கண்ணால் கண்டதும் ....... -சாந்திநாதன்


                                                              கண்ணால்  கண்டதும் .......
                                                            -சாந்திநாதன்

                 "வசந்தி, என்ன வாசல் லைட் எரியலையே ராமு சாருக்கு போன் போட்டு சொன்னியா இல்லையா?" அலுவலகத்திலிருந்து வந்து காலணிகளைகழட்டிக் கொண்டே கேட்கும் கணவனை  நோக்கி சலிப்பான குரலில், சமையல் அறை குழாயில் தண்ணீர் லீக் ஆயிண்டேயிருக்கு, குழந்தைங்க அறை ஃபான்  சரியா ஓடாம சத்தம் போடறது. உங்களை அநாவசியமா தொல்லை பண்ண வேண்டாம்னு நானும் நாலு நாளா ராமு மாமாவுக்கு போன் செய்யறேன். இரண்டு தடவை அவர் மனைவி தான் எடுத்து" அவர் தூங்கறார்னு" சொல்லி உடனே கட் பண்றா. காலை பத்து மணிக்கு என்ன தூக்கமோதெரியலை. மத்தியானத்துக்கு மேல பண்ணினா போன் சுவிட்ச் ஆப்னு வரது" என்றாள்.

           "உடம்பு சரியில்லையோ என்னமோ, நாளைக்கு நானே அவர் கூட பேசறேன். இந்த வீட்டிற்கு வந்த புதுசில அப்பா வாக்கிங் போய் கீழே விழுந்த போது தவி்ச்சு நின்ன அம்மாவையும் அப்பாவையும் ஆட்டோவில் ஏத்தி பின்னாடியே தன் ஸ்கூட்டரில் வீடு வரை கொண்டு விட்டுட்டுப்போன அன்னையிலிருந்து இப்ப வரைக்கும் நாம எப்ப கூப்பிட்டாலும் கரெக்டா வந்து வேலையை கச்சிதமா முடிச்சுக்கொடுத்துண்டு இருக்கார். நீயும் குழந்தைகளும் தனியா இருக்கும் போது புது ஆளெல்லாம் கூப்பிடறது ரிஸ்க்.சின்னச்சின்ன வேலைக்கெல்லாம் நம்பகமான ஆள் கிடைக்கிறதும் சிரமம்" சொல்லியவாறே சாப்பிட அமர்ந்தான் சீனிவாசன்.
"நானென்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு படபடக்கறீங்க? எனக்கும் அவர் அருமை தெரியாமலில்லை" சொன்னபடியே சாப்பாட்டு மேசையை சுத்தம் செய்தவள் தன் அபிமான சீரியலை பார்க்கத் தொலைகாட்சியை உயிர்பித்தாள்.                  
                  முதல் நாள் சொன்னது போல் மறுநாள் காலை ஆபீஸ் கிளம்பும் முன்னும் அங்கு சென்று வேலையைத் துவங்கும் முன்னும் பலமுறை ராமுவை தொடர்பு கொள்ள முயன்றும் இயலாத நிலையில் தன் பணிகளைப் பார்க்கத் துவங்கிய சீனிவாசன் வேலை மும்முரத்தில் அதை மறந்துவிட்டான்.
            
         மாலை வீட்டிற்குள் நுழைந்தவன் போர்ட்டிகோவில் எரியும் விளக்கைப் பார்த்து ஆசுவாச மூச்சை விட்டவனாய், "என்னம்மா சார் வந்து வேலையெல்லாம் பார்த்திருக்கார் போலிருக்கே" என்றான்.  "ஆமாம் வந்தார். வரும்போதே மணி பதினொண்ணு இருக்கும். கலைஞ்ச தலையும் சிவந்த கண்ணுமா ஆளே அடையாளம் தெரியாத மாதிரியிருக்கார். காபி வேணுமான்னு கேட்டதுக்கு பதிலா வேண்டாம்னு தலையாட்டியவர் மளமளன்னு குழாய் வேலைகளைப் பார்த்தார். நாலு மணிவாக்கில் அதை முடிச்சவர்,"எனக்கு நாழியாறது எலெக்டிரிக் வேலையெல்லாம் நாளைக்குதான்" அப்படீன்னார். கூடவே "இன்னி வேலைக்கு பேமெண்ட் கொடுத்துடுங்கன்னு தொகையை கேட்டு வாங்கிண்டார்.அப்ப ஸ்கூல் விட்டு வந்த ரஞ்சித், ரம்யா ஹலோ சொன்னதை கூட கவனிக்காத மாதிரி வண்டிய கிளப்பிண்டு வேகமா போயிட்டார். இதையெல்லாம் பார்க்கும் போது அவருக்கு எதாவது வேண்டாத பழக்கம் வந்திருக்குமோன்னு தோண்றது".மூச்சு விடாமல் பேசுபவளை முறைத்தவன்,"போதும். சீரியல் பார்த்துப் பார்த்து உனக்கு கற்பனை கொடி கட்டிபறக்கறது போல. முதல்ல குடிக்க கொஞ்சம் தண்ணி கொடு" என்றான் சீனிவாசன் வெறுப்போடு. மனைவியின் வார்த்தைகளை நம்பாத மாதிரி பேசினாலும் சீனிவாசனுக்கு மனதில் "வசந்தி எல்லாவற்றையும் பெரிதுபடுத்திச் சொல்வாளே தவிர இல்லாததை சொல்லமாட்டாள் "என்பது தெரிந்துதானிருந்தது.ஞாயிறுக் கிழமை அவரை நேரில் சென்று பார்த்துவிடவேண்டும் என்று முடிவெடுத்தான்.

 சனிக்கிழமை வசந்தி குழந்தைகளுடன் ஷாப்பிங் சென்றுவிட்டு இரவு எட்டு மணிவாக்கில் திரும்பி வரும் போது சிக்னலுக்கு கார் நிற்கும் போது எதேச்சையாக எதிர் புறம் பார்க்க அங்கிருந்த ஒரு வணிக வளாகத்தில் இருந்த பார்கடை வாசலில் இருநபர்களோடு பேசிக்கொண்டு நிற்கும் ராமுவைப் பார்த்த சீனிவாசன் திடுக்கிட்டான். மற்றமூவரும் அவரைப் பார்க்கும் முன்  வண்டியை கிளப்பியவன் "ஐம்பது வயதுக்கு மேல் மனிதருக்கு புத்தி இப்படியா போகவேண்டும்?திருமணவயதில் பெண்ணை வைத்துக்கொண்டு இதென்ன புதுப் பழக்கம்? நாளைக்கு அவரைக் கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டும் " எனத் தீர்மானித்தான். 


மறுநாள் காலை ராமுவின் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன் அவர் வண்டி நிறுத்தியிருப்பதைக் கண்டு அவர் வீட்டில் இருப்பதை புரிந்து கொண்டு வாயிற்கதவை தட்டினான்.  சிறிது நேரந்தில் அவர் மனைவி கதவைத்திறந்து ஒரு நிமிட தயக்கத்துக்குப் பின் "வாங்கோ" என வரவேற்று ஹாலில் அமரவைத்தாள். அங்கே படித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம்       "என்ன சுதா பரிட்சை நெருங்கறது போலிருக்கே?" "ஆமாம் இது ஃபனல் இயர் கொஞ்சம் பயமா இருக்கு " நான் போய் அப்பாவை எழுப்பிட்டு வரேன்". என்றபடியே சுதா உள்ளே நகர "மனுசனுக்கு மணி பத்து ஆகியும் பொழுது விடியலை போலிருக்கு". மனதில் பொருமிக் கொண்டே திரும்பியவன் உள்ளிருந்து "வாங்க சார் சொன்ன மாதிரி உங்க வீட்டுக்கு மறுநாள் வர முடியலை. நாளைக்கு கண்டிப்பா வந்து வேலையை முடிச்சுக் கொடுத்துடறேன்" சொன்னபடியே அருகில் அமரும் ராமுவைப் பார்த்து அதிர்ந்தான்.
          
                இருவருக்கும் காபி கொண்டு வந்த அவர் மனைவியிடம் "என்னாச்சு இவருக்கு ஆளே உருத்தெரியாமல் இருக்கார்?  நீங்களும் ரொம்ப இளைச்சுப் போயிருக்கீங்க" உடம்புக்கு ஏதாவது முடியலையா" மனைவியை பதில் சொல்லவிடாமல் "உடம்பெல்லாம் நல்லாத்தானிருக்கு  கொஞ்சம்அலைச்சல் ஜாஸ்தி அவ்வளவு தான். உங்க அப்பா அம்மா எப்படியிருக்கா? தம்பி வீட்டிலிருந்து எப்ப வரா?  காபி ஆறிப் போறது குடிங்க" இருவரும் காபி குடித்து முடிக்கும் வரை நிலவிய மௌனத்தை கலைத்தவனாய் "அப்படி என்ன சார் அலைச்சல்? ஏதாவது பெரிய காண்ட்ராக்ட் கிடைச்சிருக்கா?"  என்னை நம்பி எவன் சார் பெரிய வேலையெல்லாம் தருவான்?" விரக்தியாக பதில் கொடுத்தவர் கண நேர தயக்கத்துக்குப் பின் "உங்க கிட்ட சொல்றதுக்கென்ன எனக்கு மூத்தது ஒரு பையன். நம்ப மாதிரியில்லாம படிச்சு உயர்ந்த நிலைக்கு அவன் வரணும்னு ஹாஸ்டலோடு இருக்கற பெரிய பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்க வைச்சேன். நல்லாபடிச்சு எம்.சி.ஏ. முடிச்சான். வேலையும் நல்ல படியாகிடைச்சுது. ஏதோ தனியார் நிறுவனத்துல சுமார் சம்பளத்துல வேலைபார்த்து ரிடையரான நான் ஓய்வூதியத் தொகையோடு உங்களை மாதிரி தெரிஞ்சவங்க வீட்டுலயும் வேலை பார்த்து சம்பாதித்தாலும் சமாளிக்க முடியாம கடன் வாங்க வேண்டியதாச்சு. எங்க அம்மா வேற கீழ விழுந்து வைத்திய செலவும் அதிகப்படியா ஆயிடுத்து. பையன் நம்ப கஷ்டத்துல கைகொடுப்பான்னு நினைச்சதுக்கு மாறா வேலையில சேர்ந்த மறு மாசமே மாலையும் கழுத்துமா ஒரு பெண்ணோட வந்து நின்னான். ஏதோ அவனுக்கு பிடிச்சிருக்குன்னு நாங்க மனசை தேத்திண்டாலும் வந்தவ எங்க கூட இருக்கப் பிரியப்படாம பையனைக்கூட்டிண்டு போயிட்டா. வேலையை கூட வேற ஊருக்கு மாத்திண்டு போயிட்டதா கேள்வி. இந்த நிலைமையில இருந்த சொற்ப நகைநட்டெல்லாம் வித்து முக்கால்வாசி கடனை கட்டிட்டேன். மீதிக்கடன், வீட்டுச் செலவு,நடமாட்டம் இல்லாம படுத்துக் கிடக்கற அம்மாவுக்கு மருத்துவம் எல்லாத்துக்கும் பணம் வேணுமே,...அதுக்காக மெயின் ரோடுல இருக்கற ஷாப்பிங் செண்டர்ல நைட் செக்யூரிட்டியா வேலைக்குப் போறேன்."
        

                    "என்ன சார் இது? இந்த வயசில ராத்திரி நேர வேலையா?" அதிர்ச்சியாக கேட்பவனுக்கு பதிலாக "ராத்திரி ட்யூட்டிக்கு சம்பளம் அதிகம். மாலை 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை வேலை பார்த்துட்டு வந்து கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து உங்களை மாதிரி பழகிய வீட்டு வேலைகளுக்குப் போக முடியறது." பேசி முடித்தவரை பார்த்து பிரமித்து அமர்ந்தவன் சிறிய மௌனத்துக்குப் பின் "சார் நான் வேணா உங்களுக்கு ஒரு எலெக்டிரிக் ஷாப் மாதிரி ஒண்ணு வைக்க உதவறேனே," சீனிவாசன் சொல்ல வந்ததை முடிப்பதற்குள் அவசரமாக மறுப்பது போல் தலையை ஆட்டியபடியே, "நீங்க இப்படிக் கேக்கறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா அதெல்லாம் இந்த வயசுக்கு மேல சரிவராது. என் மனைவி கூட ஏதாவது சமையல் வேலைக்குப் போறேங்கறா. ஆனா எங்க அம்மாவை விட்டுட்டு அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டேன். இந்த வருடம் சுதாவோட படிப்பு முடிஞ்சுடும். ஏதாவது வேலைக்குப் போயிண்டே மேல படிக்கப் போறதா சொல்றா. இப்படியே நாலைஞ்சு வருடம் சமாளிச்சு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிடணும். பார்ப்போம்".
        

 மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாதவனாய் எழுந்த சீனிவாசன்,"சரி சார் நான் கிளம்பறேன். என்னை உங்க கூடப்பிறந்தவனா நினைச்சு எந்த சமயத்துல என்ன உதவி வேணுமுனாலும் தயங்காம கேளுங்க" என்றவன் வாயிலைநோக்கி நகர, கூடவே வந்த ராமு,"இப்போதைக்கு நான் ஒரு உதவி தான் கேட்பேன். நான் இரவுநேர வேலைக்குப் போறது அக்கம்பக்கம் யாருக்கும் தெரியாது. வாடகை கம்மி என்பதால ஒதுக்குப்புறமா அருகில் வீடுகள் இல்லாத இந்த இடத்தில மூணு பெண்களை பாதுகாப்பில்லாம விட்டுட்டு போகவேண்டியிருக்கு...." "நீங்க சொல்லவரது புரியறது. நான் இதை யாருக்கும் சொல்லமாட்டேன்."காரை கிளப்பியவனுக்கு கையசைத்து விடை கொடுத்தவரை "நேற்று ஒரு நிமிடம் பார்த்த  காட்சியை வைத்து இந்த நல்ல மனிதரை தவறாக எடை போட்ட தன் எண்ணத்தை நினைத்து  அவரிடம் மானசிகமாக மன்னிப்பு வேண்டினான்.

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu