யாதுமாகி நின்றாய்


யாதுமாகி   நின்றாய் 



"நின்றும் இருந்தும் கிடந்தும் நினைப்பதுன்னை" அபிராமி அந்தாதியை  மெல்லிய குரலில் பாடியவாறே சமையலில் ஈடுபட்டிருந்தாள் விமலா. முன்னறையில் மகன் கார்த்திக் மடிக்கணிணியில் ஏதோ வேலையில் இருந்தான். மொட்டைமாடியில் துவைத்த துணிகளைக் காயவைத்துவிட்டு இறங்கிக்கொண்டிருந்த மகள்  கவிதா  "வாங்க ஆண்டி" என்று வரவேற்று "அம்மா இப்பத்தான் உங்க ரவிக்கையெல்லாம் ரெடியாயிடிச்சு. கொண்டுபோய் கொடுக்கணும்னு சொன்னாங்க. நான் கிளம்புவதற்குள் நீங்களே வந்துட்டீங்க.உக்காருங்க" நாற்காலியில் அவளை அமரச்செய்தாள். பேச்சுக் குரல் கேட்டு சமையற்கட்டிலிருந்து வந்த விமலா "வாம்மா சங்கரி" என்று முகம் மலர அவளை வரவேற்க கவிதா தையல் இயந்திரத்தின் பக்கத்தில் இருந்த அலமாரியிலிருந்து அவளுக்குரிய பையை சங்கரியின் கையில் கொடுத்தாள். "எவ்வளவு அழகா பெயர் எழுதி கச்சிதமாக ஐயர்ன் செய்து வச்சிருக்கீங்க?"  எல்லாம் கவிதாவோட வேலை தான்.பிளஸ் டூ பரிட்சை முடிந்ததிலிருந்து பாதிவேலை அவதான் பாக்கறா. இதுக்கு முன்ன நான் அட்டைபெட்டியிலதான் தைக்க வேண்டிய துணி தைச்சதுன்னு அடிக்கி வைச்சிருப்பேன்.அவங்க அண்ணணோட பழைய மரச்சாமான் கடைக்குப்போய் இந்த அலமாரிவாங்கி வந்து அவங்க ரெண்டுபேருமாவே அதை சரிபண்ணி பெயி்ண்ட் அடிச்சுவச்சிருக்காங்க பாரேன்."ஆமாம் இப்ப இந்த இடம் இன்னும் பெரிசா தெரியுது. ஓய்வில்லாம உழைக்கற உங்க சிரமத்தைப் புரிஞ்சு உறுதுணையா நிக்கற உங்க குழந்தைகளை பார்க்கவே சந்தோசமா இருக்கு மாமி... இப்ப வத்தல் ஏதும் பண்ணியிருக்கீங்களா?இருந்தா ஒரு பாக்கெட் வெங்காய வத்தலும் ஜவ்வரிசியும் வேணும்."

"ஆண்டி ரெண்டுமே பிரஷ்ஷா போட்டது நேத்துதான் பாக் செஞ்சோம். எவ்வளவு பாக்கெட் வேணும்"?  "சங்கரி வெள்ளிக்கிழமை பூசை முடித்த நேரத்துக்கு வந்திருக்க. முதல்ல தாம்பூலம் வாங்கிக்க. அதுக்குள்ள நான் உனக்குத் தேவையான வத்தல்களை எடுத்து வரேன். கவிதா சுவாமி பிறையில நிவேத்தியம் செஞ்ச  தாம்பூலத்தை ஆண்டிக்குக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்க.""ஆண்டி, எடுத்துக்கங்க " தட்டை நீட்டியவள் இந்த வாழைப்பழம் எங்க வீட்டில வந்த முதல் குலை." ஆசீர்வாதம் பண்ணுங்க"  "பிளஸ் டூவில் அமோகமா பாஸ் பண்ணி நல்ல காலேஜில் சேரணும்." மனப்பூர்வமாக சொல்லியவளிடம் நெருக்கமாகக் கட்டிய மல்லிகை சரத்தை "எங்க வீட்டுல பூத்தது."என்று கொடுத்தாள் கவிதா.

"குழந்தைங்களுக்கு பரிட்சை நடக்கறதால இப்ப வந்துடுவாங்க. உங்க மாடித்தோட்டத்தைப் பத்தி எதிர் வீட்டு மாமி  சொன்னாங்க. சாவகாசமா ஒருநாள் வரேன். " சொன்னபடியே இரண்டாயிரம் ரூபாயைவிமலாவிடம் கொடுத்தபடியே அப்புறமா கணக்கு பார்த்துக்கலாம். நான்வரேன் " பைகளுடன் கிளம்பிச் சென்றாள் சங்கரி.   வாசல் வரை சென்று வழியனுப்பவிட்டு உள்ளே வந்தவவந்தவள்   "அம்மா சீக்கிரமா இங்க வா என்று உற்சாகக் குரலெடுத்து  கூப்பிட்டவள் "போனவாரம் அண்ணா போன இண்டர்வியூவில் அண்ணா செலக்ட் ஆகிட்டான்.இப்பத்தான்மெயில் வந்திருக்கு.திங்கட்கிழமை நேரில்வந்து கையெழுத்துப் போட்டு ஆர்டரை வாங்கிண்டுவரணமாம்."  கண்ணா, நீ பட்டபாடுக்கு உன் ஆசைபடியே இந்த வேலை கிடைச்சிருக்கு. நான் வணங்கற அம்பாள் அருளும் உங்க அப்பாவின் நல்லாசியும் தான் நமக்கு துணையா நினறுநம்மை காப்பாத்தறது." கண்கள்பனிக்க மகனின் கரம் பற்றியவள் "சுவாமிக்கும் அப்பா படத்துக்கும் நமஸ்காரம் பண்ணிவிட்டு வா.ஒரு கரண்டி பாயசம் வைச்சுடறேன் அப்புறம் சாப்பிடலாம்  என்றாள்." முதல் நமஸ்காரம் உங்களுக்குத்  தான் ." சொன்னபடியே அவள் காலில் விழுந்து எழுந்தவன் கன்னத்தில் முத்தமிட்டு "அமோகம இரு" என்று சொல்லியபடியே சமையற் கட்டிற்குச்செல்ல, "அம்மா,பசி வயிததைக்கிள்ளறது. இதுக்குமேல கரண்டிபாயசமெல்லாம் வேண்டாம். இப்ப சாப்பிடலாம். சாயங்காலம்  ஸ்வீட் காரத்தோட காபி." சொன்னபடியே கவிதா சாப்பாட்டுத் தட்டுகளையும் சமைத்த பண்டங்களையும் கொண்டு வைக்க மூவரும் சாப்பிடத்துவங்கினர்.
"கவிதாவின் பரிட்சை முடிவுகள் மாதக் கடைசியில் வந்துவிடும். அவளோட திறமைக்கு அவ நிறைய மார்க் வாங்கிடுவா.அவளை நல்ல காலேஜிலே சேர்த்து அவ ஆசைபட்டபடிபடிக்க  வைப்பேன். பாவம் கொஞ்சங்கூட முகம் சுளிக்காம உன் வேலைகளில் பாதிய அவசெஞ்சிண்டு படிப்பிலும் சோடை போகாம ..." அவனைத் தொடரவிடாமல் இடைமறித்த கவிதா " நீ மட்டும் என்னவாம் படிக்கிற நாளிலியே பார்ட் டைம் வேலையா டியூஷன் செண்டரில் வேலை செய்யலையா? ஆன்லைனில் நீயே படிச்சு எழுதிப் பாஸ் பண்ணின கோர்ஸ் அவனவன் படிச்சு முடிக்கவே சிரமப்படுகிறான். நானும் உன்னைப் போல இருக்கணும்னு தான் ஆசைப்படறேன்."

"நீங்க ரெண்டுபேரும் பேசறபேச்சிலயே  எனக்கு வயிறு நிறைஞ்சுடும் போல இருக்கு.... இன்னிக்கு வெள்ளிக்கிழமையா இருக்கு. உனக்குநல்லபடியா வேலை கிடைச்சா நம்மகோயில் அம்பாளுக்கு புடவை சாத்தறதா வேண்டிண்டு இருக்கேன். சாப்பிட்டபிறகு நம்ம வாடிக்கை கடை சாரதா சில்க்ஸ்ஸில் போய் புடவை வாங்கிண்டு வந்துடறேன் சாயங்காலம் எல்லாருமா போய் அர்ச்சனை பண்ணிட்டு புடவை சாத்திட்டு வரலாம்."

"எதுக்கும்மா இந்த வெய்யிலில் நீங்க அலையணும்? சாயங்காலம் கொஞ்சம் முன்னதாக எல்லாரும் கிளம்பிப் போய் புடவை வாங்கிண்டு கோயிலுக்குப் போயிடலாம். இப்ப கொஞ்சநேரம் படுத்து ஓய்வடுங்க. நானும் கவிதாவும்  பாத்திரங்களை தேய்த்து கிச்சனையும் சரிபண்ணிட்டு வரோம் " மகனின் பேச்சிற்கு இணங்கி எப்போதும் போல் தன் கணவனின் புகைப்படத்தைப் பார்த்தவாறே படுத்த விமலா. நிற்க நிழலாக இந்த சிறிய வீட்டையும் உற்றதுணையாக இரு செல்வங்களையும் நீங்கள் எனக்குவிட்டு விட்டு சென்றீர்கள். நம் குழந்தைகள் இன்று வளர்ந்து நம்மை பாதுகாக்கும் நிலைக்கு  வந்துவிட்டனர். இப்போது நீங்கள் இருந்தால் எவ்வளவு பெருமிதமாக இருப்பீர்கள்"...கணவனோடு மனதிற்குள் பேசியவாறே உறக்கத்தி்ல் ஆழ்ந்தாள் விமலா. சொன்னபடியே மூவருமாகக் கிளம்பிப் புடவைக் கடைக்கு நடந்தனர். "அம்மா இன்னும் கொஞ்சநாளில் நீ இப்படி தெருவில் நடக்கவேண்டாம். உன் பையன் டூவீலரில் உன்னை எல்லா இடத்துக்கும் அழைச்சிண்டு போவான். நானும் காலேஜுக்கு அண்ணாவோட வண்டியில  ஜாலியா போவேன்." ....."ஏய் அரட்டை, கடை வந்தாச்சு கொஞ்சநேரம் அமைதியா வந்த வேலையைப் பார்ப்போம்."  அரக்குக் கலரில் சரிகைபோட்ட புடவையை வாங்கி விமலா பில் போடச் செல்ல அங்கு விற்பனைக்குத் தொங்கவிடப் பட்டிருக்கும் வண்ண வண்ண சூரிதார் வகைகளையும் புடவை ரகங்களையும் பார்க்கும் தங்கையை கவனித்தான்." பாவம் ரெண்டு செட் சீருடைகளையும் நாலு ஜோடி சாதா உடைகளையும் மாற்றி மாற்றிப் போட்டுக் கொள்ளும் இவளுக்கு நல்ல ஆடைகள் நிறைய வாங்கித் தரவேண்டும்" என்று நினைத்துக்கொண்டான்.
"நீங்க இரண்டு பேரும்  மெதுவா நடந்து கோயிலுக்குப் போங்கோ. நான் அர்ச்சனை சாமான் வாங்கிண்டு பின்னாடியே வரேன்." புடவைக்கவரை மகனிடம் தந்துவி்ட்டுச் செல்ல, இருவரும் கோவிலை நோக்கி நடந்தனர். கோவிலுக்கு சில அடி தூரத்தில் ஒரே கூட்டம்.  கூட்டத்தினுள்ளே புகுந்து முன்னே செல்லும் நோக்கில் தங்கையின் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நடக்கத் துவங்கிய காரத்திக் கண்முன் கண்ட காட்சியில்  அதிர்ந்து நின்றான்.   சுற்றி நிற்பவர்களின் ஏளனப்பார்வையோ விகார வெறிப்போ பாதிக்காத நிலையில் ஒரு மனநலம் பிறழிய இளம் பெண் கைகளைத் தட்டிக் கொண்டும் தனக்குத் தானே பேசிக் கொண்டும் நின்றிருந்தாள். பருவ வயதிற்கேற்ற வளர்சசி பெற்றிருந்த அவளின் ஆடைகள் கந்தல்கந்தலாய் தொங்கிக்கொண்டு  நிர்வாணநிலையில் கூட்டத்தினருக்குக் காட்சிப் பொருளாய் நின்று கொண்டிருந்தவளின்  கோலம்  கார்த்திக்கை ஆவேசநிலைக்குத் தள்ளி விட்டது.   "கவிதா, சீக்கிரம் கவரிலிருந்து அந்தப் புடவையை எடுத்து அவளுக்கு் சுற்றிவிடு." பயந்து பின் வாங்கும் தங்கையின் கைகளில் புடவையைத் திணித்தவன் அருகில் நின்று கொண்டிருந்த  ஒரு முதியவளிடம் "அம்மா என்தங்கை பயப்படறா.கொஞ்சம் அவ கூடப் போங்க"... இருவருமாகச் சென்று அவளுக்குப்புடவையைக் கட்டிவிட புடவையைத் தடவித்தடவிப் பார்த்த அப்பெண் சிரித்துக் கொண்டே கவிதாவைத்தொட முயல அவள் ஓடிப் போய் அண்ணனிடம் நின்று கொண்டாள்.

"இந்த கூட்டத்தில யாருக்கும்தோணாத ஒரு எண்ணம் உனக்குத்தோணியிருக்கே. உன்னைப் பெத்தவ மகா  புண்ணியவதி மகராசனாயிருப்பா." தலைதொட்டு அம்முதியவள்  கார்த்திக்கை ஆசீர்வதிக்கவும் விமலா அங்கு வரவும் சரியாக இருந்தது. "அம்மா, என்னை மன்னிச்சுடு. அந்த பெண்ணின் கோலத்தைப் பார்த்த உடன் என்னையறியாமல் இந்தமுடிவுக்கு வரவைத்துவிட்டது. முதல் மாசச் சம்பளத்தில் இதைவிட நல்ல புடவை வாங்கி அம்பாளுக்கு சாத்திடலாம்."மன்னிப்புக் கேட்கும் தொனியில் பேசுபவனை இடைமறித்த விமலா, அப்படியெல்லாம் இல்லடா கண்ணா. அம்பாளே நேரில் வந்து புடவையை ஏத்துக் கொண்டமாதிரிதான் எனக்குத் தோண்றது. இரண்டு பேரும் வாங்கோ சுவாமி தரிசனம் பண்ணி அர்ச்சனை செஞ்சுட்டு வரலாம்." சரியாக அந்த நேரத்தில் ஒலித்த கோயில் மணியோசை  அவர்களை வரவுக்குக் கட்டியம் கூறுவதுபோல் அமைந்தது.

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu