மேன்மக்கள்  மேன்மக்களே

 

சாந்தி நாதன்

 

பகல் 1 மணியிருக்கும்‌ சாப்பிட்டு விட்டுச்‌ சோபாவில்‌: அரைத்‌ தூக்கத்தில்‌ இருந்த சரஸ்வதி காலிங்பெல்‌ ஒலியால்‌ எரிக்சல்‌ அடைந்து விழித்துக்‌ கொண்டாள்‌. வாசற்கதவைத்‌ திறந்தவள்‌ அருமை மகள்‌ பூர்ணிமாவைக்‌ கண்டதும்‌ முகம்‌ மலர்ந்தாள்‌.

 

“என்னம்மா தூக்கமா? தனியாவா இருக்கே? அண்ணா,அப்பா, உன்‌ அருமை மருமகள்‌ யாருமில்லையா?” படபடவெனப்‌ பேசிக்கொண்டே சோபாவில்‌ அமர்ந்தாள்‌ பூர்ணிமா.

 

**அப்பா சாப்பிட்டு விட்டுப்‌ படுத்துண்டு இருக்கார்‌. உன்‌ அண்ணா. ஆபிஸ்‌ டூரில்‌ கல்கத்தா போயிருக்கான்‌ வர இரண்டு நாளாகும்‌. உன்‌ அண்ணி வீடெல்லாம்‌ கிளீன்‌ செய்யறேன்னு வேலைக்காரி சொர்ணாவுடன்‌ இத்தனை நேரம்‌ மாடிக்கும்‌ கீழுக்கும்‌  போயிட்டு இப்பத்தான்‌ குளிக்கப்‌  போயிருக்கா. இனிமேல்‌ தான்‌ சாப்பிட வருவா'” என்றாள்‌.

 

நீ இன்னும்‌ சாப்பிடாமல்‌ இருக்கியா? ஞாயிற்றுக்‌ திழமைன்னாகூட வேளையோடு சாப்பாட்டுக்‌கடையை முடிக்க மாட்டீங்களா”?எனக்கு ஏதுடி ஞாயிற்றுக்கிழமை”? வழக்கம்‌ போல்‌ காலையில்‌ எழுந்து சமையலை முடிச்சு நானும்‌ அப்பாவும்‌ சாப்பிட்டாச்சு? சனி, ஞாயிறு லீவுன்னா கூட உங்க அண்ணி. சமைக்கறது கிடையாது உங்க அண்ணாவும்‌. கலியாணத்துக்கு முந்தியே கண்டிஷனா சொல்லிட்டானே நீ தான்‌ சமைக்கணும்‌ அவ கூடமாட உதவி பண்ணுவா அவ்வளவுதான்னு. ஒரு வருஷமா அப்படித்தானே நடக்கறது.சரி சரி நீ சாப்பிட்டாயா? குழந்தைகள்‌ ஏன்‌ வரலை?'' என்றாள்‌ சரசு. இன்னிக்கு எங்க மாமியாரின்‌ தங்கை பிள்ளைக்குச்‌ சாயங்காலம்‌ நிச்சயதார்த்தம்‌ காலையில்‌ இட்லி.பண்ணி எடுத்துண்டு இவர்‌, மாமா, மாமி, குழந்தைகள்‌ எல்லாம்‌

பாண்டிச்சேரி போயாச்சு. எனக்கு போகப்‌ பிடிக்கலை அதனால உனக்கு உடம்பு சரியில்லை அப்படின்னு டூப்‌ விட்டுவிட்டு இங்கு வந்துட்டேன்‌.

 

என்‌ மாமியாரும்‌ எப்படியும்‌ நாங்க வர லேட்டாகும்‌ நீ வேணா உங்க அம்மாவோட இருந்துட்டு காலையில வாயேன்‌ அப்படின்னா அதான்‌...” **சரி நல்ல வேலை பண்ணியிருக்கே. உள்ளூரில்‌ இருந்தாலும்‌ உனக்கு இங்கு வர

எங்க முடியறது?”' அதே உங்க அண்ணி சாருவை பாரு ஆபிஸிலிருந்து அம்மா

அம்மா வீட்டுக்குப்‌‌ போவா'' என்றாள்‌ வெறுப்பாக.

 

**ரி நான்‌ பேசிண்டே இருக்கேன்‌ நீ சாப்பிட்டாச்சா?” என்றவள்‌ படியிறங்கும்‌ மருமகளைப்‌ பார்த்து **சாரு யாரு வந்திருக்கா பார்த்தியா? பூர்ணி,பசியோட வத்திருக்கியே சாப்பிட வாடின்னா அண்ணியும்‌ வரட்டுமேன்னு உக்காந்திருக்கா'” என்றாள்‌. “வா பூர்ணி, குழந்தைகளைக்‌ கூட்டிண்டு வரலையா? சரி வா சாப்பிட்டுக்‌ கொண்டே பேசலாம்‌” என்றவளாய்‌ சாப்பாட்டு மேசைக்கு நகர்ந்தாள்‌ சாரு.

 

“உங்க அம்மா வீட்டில்‌ எல்லாரும்‌ செளக்கியமா அண்ணி? உங்க. தம்பிக்கு காலேஜ்‌ இண்டர்வியூவில்‌ நல்ல கம்பெனியில்‌ வேலை கிடைச்சிருக்காமே'! இனிமே உங்களுக்கும்‌ கொஞ்சம்‌ சிரமம்‌ குறையும்‌ இல்லையா?” என்றாள்‌ குழைவாக. **அப்படியெல்லாம்‌ ஒன்றுமில்லை மாதா மாதம்‌ பண உதவி தேவைப்‌ படாவிட்டாலும்‌ என்‌ தங்கை மதுமிதாவின்‌ திருமண சமயத்தில்‌ சேர்த்து வைத்துப்‌ பண உதவி செய்வதாக இருக்கிறோம்‌. மது இப்போ பி.காம்‌. 3வது வருடம்‌ படிக்கிறா கூடவே சி.ஏ.‌ இண்ட‌ரூம் முடித்து விட்டா.

எப்படியாவது அடுத்த வருடத்துக்குள்‌ சி.ஏ. முடித்து வேலைக்குப்‌ போக வேண்டும்‌ என்று ஆசைப்படற பார்ப்போம்‌” என்றாள்‌ சாரு.மகளுக்கு கண்ஜாடை  காட்டிய சரசுவின்‌ ஒப்புதலுடன்‌, “*அண்ணி, உங்க கிட்ட ஒரு உதவி கேட்பேன்‌ ஓத்துப்பீங்கன்னு நினைக்கிறேன்‌” என்றாள்‌ தயக்கமாக.

 

 *“என்ன விஷயம்‌? ஒத்துக்கக்கூடியதாக இருந்தா கண்டிப்பா ஓத்துப்பேன்‌. சொல்லு. சாருவின்‌ பதிலில்‌ சிறிது அவ நம்பிக்கை அடைந்த பூர்ணிமா, “ஒண்ணுமில்லை என்‌ நெருங்கிய தோழிக்கு ரொம்ப நாளா தெரிந்த ஒரு நகைக்கடைக்காரரிடம்‌ சில நகைகள்‌ விலைக்கு வந்திருக்கு அதில்‌ ஒரு நெக்லேஸ்‌ எனக்கு ரொம்ப பிடித்திருக்கு பில்‌ இல்லாமல்‌ வாங்குவதால்‌ விலையும்‌ குறைச்சலாகத்தான்‌ இருக்கு. இவர்‌ வீட்டிற்குக்‌ கொடுக்கும்‌ பணத்தில்‌ நான்‌ சேர்த்து வைத்துள்ளது போக ஒரு முப்பதாயிரம்‌ வரை தேவைப்படும்‌ நீங்கள்‌ கொடுத்தால்‌ நான்‌ கொஞ்சம்‌ கொஞ்‌சமாகத்‌ திருப்பிவிடுவேன்‌ முடியுமா?” என்றாள்‌. பூர்ணிமா, இந்த மாதிரி நகை வாங்குவதெல்லாம்‌ சரியில்லை. பில்‌ இல்லாமல்‌ வாங்கி அது தரமில்லாத நகை என்று தெரிந்தால்‌ என்ன செய்வாய்‌ உன்‌ வீட்டுப்‌ பெரியவர்களுக்கோ கணவருக்கோ தெரியாமல்‌ இந்த மாதிரி செய்யாதே என்று தான்‌ நான்‌ சொல்லுவேன்‌. அதுவுமில்லாமல்‌ என்னிடம்‌ அவ்வளவு பணமும்‌ இப்போது இல்லை'' என்றாள்‌ உறுதியான குரலில்‌.

 

''பார்த்தியாம்மா, நீ தான்‌ அண்ணிகிட்டே கேளுன்னு சொன்னே இப்பப்‌ பாரு”

குரலில்‌ ஆத்திரம்‌ தொனிக்க நாற்காலியை நகர்த்திக்‌ கொண்டு கை கழுவ எழுந்தாள்‌ பூர்ணிமா.**ஆமாண்டி தப்புதான்‌. நீ என்ன அவ தம்பியா தங்கையா கேட்டதும்‌ உதவி பண்ணுவதற்கு? என்னால்‌ உனக்கு கிடைச்ச அவமானத்துக்கு என்னை மன்னிச்சிடு” என்றாள்‌ சரசு.

 

“*ஏய்‌ சரசு என்ன பேசற நீ? நானும்‌ பூர்ணிமா வந்ததிலிருந்து உங்க பேச்சை

எல்லாம்‌ கேட்டுண்டுதான்‌ இருக்கேன்‌. அம்மாவா லட்சணமா பெண்ணுக்கு இதெல்லாம்‌ தப்புன்னு புரியவைக்கப்‌ பாரு. அநாவசியமா சாருவை நோகடிக்காதே, அவ தகப்பனார்‌ இல்லாத குடும்பத்தின்‌ மூத்த பெண்‌. கல்யாணத்தின்‌ போதே தன்‌ குடும்பத்துக்குத்‌ தன்‌ வருவாயைத் தருவதற்கு நம்மிடம்‌ அனுமதி கேட்டாள்‌. நாமும்‌ அதற்கு ஒத்துக்‌ கொண்டதால்‌ தான்‌ அவள்‌ இந்தக்‌ கல்யாணத்திற்கே சரியென்றாள்‌. அதைப்‌ பற்றி பேச உனக்கோ உன்‌ பெண்ணுக்கோ எனக்கோ எந்த உரிமையும்‌ இல்லை நினைவிருக்கட்டும்‌'”

என்றார்‌ அதட்டலாக.

 

வாங்கோ எங்கடா ஆளைக்‌ காணலியேன்னு நினைச்சேன்‌ மாட்டுப்பெண்ணை ஏதாவது பேசினாலே உடனடியா வந்திடுவேள நீங்க காசு பணத்தோட இருந்திருந்தா நம்ம பொண்ணு இப்படிக்‌கண்டவா கிட்டே கேக்கறமாதிரி நிலைமை வந்திருக்குமா? எங்க அப்பா அம்மா வாங்கித்‌ தந்தான்னு அவளும்‌ பெருமையா வாங்கிப் போட்டிண்டிருப்பா. இல்லையா?” என்றாள் ‌ஆங்காரக்‌குரலில்‌.

“அம்மா பூர்ணிமா, உங்க அம்மா ஏதோ புரியாம பேசறா நீ படிச்ச பெண்‌ தானே

இந்த மாதிரி வேண்டாத வேலையெல்லாம்‌ செய்யாதே. நல்ல புருஷனுக்கு ஏத்த மனைவியாய்‌ அவருடைய பிஸினஸிற்கு ஒத்தாசையா இரு. குழந்தைகளைக்‌ கவனித்து படிப்பிலும்‌ எல்லாத்திலேயும்‌ உயர உதவி பண்ணு...” சதாசிவம்‌ பேச்சை முடிப்பதற்குள்‌ **போதும்‌ அப்பா உங்க அட்வைஸ்‌ எங்க மாமனாரைப்‌ பாருங்க பென்ஷனையும்‌ வட்டி பணத்தையும்‌ இரண்டு பெண்களுக்கும்‌ கேக்கறதையெல்லாம்‌ வாங்கித்‌ தரவே செலவழிக்கிறார்‌. பேரன்‌, பேத்திகளும்‌ தாத்தாவிடம்‌ இருந்து ஆசைப்பட்டதை வாங்கி சந்தோஷப்படறா நீங்க அப்படியா? எல்லாத்துக்கும்‌ அண்ணா கையையும்‌ அண்ணி தயவையும்‌ எதிர்பார்த்துண்டு அவாளுக்கு சலாம்‌ போட்டுண்டு இருக்கேளே'' என்றாள்‌ இளக்காரமாக.

 

“பூர்ணிமா அப்பாவை இப்படியெல்லாம்‌ பேசாதே பிளீஸ்‌'” என்ற சாரு, அவதான்‌ ஏதோ தெரியாம பேசறான்னா நீங்க ஏன்‌ அவகூட வீணா விவாதம்‌ பண்றீங்கப்பா விடுங்க” என்றாள்‌ மாமனாரைப்‌ பார்த்து.

 

**இல்லைம்மா, இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்‌'' என்றவர்‌ தொடர்ந்து பூர்ணிமா எனக்கென்று இருந்த ஒரு வீட்டையும்‌ விற்று உன்‌ கல்யாத்தை உங்க அம்மா ஆசைப்பட்டபடி சிறப்பாகப்‌ பண்ணலியா? உன்‌ புகுந்த வீட்டில்‌ மாமனார்‌, மாமியார்‌ கணவர்‌ எல்லாரும்‌. உன்னை நல்லபடியாக நடத்தலியா? காரு,பங்களான்னு உயர்ந்த வாழ்வுதானே வாழற? எண்ணம்‌ மட்டும்‌ ஏன்‌ மட்டமா இருக்குன்னு எனக்குப்‌ புரியலை. பேரன்‌, பேத்தி பிறந்த போதும்‌ உங்க அண்ணன்‌ உனக்கும்‌ உங்க அம்மாவுக்கும்‌ மனசு குளிரக்குளிர சீர்‌ பண்ணி அனுப்பலையா? ஆனா அப்பாவா நான்‌ அவனுக்கு என்ன சொத்து வைச்சிருக்கேன்‌ சொல்லு. உங்க மாமனார்‌ பிள்ளைக்கு ஒரு வீடு எழுதி வைச்சிருக்கார்‌. உங்க அண்ணா கோபி என்னை இந்த மாதிரி மட்டமா ஒரு தடவை கூட பேசியது இல்லை தெரிஞ்‌சுக்கோ'” என்றார்‌ கோபமாக.

 

“போதும்பா இந்தப்‌ பேச்சு. சரி நீங்களும்‌ அம்மாவும்‌ காலையிலேயே சாப்பிட்டாச்சே காபி போட்டுண்டு வரட்டுமா!” என்று திரும்பிய சாருவிடம்‌ “உன்‌ மாமனாருக்கு வேணுமானா கலந்துக்கோ எனக்கு வேண்டாம்‌” என்றாள்‌ சரசு.

 

 

“அம்மா நான்‌ கிளம்பறேன்‌'” என்ற பூர்ணிமாவிடம்‌ “ஏண்டி நானும்‌ உன்னோடு வரட்டுமா” என்றாள்‌ சரசு. **அவ உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு வந்திருக்கா. அப்ப நீ எப்படி அவகூட போகமுடியும்‌ சொல்லு'' என்றார்‌ சதாசிவம்‌ கிண்டலாக.

 

“அவ வீட்டுக்குப்‌ போகாட்டா என்ன? இரண்டு பேருமா வனஜா வீட்டுக்குப்‌ போய்‌ புதிதாகப்‌ பிறந்திருக்கற அவ பேரனைப்‌ பார்த்துட்டு ஹோட்டல்ல டிபன்‌ சாப்பிடுவோம்‌. அப்புறம்‌ அவளை ஆட்டோவில்‌ ஏத்தி அனுப்பிவிட்டு நான்‌ வரேன்‌'' என்றாள்‌ சரசு.

 

**சீக்கிரம்‌ கிளம்பி வாம்மா?” என்ற மகளிடம்‌ “இதோ ஒரு நிமிஷம்‌ புடவை மாத்திண்டு வரேன்‌!” என்றவள்‌ “இதோ பாரு எனக்காக யாரும்‌ சாப்பிடாம காத்திருக்க வேண்டாம்‌. உனக்கும்‌ உன்‌ மாமனாருக்கும்‌ வேணுங்கறதை பண்ணிக்கோங்கோ'' என்று மருமகளுக்கு உத்தரவிட்டாள்‌.

 

“சரசு, நாளைக்கு காலையிலே நான்‌ காஞ்சிபுரம்‌ கிளம்பறேன்னு உங்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்‌ அங்கிருக்கிற என்‌ பால்ய நண்பன்‌ ரொம்ப நாளாகக்‌ கூப்பிட்டிண்டு இருக்கான்‌ இரண்டு நாள்‌ தங்கி கோயிலெல்லாம்‌ பாத்து விட்டு வருவேன்‌”? என்றார்‌ சதாசிவம்‌.

 

**ஏம்பா, இதுக்கெல்லாம்‌ உங்கிட்ட பைசா இருக்கா? இல்லை அண்ணா அண்ணியிடம்‌ தான்‌ கேட்டு வாங்கிப்பிபேளா'' இளக்காரமாகக்‌ கேட்கும்‌ பெண்ணை முறைத்தவராய்‌ ''ஏதோ சொற்ப தொகையை பாங்கில்‌ போட்டு வைச்சிருக்கேன்‌. அதிலிருந்து வர வட்டி பணம்‌ பாதி உங்க அம்மா கையில்‌ கொடுத்துவிட்டு மீதியை என்‌ செலவுக்கு வைச்சுப்பேன்‌ தேவைப்பட்டால்‌

பிள்ளையிடமும்‌ கேட்டு வாங்கிப்பேன்‌. விவரம்‌ போதுமா இன்னும்‌. ஏதாவது தெரியணுமா?” என்றார்‌.

 

**போதும்‌ போதும்‌ வாம்மா போகலாம்‌” என்று வேக நடை போடும்‌ இருவரையும்‌ பார்த்துக்‌ கொண்டு நிற்கும்‌ மாமனார்‌ கையில்‌ காபியைக்‌ கொடுத்த சாரு, “அப்பா நாளைக்கு நீங்களும்‌ என்னோட கிளம்பி' வந்துடுங்க. உங்களை இறக்கி விட்டுவிட்டு நான்‌ ஆபீஸ்‌ போறேன்‌. இவர்‌ ஊரில்‌ இல்லாததால்‌ ஆட்டோ சொல்லி வைச்சிருக்கேன்‌. எட்டு மணிக்கெல்லாம்‌ வந்துவிடுவான்‌” என்றவளாய்‌ வேலைகளைப்‌ பார்க்கச்‌ சென்றாள்‌.

 

மறுநாள்‌ காலை எட்டு மணிக்கு அரக்கப்பரக்க வேலைகளை முடித்துக்‌ கொண்டு சாரு கிளம்பவும்‌ வாசலில்‌ ஆட்டோ வரவும்‌ சரியாக இருந்தது. மாமனாரின்‌ கைப்பையை எடுத்துக்‌கொண்டு “அம்மா வரேன்‌” என்ற அவளுக்கோ “சரசு, போயிட்டு வரேன்‌ என்ற கணவனுக்கோ பதில்‌ சொல்லாமல்‌ வழியனுப்பியவள்‌ தன்‌ வேலைகளை முடித்துக்‌ கொண்டு டி.வி பார்க்கத்‌

துவங்கினாள்‌.

 

**அம்மா இந்த கடுதாசி ரூமை பெருக்கும்போது கிடைச்சது. ஏதாவது முக்கியமான பேப்பரா பாருங்க” என்று வேலைக்காரி நீட்டிய பேப்பரை அலட்சியமாக * வாங்கிய சரசுவின்‌ கண்கள்‌ அதைப்‌ பிரித்துப்‌ பார்த்தவுடன்‌ விரிந்து சிவந்தன. "இப்படிப் போறதா விஷயம்? நாளைக்கு கோபி வரட்டும் இவளை உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்" மனதில் கறுவிக் கொண்டு தாளைப் பத்திரப்படுத்தினாள். வழக்கத்தைவிடத் தாமதமாகத் திரும்பிய

சாருவை உக்கிரப்பார்வை பார்த்தவள் “நான் சாப்பிட்டாச்சு. நீ சாப்பிட்டுவிட்டு கிச்சனை சுத்தம் பண்ணு. கதவெல்லாம் பூட்டிவிட்டு மாடிக்குப் போ" 'என்றவளாய் தன் அறைக்குச் சென்றாள். மறுநாளும் எட்டு மணிக்கே தயாரான சாருவைப் பார்த்து “இன்னிக்கு சாயங்காலம் கோபி வந்துவிடுவான் நினைவிருக்கா? இன்னைக்கும் லேட்டாகத்தான் வருவியா" என்றாள். “இன்னைக்கு லேட்டாகாது. அப்பா கூட இன்னைக்கு வந்தாலும் வந்துவிடுவார். அவர் நண்பர் நேற்று எனக்கு போன் செய்து சொன்னார்" என்றவளாய் வாசலில் வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றாள். மாலை மகன் வருவதற்குள் இட்லியும் சட்னியும் செய்து பால் காய்ச்சி டிகாஷனையும் தயார் செய்தவள் வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்து அவனது வரவிற்காகப் பொறுமை இழந்து தவித்துக்

கொண்டிருந்தாள்.

 

 

போன் அடிக்கவே ஓடிச்சென்று எடுத்தாள் சரசு. "அம்மா நான் பூர்ணிமா பேசறேன். அப்பா காஞ்சிபுரம் போகலையா?" என்றாள். 'நேத்தே போயிட்டாரே'

ஏன் என்ன விஷயம்'' என்றவுடன் 'இதபாரு அப்பா காஞ்சிபுரம் போகலை மத்தியானம் நான் அவரைப் பாத்தேன். உன் அருமை மருமகளின் தம்பி ராஜீவோட ஸ்கூட்டரில் போயிண்டு இருந்தார். என்ன விஷயம்னு உனக்கு ஏதும் தெரியுமா” என்றாள்.

 

“இதென்னடி புதுக்கதை" இங்கே நானே ஒரேடியா குழம்பிப் போயிருக்கேன்" என்ற சரசு “சரி வாசலில் டாக்ஸி சத்தம் கேக்கறது. நாளைக்கு எல்லா கதையும் சொல்றேன்" என்றவளாய் மகனை வரவேற்க வாசலுக்கு விரைந்தாள்.

"என்னம்மா பவர் கட்டா? சீரியல் பாக்காம உக்காந்திருக்கியே'' கிண்டலடிக்கும் மகனை முறைத்தவள் "சீரியலைவிட நிஜத்தில் நடக்கறதெல்லாம் பார்த்து பிரமிச்சுப் போயிருக்கேன். சரி சரி நீ எப்போ சாப்பிட்ட? சூடா இட்லி தயாரா இருக்கு சாப்பிடறயா" என்றாள். '"இரு கைகால் அலம்பிண்டு வரேன்"

என்று அறைக்குள் சென்று உடைமாற்றிக் கொண்டு சாப்பிட வந்தமர்ந்தான் கோபி. மகன் சாப்பிட்டு முடிப்பதற்கு காத்திருந்து காபியோடு வந்தவள் "கோபி உங்கிட்ட ஒண்ணு சொல்லணுமே" என்றாள். “என்ன விஷயம் சொல்லு" என்றவனிடம் தயாராக வைத்திருந்த தாளை நீட்டி "உங்க ரூமை பெருக்கும்போது கிடைத்ததுன்னு வேலைக்காரி கொடுத்தா" என்றாள்.

           இதெல்லாம்" என்ன என்றான் படபடப்பாக. *என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? ஊருக்குப் போன நாளிலிருந்து தினமும் ஆபிஸிற்கு சீக்கிரம் கிளம்பிப் போறா வருவதும் முன்னைவிட லேட்டாகத்தான் வரா. சனிக்கிழமை கூட வேலையிருக்குன்னு போயிட்டு வந்தா. திங்கட்கிழமை காலையிலே காஞ்சிபுரம் போறேன்னு உங்க அப்பா கிளம்பிப்போனார். ஆனா கொஞ்ச நேரம் முந்தி பூர்ணிமா போன் பண்ணி அப்பா சாருவின் தம்பி ராஜீவுடன் ஸ்கூட்டரில் போனதைப் பார்த்தேன் என்று சொன்னா. உனக்குத் தெரியாம அவ பிறந்த வீட்டுக்கு ஏதோ பண்றா போலிருக்கு. இதிலே உங்க அப்பாவும் உள்கையா இருக்கற மாதிரி தெரியறது என்றாள்.

 

 

 “இங்கு பணம் என்ன கொட்டியா கிடக்கு? வரட்டும் இன்னைக்கு" காபியை ஒரு வாயாகக் குடித்து டம்பளரைக் கோபமாக வைக்கவும் கேட்டை திறந்து கொண்டு சதாசிவம் உள்ளே வரவும் சரியாக இருந்தது. “வாடா எப்ப வந்தே" என்றவருக்குப் பதில் சொல்லாமல் முறைத்தான் கோபி. அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆட்டோவை விட்டு சாரு இறங்கி வேகமாக உள்ளே வந்தாள்.

 

“என்ன கோபி, உங்க டூர் எப்படி இருந்தது? வேலையெல்லாம் நன்றாக முடிந்ததா?" என்று அருகில் வந்த சாருவிடம் ரசீதை நீட்டியவன் “முதல்ல இது என்னன்னு சொல்லு. அப்புறம் மத்ததெல்லாம் பேசலாம்" என்றான் கோபமாக.

''உள்ளே போய் ஒரு டம்ளர் தண்ணீர் குடிச்சிட்டு வந்து பேசறேன்'' நகரப் போனவளை முரட்டுப் பிடியாய் இழுத்து “என்ன கதை சொல்லலாம்னு யோசிக்க  நேரம்வேணுமா  முதல்ல பதில் சொல்லு" என்றான். கேலியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் மாமியாரையும் முகம் சிவக்க உறுத்து விழிக்கும் கணவனையும் ஒரு சேரப் பார்த்தவள். “ஒரு கடனைச் செலுத்த உடனடியாகப் பணம் தேவைப்பட்டது. அது தான்" என்றாள்.

 

“யார் பட்ட கடன்? உங்க அப்பன் பட்ட கடனா? மாசாமாசம் கொடுப்பது போறாதுன்னு இது வேறே என்ன புதுசா சொல்லு” உறுமினான் கோபி. “டேய் அது அவ அப்பன்பட்ட கடன் இல்லை. உங்க அப்பன் பட்டது" குறுக்கிடும் அப்பாவை எரிப்பது போல் பார்த்த கோபி "அப்பா சாருவை சப்போர்ட் பண்ணவேண்டாம். அவளுக்கு இவ்வளவு. திமிரும் தைரியமும் வருவதற்கு நீங்கதான் காரணும்னு அம்மா சொல்றது சரிதான் போலிருக்கு" என்றான்.

 

“நன்னா கேளுடா அவரை, பெத்த பெண்ணை அவ எதிரிலேயே அவ்வளவு மட்டமாகப் பேசி அழவிட்டு அனுப்பினார் தெரியுமா” என்ற சரசுவை “அம்மா கொஞ்சம் சும்மா இரு" என்றவன் “எனக்கு இப்போ முழு விவரமும் தெரிஞ்சாகணும்” என்றான். “முதல்ல நீங்க சோபாவில் உக்காருங்க. ஏன்னா, உங்க நினைவுகளை ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி கொண்டு போகணுமே''. இகழ்ந்த குரலில் தொடர்ந்தாள் சாரு.

 

"உங்க அப்பாவின் தங்கை ராஜம்மாவையும் அவரது கணவர் அது தான் உங்களை பி.ஈ,எம்.பி.எ. வரை படிக்கவைத்த ராகவனையும் நினைவிருக்கா? தொழிலில் அவர் கொடிகட்டிப் பறந்த நாள் உங்கள் குடும்பமே அவரது தயவால் தான் கௌரவமாக வாழ்ந்தது என்பதும் மறந்திதிருக்காது என்று நினைக்கிறேன். அவரது ஒரே மகள் சுகுணாவை உங்களுக்குத் திருமணம் செய்துவைக்க அவர் விரும்பிய போது மகிழ்ச்சியாக ௐத்துக் கொண்ட நீங்களெல்லாம் எதிர்பாராத விதமாக அவர் பிஸினஸ் நொடித்து கடனாளி ஆனதும் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டீர்கள் இல்லையா? கடன் சுமையும் நோயும் ராகவன் மாமாவைப் பலிவாங்கிய நிலையில் நடுத்தெருவிற்கு வந்த அந்த குடும்பம் பிறகு என்ன ஆயிற்று என்றுகூட தெரிந்துகொள்ள விருப்பமின்றி ஊரைவிட்டே நீங்கள் வந்துவிட்டீர்கள் போலிருக்கு. உள்ளூர வேதனைப்பட்டாலும் உங்கள் அப்பாவால் உங்கள் இருவரையும் மீறி எதுவும் செய்ய முடியாமல் சும்மா இருந்து விட்டார். மாமாவிடம் வேலைபார்த்த சுந்தரம் ஆதரவுகரம் நீட்டி அவர்கள் மகளையும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மாமா இறக்கும் போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது மகன் ஹரியைத் தன் சொற்ப வருவாயில் நன்கு படிக்க வைத்திருக்கிறார் மாப்பிள்ளை சுந்தரம். அவனும் நன்கு படித்து இப்போ சமீபத்தில் எங்க கம்பனியில் வேலை செய்கிறான்.

 

திடீரென்று சுகுணாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கு இதில் அவள் கர்ப்பமாக வேறு இருந்திருக்கா. பரிசோதனையில் அவளுக்கு இதயத்தில். சிக்கல் குழந்தை வளரவளர மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறாள் மிகவும் தேர்ந்த மருத்துவர்களால், பெரிய மருத்துவமனைகளில் ஒரு ஆபரேஷன் செய்தால் குழந்தையையும் தாயையும் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் ஹரி என்னிடம் உதவி கேட்டான். அவனது வேலை இன்னும் உறுதியாகாத நிலையில் ஆபிஸ் வழியாக லோன் எதுவும் கிடைக்காது. பேச்சு வாக்கில் தன் குடும்பத்தைப் பற்றி அவன் சொன்னதும் உங்க ஊர் என்று தெரிந்தது. மேலும் விசாரித்ததில் மற்ற விவரங்களும் புரிந்தது. உங்க அப்பாவிடம் வந்து இதெல்லாம் சொன்ன போது கதறிவிட்டார்.

 

 

 

 

இருவருமாகப் அத்தையையும் சுகுணாவையும் பார்த்துப் பேசி என் ஆபிஸ் நண்பர்கள் வழியாக எல்லா ஏற்பாடுகளும் செய்தோம். நேற்று இருதய ஆபரேஷனும் சிசேரியனும் அடுத்தடுத்து செய்து தாயும் சேயும் நலம். குழந்தை முன்னதாகவே பிறந்து விட்டதால் இன்குபேட்டரில் வைத்திருக்கா. மற்றபடி ஆரோக்கியமா இருக்கு. குழந்தையின் தந்தையும் ஹரியும் நாங்க எப்படியாவது பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா திருப்பிவிடுகிறோம் சரியான நேரத்தில் நீங்க\ உதவலேன்னா  சுகுணா பிழைத்திருக்கவே மாட்டா" என்று சொன்னார்கள்.  அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை இந்த மாதிரி உதவி பண்ணவேண்டியது எங்க கடமை. அதனால் இது கடனாவே நீங்க நினைக்கக் கூடாது எங்க கடமையைத்தான் நாங்க செஞ்சிருக்கோம்னு பதில் சொன்னேன். ஒரு குடும்பத்தில் அப்பா இல்லாத கஷ்டநஷ்டம் புரிஞ்சவ நான் அதெல்லாம் உணர்ந்து  என்னைக் கல்யாணம் செய்துண்டு  எங்க குடும்பத்துக்கும் பண உதவி செய்ய ஒத்துக்கிட்ட பெரிய மனசு உடையவர் என் கணவர்னு எனக்கு  இவ்வளவு நாளா  உங்களை ரொம்ப உயர்வா நினைச்சிக்கிட்டிருந்தேன்  ஆனா.

உதவிய குடும்பத்தை உதறிய உங்கள் பழைய வாழ்க்கை என் மதிப்பில் உங்களை கொஞ்சம் இறக்கி விட்டுவிட்டது" என்றவள் தொடர்ந்து  என் தம்பியும் அம்மா தங்கை எல்லாரும்  இதில் அப்பாவுக்கும் எனக்கும் ரொம்ப உதவியா இருந்தாங்க “நேற்று உங்க அத்தையை வீட்டில் கொண்டுபோய் விட நான் போயிருந்தேன். 'முதல் முதலாக எங்க வீட்டுக்கு வந்திருக்கியே. உனக்கு என்ன கொடுப்பேன்னு சொல்லிண்டே தன் பெட்டியில் இருந்து இந்த சின்ன வெள்ளி கிருஷ்ணரை கொடுத்து சீக்கிரமே எங்க கோபிக்கு ஒரு குட்டி கிருஷ்ணன் பிறக்கணும்னு' ஆசீர்வாதம் செய்தாங்க. அதை கையிலே வாங்கும்போது எனக்கு மனசெல்லாம் கனத்து அழுகையா வந்தது. ஒரு வார்த்தை கூட பழைய கதையோ உங்களையெல்லாம் பற்றிய ஒரு தப்பான வார்த்தையையோ பேசாத அந்த நல்ல மனுஷியைப் பார்த்ததும் எனக்குக் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே அப்படீங்கற வாக்கு எவ்வளவு உண்மையானதுன்னு புரிஞ்சுது" விடாமல் தொண்டை வரைப் பேசி முடித்த வள் அருகிலிருந்து செம்புத் தண்ணீரையும் குடித்துவிட்டு மாடியேறினாள்.துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டே சதாசிவம் அகல கோபியும் சரசுவும் சிலையாக அமர்ந்திருந்தனர் •

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu