொய் இல்லாம செய்யற தொழில் எதுவும் கேவலமில்லைன்னு அவங்களுக்கும் தெரியாமலா இருக்கு்ம்? இப்பதான் நிலம் கையில வந்திடிச்சே. இனி அவங்க எண்ணப்படி நடக்கவேண்டியதுதான்."  பேசிக் கொண்டே திரும்பியவர்," என்னப்பா ராமு பரிட்சையெல்லாம் நல்லபடியா முடிச்சிருப்பியே. முதல் வகுப்பு நிச்சயம் தானே? மேற்கொண்டு என்ன பிளான் வச்சிருக்கே?" தலை கவிழ்ந்து மௌனமாக கண்ணீர் வடிப்பவனை புரியாமல் பார்க்கும் வாத்தியாரிடம் மூர்த்தி விபரங்களை ஒருவாறு கூற, சில நொடிகள் ஆழ்ந்த மௌனத்தில் கண்மூடி இருந்தவர் பேசத் துவங்கினார்.

        "கேக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஆனா இப்பல்லாம் ஜனங்க மத்தியில இதைப்  பத்தி நேர்மறையான புரிந்துணர்வு இருக்கு. டவுன்ல எனக்குத் தெரிஞ்ச டாக்டரிடம் நான் பேசி இது தொடர்பான மருத்துவத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்.மனசை தளறவிடாம இரு.உறவைவிட நட்புதான் பெரிசுங்கறதுக்குப் பொருத்தமா உனக்கு மூர்த்தி இருக்கும்போது வேண்டாத எதிர்மறை எண்ணகளுக்குப் புத்தியில இடம்கொடுக்காதே."

             வாத்தியார் சொன்னது போலவே அம்மருத்துவர் செய்த அறுவைசிகிச்சையில் ராமு ஒரு பெண்ணாக மாறினான். சில நாட்கள் அவர் ஏற்பாட்டில் அவள் அங்கு தங்கி உடல் ரீதியாகவும் மனமேம்பாட்டிற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த சமயம் மூர்த்தி தாயுடன் ஊருக்கு சென்று பத்திரப் பதிவு வேலைகளை முடித்துக் கொண்டு ஊரில் குடித்தனத்திற்கு வீடும் பார்த்து வைத்துவிட்டான்.  உறுமாறிய ராமுவைப் பார்த்த மூர்த்தியின் அம்மா,"எனக்குப் பெட்டபிள்ளை இல்லியேன்னு மனசுல ஒரு ஏக்கம் இருந்துச்சு. இனி நீதான் என் மக சுந்தரின்னு" கட்டித்தழுவிக் கொள்ள ராமு தன் கடந்த கால கசப்புகளை மறக்க அதுவே ஆரம்பப்பள்ளியாக அமைந்தது.

            அம்மாவின் ஆசைப்படி வாத்தியாரிடம் பிரியாவிடைப் பெற்றுக் கொண்டு ஊருக்கு வந்தவர்கள் தரிசுநிலத்தையும் பாழைடைந்த கிணற்றையும் கண்டு விவசாயத்தைப் பற்றி ஏதும் தெரியாத நம்மால் என்னமுடியும் என மலைத்தனர். "உங்க அப்பா காலத்துல பொன் விளைஞ்ச பூமிடா இது.கடும் கோடையிலும் வத்தாத பாசனக் கிணறை சீர் செஞ்சு நிலத்தையும் பண்படுத்திடலாம்.இன்னிக்கு பாடுபட உடல்ரீதியா என்னால முடியாட்டாலும் அந்த நாளில நானும் நிலத்துல இறங்கி உழைச்சிருக்கேனில்ல அந்ந அனுபவத்தை உங்களுக்கு ஆலோசனையா எடுத்துச் சொல்லி பாடுபட்டுப் பார்க்கலாமே. பூமித்தாய் கருணையில உங்க உழைப்பு நிசசயமா வீண் போகாது" தாயின் வார்த்தைகள் சத்திய வாக்கானது.ஆரம்பத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள், சுந்தரியின் நிலைப் பார்த்து சிலரின்   ஏளனப் பேச்சுகள் போன்றவை அவர்களை நிலை தடுமாற வைத்தது. பகல் நேரமெல்லாம் மூர்த்தியோடு நிலத்தில் ஆண்பிள்ளை போல் பாடுபட்ட சுந்தரி மாலைநேர்களில் தன் கனிவான பேச்சால் ஊர்ப்பெண்களையும் அன்பு கலந்த போதனைகளால் குழந்தைகளையும் வசியப் படுத்திவிட ஊரில் பலரும் இவர்களின் முயற்ச்சிக்கு உதவ முன் வந்தனர். மூர்த்தியின் நேர்மையும் விடாத முயற்சியும் வங்கிக் கடனுக்கும் வழிகாட்டியது.இதற்கிடையில் சுந்தரியை இயற்கை முறை வேளாண்மைப் பற்றி அறிய நம்மாழ்வா் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டு அந்தமுறைகளைப் பின்பற்றியதில் மகசூல் படிப்படியாக தரத்திலும் அளவிலும் உயரத்துவங்கியது. கூடவே அந்த ஊர்ப் பள்ளியை சீரமைப்பதிலும்  வீண் சண்டை வம்பு என்று நேரம் கடத்திய பெண்களை ஒருங்கிணைத்து அவர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வகுப்பு எடுத்து சுந்தரி பாடுபட மூர்த்தி தவறான பழக்கங்களால் சீரழியும் ஆண்களுக்கு இதமாகவும் மிரட்டியும் எச்சரித்து பலரை உழைப்பாளியாக உறுமாற்றினான். மொத்தத்தில் கடந்த ஆறுஆண்டுகால உழைப்பு  அந்தத் தாயையும் பிள்ளைகளையும் ஊரின் பெருமதிப்புக்கும் அன்புக்கும் உரியவர்களாக ஆக்கிவிட்டது.

           இவர்களின் வாழ்க்கையின் இனிமையை அதிகரிப்பது போல கடந்த வருடம் மூர்த்தியின் கரம்பிடித்தாள் கோமதி. கணவனின் மனதறிந்து நடப்பதில் நல்மனையாளாக  மாமியின் மதிப்பறிந்து மரியாதை காட்டும் மருமகளாக சுந்தரிக்கு உற்ற தோழியாக  அவள் அமைந்ததில் வீடே சொர்க்கமாகி விட்டது. இந்த இனிய இல்லறத்துக்கு மேலும் இனிப்பூட்ட கோமதி தாய்மை அடைந்தாள்.மகப்பேறுக்கு விருப்பமின்றி பிறந்த வீட்டிற்கு சென்றிருப்பவள் தினம் மூர்த்தியோடு பேசாவிட்டாலும் சுந்தரியோடு பேசித் தன்னைப் பற்றிய விபரங்களைக்கூறி அவர்கள் நலனைப்பற்றியும் அறிந்து கொள்வாள்.

         "என்ன ஒக்காந்துக்கிட்டே உறக்கமா?" முதுகில் தட்டிக் குரல் கொடுக்கு்ம் மூர்த்தியின் குரலால் கனவிலிருந்து விழிப்பதுபோல் நிகழ்வுலகுக்கு திரும்பினாள் சுந்தரி. "கோமதிக்கு இன்னும் ஒருவாரம் பத்துநாளுக்குள்ளே பிரசவம் ஆகலாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்களாம். நம்ப அம்மா பிரசவநேரத்துல அவகூட இருக்கணும்னு கோமு பிரியப்படுது. இன்னும் ரண்டுமூணு நாளில அவங்க கிளம்பறதா இருக்காங்க. இப்ப நாம பாங்குக்குப் போயி அம்மா கிளம்பறதுக்குள்ள பக்கத்து நிலப் பதிவுக்கு லோன் ஏற்பாடு ஆகுமான்னுப் பாக்கணும்." "அதெல்லாம் கிடைச்சுடும். நான் அது சம்பந்தமா தயாரிச்சு வைச்ச பேப்பர் எல்லாம் எடுத்து வந்திருக்கே இல்லே" என்று கேட்டபடியே சுந்தரி உடன் நடக்க, வண்டியை நெருங்கும் மூர்த்தியின் கைபேசியில் ஒரு புது எண்ணிலிருந்து  அழைப்பு..., "யாரு முர்த்தியா? நான் ராமுவோடஅம்மா பேசறேன்." அருகிலிருந்த சுந்தரியும் கேட்கும் படி ஸ்பீக்கரை உயிர்பித்து "சொல்லுங்கம்மா நல்லாயிருக்கீங்களா" என்றான்.


             "பெத்த மகனுக்கு செஞ்ச கொடுமைக்கு நாங்க எப்படிப்பா நல்லாயிருக்க முடியும்? இவரு உடம்பு ரொம்ப முடியாம  இருக்காரு. இவரு சீக்காளியா  ஆனதில மருமக போதனைக் கேட்டு முத்தவன் தனியாப் போயிட்டான். கட்டிக் கொடுத்த மகளுகளும் எங்களை வந்துப் பார்க்கறது கூட இல்லை. ராமுவை விரட்டின பாவந்தான் நம்மளுடைய இந்த நிலைமைக்குக் காரணம் கடைசியா எனக்கு அவனை ஒரு தபா பார்க்கணும்னு இவரு ஓயாம புலம்பறாரு. அதான் நம்ப வாத்தியாரைப் பார்த்துக் கேட்டதுல அவன் உன்கூட இருக்கறது தெரிஞ்சுது....." தொடர்ந்து பேச முடியாமல் அழ,"அம்மா, ராமுவைப் பார்க்கறது மட்டுமில்லை இனிமே நீங்க அவன் கூடவே இருக்கப் போறீங்க. அப்பாவுக்கு இங்க வந்தாலே எல்லா சீக்கும் சரியாயிடும் பாருங்க. இன்னும் ரெண்டு நாளில இதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிட்டு இதே நம்பரில் உங்களைக் கூப்பிடுவேன் கிளம்பி எங்களோட வரத்தயாராயிருங்க மத்தவிபரம் அப்பறம் பேசலாம்"  இணைப்பைத் துண்டித்தவன்,"என்ன திகைச்சு நிக்கறே? பெத்தவங்களுக்கு ஒன்னோட அருமையை கடவுள் எப்படி புரியவச்சுட்டாரு பாத்தியா?" சொன்னபடியே வண்டியைக் கிளப்ப, மனமெல்லாம் பரவிய நிம்மதிஉணர்வோடு பின்னிருக்கையில் அமர்ந்தாள் சுந்தரி என்னும் சுந்தர்ராமன்.

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu