மௌனம் பேசியது

மௌனம் பேசியது

பெங்களூரின் இதமான காலைக் குளிரை அனுபவித்தபடி ஒரு கையில் காபியும் மறு கையி்ல் தினசரியுமாக வராண்டாவில் வந்து அமர்ந்த கணேசன் ஹாலில் ஒலித்த தொலைபேசியை ஓடிச்சென்று எடுத்தான். "யாரு கணேசனா?நான் சென்னையிலிருந்து ராமு மாமா பேசறேன். “...”சொல்லுங்க மாமா எப்படி இருக்கீங்க? அப்பா அம்மா சௌக்கியம் தானே?"  "உங்க அம்மா காலையில் துளசி மாடத்துக்கிட்டே வழுக்கி விழுந்துட்டா. வெளிக் காயமோ அடிபட்ட இடத்துல ரத்தக் கசிவோ ஒண்ணுமி்ல்லை. ஆனா நினைவு இல்லாம மயக்கநிலையிலேயே இருக்கா. உங்க குடும்ப டாக்டர் பாலசந்திரன் வந்து பார்த்துட்டு உடனடியா ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணச் சொல்லிட்டார். ஆம்புலன்ஸுக்கு காத்திருக்கும் நேரம் உனக்குத் தகவல் சொல்லிடலாமேன் தான்".... "எங்கம்மா விழுந்த நேரம் எங்கப்பா என்ன பண்ணிண்டு இருந்தார்.? வயசான காலத்தில தனியா இருக்கவேணடாம். எங்க மூணுபேரில யாரிடமாவது வந்து இருங்கன்னு சொன்னா எனக்கு அங்கெல்லாம் சரிப்படாதுன்னு அப்பா சொல்றதும் அம்மா அவரை எதிர்த்து பேசாம அவருக்குத் தலையாட்டறதும் இ்ன்னிக்கு இப்படி ஒரு நிலமைக்கு கொண்டு விட்டிருக்கு". கோபமாகப் பேசுபவனை இடைமறி்த்த ராமு "கோபப்படாதேப்பா. வாக்கிங் போயிட்டு தன் கிட்ட இருந்த சாவியால கதவைத்திறந்திண்டு உள்ள வந்த உங்கப்பா தான் முதல்ல அம்மாவைப் பார்த்து எங்களையெல்லாம் கூப்பிட்டார். பாவம் அப்பா இடிஞ்சு போய் உக்காந்திருக்கார்.  சரி நீயே உன் தம்பிகளுக்கு தகவல் கொடுத்திடு.ஆ்ம்புலன்ஸ் வந்துடுத்து நான் வைச்சுடறேன் எதிர் முனையில் போன் கட்டானது.

"யார் போனில்"? கேட்டபடியே மாலதி பாத்ரூமிலிருந்து வெளிவர. "அம்மா கீழே விழுந்துட்டாங்களாம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போயிருக்கா. ராமு மாமா தான் தகவல் சொன்னார்." "அப்ப அப்பா இல்லையா”? " இதபாரு இப்ப உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை. உன் பையனை எழுப்பி சென்னைக்கு உடனடியா கிளம்பற பிளைட் எதிலாவது ரெண்டு டிக்கெட் புக் பண்ணச் சொல். நமக்கு டிரஸ்ஸல்லாம் உன் பெண்ணை எடுத்து வைக்கச் சொல். பிரேக்பாஸ்ட் ஏதும் பண்ணாட்டா பரவாயில்லை. ஏர்போர்ட்டில் பார்த்துக்கலாம். நான் சரவணனுக்கும் ராகவனுக்கும் கவல் சொல்லணும். ஆபீசுக்கும் போனில் இன்பார்ம் பண்ணணும். போ சீக்கிரம்." விரட்டும் கணவன் பார்க்காதபடி உதட்டை கோணிக்கொண்டு பிள்ளைகளை எழுப்பச் சென்றாள் மாலதி்.

" ஆம்புலன்ஸ் வந்தாச்சு் "மனைவியின் அருகில் பிரம்மை பிடித்து உட்கார்ந்திருந்த ஈஸ்வரனை மெல்லத் தொட்ட சுவர்ணா, "மாமா இந்தக் கஞ்சியை குடிச்சு மாத்திரை எடுத்துக்கோங்கோ நாம கிளம்பணும்." "வேணாம்மா நாம கிளம்பலாம். என்னோட பர்ஸ், செக்புக்கெல்லாம் எடுத்துக்கணும்."  அதுக்கு முன்னாடி கஞ்சியைக் குடிச்சு மருந்தை சாப்பிடுங்க.  சுகர் பீபி மருந்தை ஒரு வேளை கூட நிறுத்தக் கூடாது தெரியுமா." லேசான அதட்டலுடன் அவர் கையில் கோப்பையைத் திணித்து குடிக்க வைத்தவள் மாத்திரைகளையும் சாப்பிடச் சொன்னாள். அதற்குள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பர்வதத்தை கவனமாக வண்டியில் ஏற்றி விட ஈஸ்வரன் மனைவி அருகில் ஏறி அமர்ந்தார்.  "அப்பா அம்மா நீங்க இங்கேயே இருங்க மூணு அண்ணாவும் கிளம்பிய தகவல் வந்தா அவாளுக்கும் சேர்த்து சமைச்சு வையுங்க. நான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு அங்குள்ள நிலவரத்துக்கு போன் பண்றேன்." சுவர்ணா வண்டியில் ஏறியவாறே பேச, "சரிம்மா நீ மாமாவை பாத்துக்கோ" ராமுவின் வார்த்தைகள் கிளம்பும் வண்டியின் வேகத்தில் தேய்ந்து சன்னமாக ஒலித்தது.

தம்பி சரவணனுக்கும் ராகவனுக்கும் தகவல் கொடுத்த கணேசன் மனைவி சகிதம் பத்தரை மணிக்குக் கிளம்பும் விமானத்தைப் பிடிக்க ஏர்போர்ட் வந்து சேர்ந்தான். மும்பாயிலிருந்து சரவணனும் ஹைதராபாத்திலிருந்து ராகவனும் கிட்டத்தட்ட அதே மாதிரி கிளம்பிய தகவலைத் தெரிந்து கொண்டவுடன் ராமு மாமாவிற்கு போன் செய்தான். "மாமா, அம்மா எப்படியிருக்கா? டாக்டர் என்ன சொல்றார்?"  "இப்பத்தான் சுவர்ணா பேசினா ஏதேதோ டெஸ்ட் எல்லாம் எடுத்துண்டு இருக்காளாம். அம்மா இன்னும் கண்திறக்கவேயில்லையாம். கோமா ஸ்டேஜ்ஜில் இருக்கமாதிரியிருக்குன்னு சொல்றா கவலைப்படாதேப்பா. நீங்க மூணு பேரும் வந்தா கண்முழிச்சிடுவா பார்." "சரிமாமா உங்க வாய் முகூர்த்தம் அம்மா எழுந்து உட்கார்ந்தா போதும்.சரவணனும் ராகவனும் கிளம்பியாச்சு. எல்லோரும் நேரா ஆஸ்பத்திரிக்கு தான் போறோம்." அருகில் நின்று கொண்டு "போதும்" என்பது போல் கைகாட்டும் மனைவியின் ஜாடையை புரிந்து கொண்டவனாய் போனைத் துண்டித்தான் கணேசன். "சொந்த மாமாவாஅவரு.? உங்க அப்பா சௌகரியமா அவுட்ஹவுஸை கட்டி அவர் குடும்பத்தை வாடகை கூட வாங்காம குடி வச்சிருக்காரு. அவாளும் ஏதோ எடுபிடி வேலை செய்யறா அந்தப் பெண் சுவர்ணா தன் வயத்தில பிறக்காத பெண் மாதிரி உங்க அம்மா அவளை சீராட்டறா .யாருக்கு வேணும் இதெல்லாம்? கேட் திறந்தாச்சு. வாங்க" மாலதியின் நிஷ்டூரப் பேச்சால் மனதில் பொங்கிய ஆத்திரத்தை வெளிக்காட்ட இயலாதவனாய் மௌனமாக தன் இருக்கை தேடி மனைவியோடு அமர்ந்தான் கணேசன்.

"பாவம் குழந்தைகள், போட்டது போட்டபடி கிளம்பியாச்சு." மாலதி ஆரம்பிக்க, "ரெண்டு பேருக்கும் வயசாயாச்சு சமையல் மாமியும் வீட்டு வேலைக்காரியும் எல்லாம் பார்த்துப்பாங்க. காலேஜ் லீவு தானே. அப்பப்போ நீ உன் லேடிஸ் கிளப்  மெம்பர்ஸ் கூட டூர் போகும்போதெல்லாம் வராத கவலை இப்ப எப்படி வந்தது. இதுக்கு நீ வரல்லன்னு வீட்டிலேயே இருந்திருக்கலாமே." கோபமாக பேசுபவனை சமாதானம் செய்வது போல் "உங்க அம்மாவின் மேல எனக்கும் அன்பு மரியாதை எல்லாமிருக்கு." மாலதியின் வார்த்தைகளால் சிறிது சமாதானம் ஆனவன், "எங்க அம்மா ரொம்ப பாவம். அவங்க மாமியாரிடம் ரொம்ப கஷ்டப் பட்டிருக்காங்க. எங்க அப்பா பாட்டிக்கு ஒரே பையன். கணவன் இல்லாம மகனைக் கஷ்டப்பட்டு வளர்த்ததை ஓயாம சொல்லிச் சொல்லி எங்கப்பாவை அவங்க எது சொன்னாலும் மறுத்துப் பேசாத மாதிரி ஆக்கிட்டாங்க. அம்மாவை சின்ன வயசிலேயே பறிகொடுத்திட்ட எங்க அம்மா அவங்களை தெய்வமா மதிச்சு கொண்டாடினாலும் அப்பா கிட்ட ஏதாவது சொல்லிக் கொடுத்து அம்மாவிற்குத் திட்டு வாங்கிக் கொடுப்பாங்க. அம்மாவோட அப்பா பாட்டி கேட்டதை விட எவ்வளவோ சீர் செஞ்சாலும் அவர் வந்தா நிம்மதியா பெண் வீ்ட்டில ரெண்டு நாள் தங்கக் கூட அனுமதிக்க மாட்டாங்க. தன் தம்பியை ஒரு அம்மா போல வளர்த்த எங்க அம்மா அவரோட திருமணத்துக்கு நாலு நாள் முன்னாடி கிளம்ப ஆசைப்பட்டாங்களாம் சிறுவனான எனக்கு அப்ப லேசா காய்சசல் வர அதைக் காரணம் காட்டி அம்மாவை மட்டும் திருமணத்துக்கு முதல் நாள் அனுப்பிவிட்டு முகூர்த்தம் ஆனவுடன் திரும்பி வரவச்சிருக்காங்க எங்க பாட்டி. கடைசிகாலத்தில அவங்க ரெண்டு மாசம் படுத்த படுக்கையா கிடந்தப்போ கொஞ்சம் கூட முகம் சுளிக்காம அவங்களுக்குப் பார்த்துப்பார்த்து சேவை செஞ்சாங்க. எனக்கு அப்ப பத்து வயசு இருக்கும். திடீரென்று எங்க தாத்தா இறந்துட்டதா தகவல் வந்தது.  எங்க பாட்டிககு ஒரு ஆயாவை ஏற்பாடு பண்ணிட்டு கை குழந்தையா இருந்த ராகவனை மட்டும் தூக்கிட்டு எங்க அம்மா மட்டும் போனாங்க, அப்பா எதையோ சமைச்சுப் போடுவார். நானும் சரவணனும் எதுவும் சொல்லாம அவர் போடறதை முழுங்கி வைப்போம். பாட்டிக்கு ஏற்பாடு செஞ்ச ஆயாவால் பாட்டியை சமாளிக்க முடியலை. படுக்கையில நடமாட்டமில்லாம கிடக்கறப்பவே இந்தக் கிழவி இந்த ஆட்டம் போடுதே நல்ல இருக்கும் போது என்னெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கும்? இத்தனை நாள் இவங்களை சமாளிச்ச புண்ணியவதி பூமாதேவியைவிட பொறுமைசாலியா இருக்கும்னு எங்க அப்பாகிட்டயே சொல்லிட்டு இதுக்கு மேல நீங்க லட்ச ரூபாய் கொடுத்தாலும் வேணாம் சாமின்னு ஓடிட்டாங்க. உடனே எங்க மாமாவுக்கு போன் செஞ்சு அம்மாவை அனுப்பி வைக்கச் சொல்லிட்டாரு அப்பா. மறுபேச்சு பேசாம எங்க அம்மாவும் கிளம்பி வந்துட்டாங்க. பாட்டியும் அப்பாவும் கொஞ்சங்கூட இதனால பாதிக்காது போலிருந்த போதும் அம்மா எப்பவும் போல வேலையைப் பார்ப்பாங்க ஆனா தனிமையில் தாத்தாவை நினைச்சு நிறைய அழுவாங்க. நான் ஏம்மா அப்பாவையோ பாட்டியையோ எதிர்த்து ஏதும் கேட்க மாட்டிங்களான்னு கேட்டதுக்கு அவங்க "அப்பாவுக்கு ஆபிஸ்ல நிறைய பொறுப்பு அதில டென்ஷன் ஆகிடறார். பாட்டி உடம்பு உபாதையால சத்தம் போடறார பாவம்." அப்படீன்னு எனக்கு சமாதானம் சொன்னா." தொர்ந்து பேச முடியாமல் கண்ணீர் விடும் கணேசனை ஆசுவாசப் படு்த்திய மாலதி ."இன்னும் கொஞ்ச நேரத்துல இறங்கணும் முகத்தை  துடைச்சுக்கோங்க " என்றாள்.

பிளைட் விட்டு இறங்கி நடந்து கொண்டே தம்பியைக் கூப்பிட்டான் கணேசன். "பம்பாய் பிளைட் இன்னும் கால் மணியில் வந்துவிடும். ராகவனோடு இப்பத்தான் பேசினேன். அவனும் அரைமணி நேரத்தில் வந்து விடுவானாம். நீ ஒரு பெரிய கார் புக் பண்ணினால் எல்லோரும் ஒண்ணா போயிடலாம்." தம்பியின் யோசனை நல்லதாகப் பட "சரிடா. அப்படியே பண்ணிடலாம்" என்றான் கணேசன்.

ஏதெதோ டெஸ்ட் முடித்து பர்வதத்தை ஒரு தனியறையில் படுக்கவைத்தனர். கூடவே வந்த டாக்டர் பாலா ஈஸ்வரனின் கைகளைப் பற்றியவாரே " மண்டையில் பிளட் உறைஞ்சு இருப்பதால் கோமா ஸ்டேஜில் இருக்காங்க. மாமிக்கு சுகர், பீபி ஏதும் இல்லாததால் ட்ரீட்மெண்ட்டிற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நான் உறுதியா சொல்றேன். ஒரு ஸ்பெஷலிஸ்ட் நாளைக் காலையில  இவங்களைப் பார்க்க வருவார். எல்லாம் சரியாயிடும். கவலையில்லாம இருங்க சார்" என்றார்.  "உன்னைத்தான் முழுமையா நம்பறேன். பர்வதம் எழுந்து உட்கார்ந்தா போதும்" எனக்கும் அவங்க அம்மா மாதிரிதான் சார். உங்க உதவியாலதான் நான் இந்த ஆஸ்பத்திரியை ஆரம்பிச்சு நல்லபடியா நடத்திட்டு வரேன். என் முழு முயற்ச்சியும் கடவுள் அருளும் சேர்ந்து மாமி கூடிய சீக்கிரம் குணமாகி விடுவாங்க." பேசியபடியே சுவர்ணா பக்கம் திரும்பியவர். "இவர் காலை ஆகாரம் மாத்திரையெல்லாம் சாப்பிட்டாறா? மணி ரெண்டாகப் போறதே லஞ்ச் காண்டீனில் சொல்லிவிடலாமா" என்றார். "அப்பாவுக்கும் எனக்கும் வீட்டிலிருந்து சாப்பாடு வரது சார்." "வேற எது வேணும் என்றாலும் ரிசப்ஷனில் கேள். சாயங்காலம் இவருக்கு பீபி செக் செய்யச் சொல்." "ஒண்ணும் கவலைப் படாம இருங்க”. டாக்டர் விடை பெற்றுச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் உணவுக் கூடையோடு வந்து சேர்ந்தார் ராமு.

"மூணு பசங்களும் கிட்டத்திட்ட ஒரே சமயத்தில் சென்னை வந்துடுவா போலிருக்கு. எல்லோரும் ஓண்ணா கார் ஏற்பாடு பண்ணிண்டு வரதா கணேசன் போன் செஞ்சான். சுவர்ணா மாமாவுக்கு சாப்பாடு போடு. ரொம்ப நேரம் ஆறது பார்." ராமு பேசியபடியே கேரியரைப் பிரித்துத் தர "எனக்குப் பசிக்கலை வேண்டாம்" மறுப்பவரை இருவருமாக பெரும் பிரயத்தனம் செய்து உண்ண வைத்தனர். "ராமு நீ சாப்பிட்டியா? நீங்களெல்லாம் பக்கத்தில் இல்லேன்னா நான் என்ன செய்திருப்பேன்னு தெரியலை." "நீங்க எங்களை உங்க குடும்பத்தில ஒருத்தரா நினைச்சு காட்டற அன்புக்கும் பண்ணற உபகாரத்துக்கும் இதெல்லாம் ஒண்ணுமேயில்லை. நான் சாப்பிட்டாச்சு சுவர்ணா. நீ சாப்பிடு. பசங்க எல்லாம் நேரா இங்கு தான் வரதா சொன்னா.  வீட்டுக்கு வந்தாலும் மீனா அவாளுக்கும் சாப்பாடு தயாரா தான் வைச்சிருக்கா. மாமாவை கொஞ்ச நேரம் படுத்துக்கச் சொல்.நான் கிளம்பறேன்." காலி பாத்திரங்களோடு ராமு வெளியேறினார்.

"இன்னிக்கு வெள்ளிக்கிழமை நான் ஸ்நானம் செய்துட்டு பூஜைக்கு உட்கார்ந்துடுவேன்.அதனால வீட்டைப்பூட்டி சாவியை நீங்க எடுத்துண்டு வாக்கிங் கிளம்புங்கன்னு சாவியைக் கொடுத்தா. நான் வந்தவுடன் குடிக்கற கஞ்சி சாப்பிடற மாத்திரை எல்லாம் சாப்பாட்டு மேஜை மேல தயாரா வைச்சிருக்கா. எனக்கு ஒண்ணொண்ணும் பார்த்துப் பார்த்து அவளை மாதிரி யாராலும் செய்ய முடியாது. அவ இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியலை." கண்களில் நீர் பெருக பேசுபவரைப் பார்க்கையில் சுவர்ணாவுக்கும் அழுகை வந்தது. "என்ன மாமா நீங்க? மாமிக்கு ஒண்ணும் ஆகாது. உங்களுக்கு வர ஜனவரி மாதம் எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வருது பீமரதசாந்தி விழாவா அதைக் கொண்டாடணும்னு மாமி அம்மா கிட்ட சொல்லியிருக்கா. மூணு அண்ணா அவா குடும்பமெல்லாம் சேர்ந்து விமரிசையா கொண்டாடப் போறா அந்த நாளில் சிவபார்வதி  சொருபமாய் நீங்க ரெண்டு பேரும் மணமேடையில உட்காறப் போறீங்க. சரி இப்ப கொஞ்ச நேரம் பேசாம படுங்க". "மூக்கிலும் கையிலும் ட்யூப் சொருகிண்டு இப்படி அசைவில்லாம பர்வதம் படுத்திருக்கறதைப் பார்த்தா எப்படீம்மா தூங்முடியும்? கல்யானம் ஆன நாளிலிருந்து இப்ப வரைக்கும் உடம்பு சரி இல்லைன்னு ஒரு நாள் கூட அவ படுத்ததில்லை. எங்கம்மா அவளை நிறைய நோக அடிச்சிருக்கா நானும் அதையெல்லாம் கண்டும் எங்கம்மாவை எதிர்த்தோ இவளை ஆதரிச்சோ ஒண்ணும் பேச மாட்டேன். ஆனா அவளோட தனியா இருக்கும் போது எங்கம்மா பேசறது சரியோ தப்போ நீ எதுவும் அவங்களைப் புண்படுத்தற மாதிரிப் பேசாதேன்னு சொன்னா எனக்கும் அவங்க அம்மாதான் அது மாதிரி நினைப்புகூட எனக்கு வராதுன்னு சிரிச்சுக்கி்டடே சொல்லுவா. "பானை பிடித்த பாக்கியவதி"ன்னு சொல்லுவா தெரியுமா அது பர்வதத்துக்கு ரொம்பப் பொருந்தும். அவளோட நல்ல மனசு பொறுமை  பொறுப்பான குடும்ப நிர்வாகம் இதெல்லாம் தான் சாதாரண வேலையில் ஆரம்பித்த என் உத்தியோகத்தில்  வெகு சீக்கிரம் உயர் பதவிக்கு வர உதவியாக இருந்தது. மூணு பையன்களும் இன்னிக்கு நல்லபடியா படி்ச்சுப் பொறுப்பான வேலையில் இருப்பதிலும் என்னைவிட அவளுடைய பங்குதான் அதிகம்."

"என்ன மாமா இது? நீங்க ரொம்ப தைரியசாலின்னு பேராச்சே .மனசை தளரவிடாம இருங்கோ." சுவர்ணா பேசப்பேச பிள்ளைகள் மூவரும் உள்ளே நுழைந்தனர்."அப்பா," மகனின் குரலைக் கேட்டதும்,"உங்க அம்மாவைப் பாருங்கடா" அழத் துவங்கினார் ஈஸ்வரன். ஒரே நாளில் தன் இயல்பான மிடுக்கு கம்பீரம் இழந்தவர் போல் அழும் அப்பாவின் நிலை அவர்களை வருத்தமடையச் செய்ய, "அழாதீங்க அப்பா. நாங்க ரூமுக்கு உள்ள வரதுக்கு முன்ன டாக்டரைப் பார்த்துட்டுத் தான் வரோம். அம்மாவின் வயசுக்கு அவங்க எந்த ஆரோக்கிய குறைபாடும் இல்லாம இருக்காங்க. அதனால சீக்கிரமே மயக்கநிலை தெளிஞ்சிடும்னு அவர் உறுதியா சொல்றார்." மகனின் வார்த்தைகளால் சிறிது ஆறுதல் அடைந்தவர், "நீங்களெல்லாம் மத்தியானம் சாப்பிட்டீங்களா? வீட்டில் சுவர்ணா அம்மா சமையல் பண்ணிவைச்சிருக்கா. ஏம்மா குழந்தைகளுக்கெல்லாம் துணைக்கு ஏற்பாடு செஞ்சுட்டு தானே கிளம்பினீங்க?" மருமகள்களைப் பார்த்துக் கேட்பவரை செய்தி கேட்டதும் நாங்க பதறி அடிச்சண்டு கிளம்பறதுதான் முக்கியமாகத் தோணித்து. அக்கம்பக்கத்தில் உதவிக்கு ஆயிரம் பேர் இருந்தாலும்  சொந்தபிள்ளைகள்  போல் வருமா? சொல்லுங்க" என்றாள் மாலதி சுவர்ணாவைப் பார்த்தவாரே. சரவணனின் மனைவி கல்பனா "போனில் நியூஸ் வந்தவுடன் "உள்ளூரில் இருக்கும் எங்க அப்பா அம்மா விஷயம் தெரிஞ்ச உடனே ஓடி வந்துட்டாங்க குழந்தைகளைப் பற்றிக்கவலைபடாம போயி உங்க அம்மா அப்பாவை கவனீங்கன்னு எங்களை அனுப்பி வச்சாங்க " என்றாள் "நீங்க உடனே கிளம்புங்க. நானும் தங்கையும் ஜாக்கிரதையா இருப்போம்னு பெரிய மனுஷன் போல சொல்றான்" என்றாள்.கடைசி மருமகள் ரஞ்சனி சற்றுப்  பெருமிதமாக. "பக்கத்து பில்டிங்கில் ரஞ்சனியின் கஸின் ஹேமா இருக்காங்க. அவங்க பசங்களும் உங்க பேரன்பேத்தியும் ஒரே வயசு. அவங்க வீட்டில சொல்லிவிட்டுட்டு வந்திருக்கோம்" என்றான் ராகவன்.

"சரிடா. நீங்களெல்லாம் கிளம்பி வீட்டுக்குப் போங்க .ராத்திரி சாப்பாடாவது நேரத்தோட சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுங்க. காலையிலப் பார்க்கலாம்." ஈஸ்வரன் சொல்ல, அதுவரை மௌனமாக இருந்த சுவர்ணா "அண்ணா, அப்பாவையும் உங்க கூட வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க. இரவு உணவை சீக்கிரமா சாப்பிட்டு அவர் மாத்திரையெல்லாம் சாப்பிடணும். நான் இன்னிக்கு இங்கேயே இருக்கேன் திடீரென்று நினைவு வந்தவளாய் ஈஸ்வரனிடம் "மாமா மாமியின் கழுத்தில் இருந்த திருமங்கல்ய செயினை நர்ஸ் கழற்றி எங்கிட்ட கொடுத்தாள் அதை உங்க கைப்பையில் வைச்சிருக்கேன்." அம்மாவோ தோடு மூக்குத்தி ....  முனகல் குரலில் மாலதி கேட்க, குளிக்கப் பேறதுக்கு முன்ன கழட்டி சமையல் அறையில ஒரு கிண்ணியில வைச்சிருந்தா. மீனா பார்த்துட்டு எங்கிட்ட கொடுத்தா. நான் எ்ங்க அலமாரியில் வைச்சிருக்கேன்". சிறிது நேரத்துக்கெல்லாம் அனைவரும் ரெண்டு கால்டாக்ஸியில் கிளம்பி வீடு சென்றனர். "ராமு,சுவர்ணாவுக்கு இரவு ஆகாரம் தவிர வேற ஏதாவது  தேவையான்னு போனில் கேட்டுண்டு கொடுத்துட்டு வந்துடு." ஈஸ்வரன் சொல்ல "மாமா, அப்பா போகவேண்டாம். நான் அக்காவோட ஸ்கூட்டியில போய் கொடுத்துட்டு மாமியையும் பார்த்துட்டு வரேன்" என்றான்  ராமுவின் மகன் சூர்யா. சொன்ன மாதிரி சூர்யாபோக அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டனர்.

"மாடியில உங்க மூணு பேர் ரூமும் மதியம் தாயம்மாவை விட்டுக் கிளீன் செஞ்சு வைச்சிருக்கு. போய் நீங்களெல்லாம் ஓய்வெடுங்க. நாங்களும் எங்க வீட்டுக்குப் போறோம். காலையில் பால் வாங்கிண்டு வந்து எழுப்பறேன்." ராமு மனைவியுடன் கிளம்ப, ஈஸ்வரன் கதவைப் பூட்டிக்கொண்டு வந்தார். "பசங்க வந்தா அவாளுக்கு வசதியா ரூமெல்லாம் சரி பண்ணனும்னு உங்க அம்மா விடாப்பிடியா மூணு அறைகளையும் ரீமாடல் செய்ய வைத்தா. இப்போ மூணுபேரும் சேர்ந்து வந்திருக்கீங்க ஆனா உங்க அம்மாதான் வீட்டில இல்லை." புலம்பும் தந்தையின் அருகில் சென்று" அப்பா,அம்மா நல்லபடியா வீட்டுக்கு வந்து நாங்க எல்லாரும் சேர்ந்து வந்ததைப் பார்த்து சந்தோஷப்படப் போறா பாருங்க. நாங்க யாராவது உங்க கூட கீழப் படுத்துக்கவா?" கணேசன் கேட்க, "அதெல்லாம் வேண்டாம்பா. ராத்திரி சாப்பிடற மருந்தோட உபயத்தில் நான் இப்ப தூங்கிடுவேன். நீ போய் படுத்துக்க."  ஈஸ்வரன் அறைக்குள் சென்றார்.

மறுநாள் காலை மூன்று ஜோடிகளும் கீழே வந்து உட்கார ராமு அனைவருக்கும் காபி கொண்டுவந்து வைத்தார். அடுப்படியிலிருந்து வந்த கொதிக்கும் சாம்பாரின் மணமும் வெண்பொங்கலின் வாசனையும் மூக்கைத் துளைத்தது. "உங்க அப்பா வழக்கம்போல வாக்கி்ங் கிளம்பிப் போயிட்டார் போலிருக்கு. கீழே இவங்க ரெண்டுபேரும் சுத்தி்ச்சுத்தி வரதால நாம எல்லாரும் மொட்டை மாடிக்குப் போய் பேசலாமே" மாலதி கிசுகிசுப்பாகச் சொல்ல மூன்று ஜோடிகளும் மாடிக்குச் சென்றனர்.  என்னதான் டாக்டர் சரியாயிடும் சொன்னாலும் பழைய படி உங்கம்மா எழுந்து உட்காருவாங்கறது சாத்தியம்னு தோணலை’ மாலதி பேச்சை ஆரம்பிக்க, ‘குழந்தைகளை ஊரில் விட்டுட்டு நாம் எவ்வளவு நாள் இப்படி இருக்க முடியும்?’ அடுத்தவள் பேச, ‘உங்க அம்மாவோட ராத்திரியே பேசி அவங்களை  குழந்தைகளுக்குத் துணையா போகச்சொல்லிட்டோமே அப்புறம் என்ன ;என்றான் ராகவன் எரிச்சலோடு. இப்ப இது மட்டும் பிரச்னையில்லை. அம்மாவுக்கு வேற மாதிரி ஆயிட்டா உங்கப்பாவை என்ன  பண்றது? அவரை யார் வைச்சு சமாளிக்கறது.? அதைப் பத்தி நமக்குள்ள ஒரு பிளான் இருக்கணுமில்ல?’’நீங்க சொல்றது கரெக்ட். அப்பாவுக்குக் காலையில் காபி முதல் இரவு டின்னர் வரை எல்லா சரியான ருசியோட கரெக்ட்டான நேரத்துக்குக் கிடைக்கணும் எதாவது கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் துர்வாசர் ஆயிடுவார். நாம மூணு பேருமே எம்ப்ளாயிட் இல்லாட்டாலும் தினமும் ஏதோ வேலையா வெளியிலபோக வேண்டியிருக்கும் இல்லையா? இவரைக் கூட வைச்சிண்டா அதெல்லாம் சாத்தியமான்னு யோசிக்கணும். ’ரஞ்சனியின் பேச்சால் கடுப்படைந்த சரவணன்  ‘நீங்களெல்லாம் வீட்டில் இருந்தாலும் எங்கம்மா மாதிரி நறுவிசா வேலை பார்க்க முடியாது. அதை முதல்ல புரிஞ்சுக்கங்க’’ என்றான். ‘உங்கம்மா மாதிரி நாங்க படிக்காதவங்க இல்லை எது சொன்னாலும் தலையாட்டிக் கேக்கறதுக்கு. உங்க அப்பா இப்படி எல்லாத்துக்கும் கெடுபிடி பண்ணி தன் விருப்பப்படி எல்லாத்தையும் நடத்திக்கற வழக்கத்தை உங்கம்மா ஆரம்பத்திலேயே சரிபண்ணியிருக்கணும்.’ மாலதி சொல்ல ‘நீங்க மூணு பேருமா எங்க அம்மாவுக்கு இந்த சப்ஜெகட்டுக்கு  கிளாஸ் எடுத்திருக்கணும் என்றான்  கணேசன் கிண்டலாக.  இதோட இந்த மீட்டிங் போதும். ஆஸ்பத்திருக்குப்போய்  அம்மாவைப் பார்ப்போம்” சரவணன் சொல்ல, ஆமாம் வாக்கிங்கிலிருந்து  உங்க அப்பா வந்திருப்பார். பெறாத பெண் சுவர்ணா விடிய விடிய உங்கம்மாவைப் பார்த்திண்டு இருந்திருக்கா. ஆனா நீங்களெல்லாம் பொறுப்பில்லாம இன்னும் இங்கே என்ன பண்றீங்கன்னு சத்தம் போடப்போறார்” மாலதி ஈஸ்வரன் போலப் பேச ரஞ்சனியும் கவிதாவும் ரசித்துச் சிரித்தனர். “ராமுவையும் அவர் மனைவியையும் பார்த்தாலே பத்திண்டு வரது. அண்ணா, அண்ணான்னு அவ அப்பாகிட்ட  வழியறதும் தாசானு தாசனாய் ராமு அப்பாக்கு ஓடிஓடி சேவை செய்யறதும் எதையோ பெரிசா பதிலுக்கு எதிர்பார்த்து செய்யறமாதிரி தோண்றது.” கவிதா கூற “இருக்கும் சுவர்ணா  கல்யாணம், அவ தம்பி படிப்பு இதெல்லாம் நடக்க நம்ப மாமனார் தானே படியளக்கணும்?” கேலியாக மாலதி கூற  அதை ரசித்தவாறே மூவரும் கீழே வந்தனர்.

குளித்துத் தயாரான மூவருக்கும் முன்பாக  சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன். “டிபன் வேண்டாம்  கஞ்சி போறும்ங்கறார்” அவருக்கு மாத்திரையை நீட்டியவாறே ராமு சொல்ல, “ நான் போய் சுவர்ணாவை வீட்டுக்கு அனுப்பறேன். அவ இன்னிக்கு ஆபீஸ் போகட்டும். நீங்களெல்லாம் டிபன் சாப்பிட்டுவிட்டு நிதானமா வந்தா போதும். மீனா  இவா வரும்போது எனக்கு வெறும் ரசஞ்சாதம் கொடுத்தனுப்பு. அதுக்குள்ள சமையல் ஆகாதுன்னா அப்புறம் ராமு எடுத்துண்டு வரட்டும்.” வாசலில் கால் டாக்ஸி வர, ”நாங்க யாராவது உங்க கூட வரவேண்டாமா” பிள்ளையின் கேள்விக்கு “அப்பறமா வாங்களேன்” என்றபடி காரில் ஏறிக்கிளம்பினார்.  “எல்லாருக்கும் தட்டு வைத்து ராமுவும் அவர் மனைவியும் பரிமாற””, நீங்க ரெண்டு பேரும் சாப்பிடலையா” ராகவன் கேட்க “சுவர்ணா வந்து ஆபிஸ் கிளம்பணும். நான் எங்க வீட்டுக்குப் போய் அவளுக்கு கிளம்ப ஒத்தாசை பண்ணனும். இவர் பெண்ணோட சாப்பிடுவார். அண்ணாக்குப் போட்ட கஞ்சி மிச்சமிருக்கு.எனக்கு அது போதும்.” சொன்னவாறே மீனா செல்ல, “எங்க மாமா உங்க பையனைக் காணோம்? “பரிட்சை வரதில்லையா,, வீட்டில் படிக்கிறான். காலையில் பழைய சாதம்தான் அவனுக்கு சாப்பிட பிடிக்கும். இதோ சுவர்ணா வந்துட்டா.....” ராமு சொல்ல, அம்மா எப்படியிருக்கா” “அப்படியேதானிருக்கா. ராத்திரி டாக்டர் வந்து பார்த்தார். மதியம் பதினோரு மணி வாக்கில் ஸ்பெஷலிஸ்ட் வருவாராம். எனக்கு அரைநாள் தான் ஆபீஸ் நேராக ஆஸ்பத்திரிக்கு வரேன்.” என்ற சுவர்ணாவை உறுத்துப் பார்த்த மாலதி “அதான் நாங்க எல்லாம் இருக்கோமே நீ வேறு எதுக்கு அநாவசியமா அங்க வரணும்?” மாலதியின் வார்ததைகளால் முகம் வாடியவளாய் சுவர்ணா தன் வீட்டிற்குச் சென்றாள்.

மதியம் அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு போனவர்கள் டாக்டர் பாலாவோடு வந்த ஸ்பெஷலிஸ்ட் சொன்ன வார்த்தைகளால் உற்சாகம் குன்றினார்கள். பேஷண்ட்டிற்கு வேறு எந்த கோளாறும் இல்லாததால் நிச்சயமாக சிகிச்சை பலனளித்து கண் திறப்பார். ஆனால் அதற்கு சிலநாட்கள் ஆகலாம். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் .“ ஈஸ்வரன் சாரை பீபி சுகர் டெஸ்ட் எடுக்க  கூட்டிட்டு வரச் சொல்றாங்க” வார்ட் பாய் கூப்பிட ,”வாங்கப்பா”  சரவணன் கிளம்ப, “நானே  போய்க்கிறேன்  நீங்களெல்லாம் அம்மாவோட இருங்க.”  அவர் நகர்ந்தவுடன் சரவணன், இவ அப்பாவுக்கு அடுத்த மாதம் சதாபிஷேகம் வரது. வெளிநாட்டில இருக்கற இவ அண்ணன் எல்லா ஏற்பாடுகளுக்கும் எங்களைத் தான் நம்பியிருக்கான்.” என்று முனகினான். இது எங்களோட இருப்பத்தைந்தாவது திருமண ஆண்டு. அதை. செலிபரேட் பண்ணற மாதிரி பசங்களோட பத்து நாட்கள் சிங்கப்பூர் மலேசியா டூர் புக் பண்ணியிருக்கோம். பையன் ராத்திரி போனில் ”நம்ப டூர் அவ்வளவு தானான்னு கேக்கறான்” மாலதி வருத்தம் தொனிக்க பேசி  நிறுத்த “ இந்த, ஆஸ்பத்திரி நெடி, மருந்து வாடை எனக்கு வயத்தைப் பிறட்டறது இது மாதிரி இன்னும் எவ்வளவு நாளுன்னு  தெரியாம இங்க இருக்கணும்னு நினைச்சாலே.........ஈஸ்வரன் உள்ளே வரவும் பேச்சு நின்றது. ஏதோ எமர்ஜென்சி கேஸ் வந்ததால நர்ஸ் போயிட்டா. சரி நான் சாப்பிட்டதும் நீங்களெல்லாம் கிளம்புங்க. இன்னிக்கு ராத்திரி நான்தான் இங்க இருக்கப் போறேன். டாக்டர் பாலாவைப் பார்த்து அதுக்கு பர்மிஷன் வாங்கிண்டுதான் வரேன். டியுட்டி நர்ஸ்ஸை வந்து அப்பப்போ பார்த்துக்கச் சொல்லியிருக்கறதால ஒண்ணும் பிரச்னை இருக்காது.” யாரையும் பதில் பேசவிடாமல் பேசியவாறே சாப்பிட்டு முடித்தவர் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இரவு அவருக்காக இட்லியோடு பிள்ளைகள் வர,  “பேசாம நீங்க மூணுபேரும் ஊருக்குப் போறேளா? உங்கம்மா கண் திறக்கறா மாதிரி தெரியலையே?”  அதைப் பத்தி இப்ப பேசவேணாமே. நாளைக்கு ஞாயிற்றிக்கிழமை. சுவர்ணாவோ உங்க மருமகள்கள் யாராவதோ காலையில கிளம்பி வந்தவுடன் நீங்க வீட்டுக்கு வந்துடுங்க. இடையில எதாவது தேவைபட்டாலும் உடனே போன் செய்யுங்க. நீங்க இங்க இரவு தங்கறதே எங்களுக்குப் பிடிக்கலை. உங்க பிடிவாதத்துக்கு ஒத்துப் போக வேண்டியிருக்கே”.  என்றான் கணேசன்  ஒண்ணும் கவலைப்படாம கிளம்புங்க. காலையில பார்க்கலாம்” அவர்களை அனுப்பிவிட்டு மனைவியின் எதிரில் அமர்ந்தார்.

காலை சீக்கிரமாக்க் காபியோடு ஆஸ்பத்திரிக்குச் செல்ல சரவணன் சுவர்ணாவின் ஸ்கூட்டியின் சாவியை ராமுவிடம் கேட்கும் சமயம் அவனது கைபேசி ஒலியெழுப்பியது. “சார், விடியற்காலை நான்கு மணி வாக்கில் திருமதி ஈஸ்வரன் காலமாகிவிட்டார். ஈஸ்வரன் இதை உங்களுக்குத் தெரிவிக்கும்படி சொன்னார். இப்போது அவர் டாக்டர் பாலாவின் அறையில் இருப்பதால் அவரோடு பேசஇயலாது.” தொடர்பு கட்டானது. மூன்று பேரும் அழுது கொண்டே ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அடுத்த இரண்டு மணிநேரத்தில் பர்வதத்தின் உயிரற்ற உடல் ஆம்புலனஸ்ஸில் வீடு வர, தொடர்ந்து வந்த காரிலிருந்து பிள்ளைகளோடு  வந்தார் ஈஸ்வரன். ஓடி வந்து அவர் அருகில் வந்த சுவர்ணா அடக்க இயலாமல் அழத்துவங்க “,இதுதான் நடக்கணும்னு விதி வேற என்ன சொல்ல” என்றார் நிதானமாக. சேதி கேட்டு தெருவே கூடிவிட்டது. ஒவ்வொருவரும் பர்வதத்தின் நல்ல குணத்தைப் பற்றிப் பேசி கண்ணீர் விட, ராமு அடுத்து ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கத் துவங்கினார்.

ஒரு கோப்பை மோரும் மாத்திரைகளையும் சுவர்ணா தர,  மறுக்காமல் வாங்கி அருந்தியவர், “பசங்களை அவங்க மனைவியோட என் ரூமுக்கு வரச் சொல்” என்றார். ஈஸ்வரன். ஒரு ஓரமாக நின்று கொண்டு கிசிகிசித்துக் கொண்டிருந்த அனைவரும் அறைக்குள் செல்ல, கதவை மூடினார் ஈஸ்வரன். ”சுமார் மூணு மணிக்கு முழிப்பு வந்து அவ பக்கத்தில உக்கார்ந்து இருந்தேன் திடீரென்று ஒரு முறை அவ உடம்பு தூக்கிப்போடறா மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில தலைமாட்டிலிருந்த மானிடர் நகராம நின்னது . .நர்ஸைக்  கூப்பிட்டேன் அவ உடனடியா டாக்டருக்குத் தகவல் தர, அவர்  வந்து பார்த்து இறந்துவிட்டதை உறுதி செய்தார். உடனடியா உங்க அம்மா ஆசை ஒண்ணை டாக்டரின் உதவியோடு செஞ்சு முடிச்சேன். அதுக்கு அப்புறம் தான் உங்களுக்குத் தகவல் தரச் சொன்னேன்.” “அப்படி என்னப்பா அம்மா ஆசைப்பட்டா?”  ராகவன் கேட்க, “உடல் உறுப்புதானத்தைப் பத்தி எங்கிட்ட ஏதாவது கேட்டுண்டே இருப்பா. போனமுறை என்னுடைய ரொடீன் செக்அப்புக்கு  பாலா கிளினிக்கிற்குப் போனபோது அவரிடம் இதுக்கு ரிஜிஸ்டர்  செஞ்சிருந்தோம். அதன்படி மருத்துவர்கள் செயல்பட்டு அம்மாவோட கண்கள், இதயம், சிறுநீரகங்களைக் கொடுத்தாச்சு.”  “அதுக்கு முன்னாடி எங்க கிட்ட ஒரு வார்த்தைக் கேக்கணும்னு உங்களுக்குத் தோணலையா?” ராகவன் கோபமாக கேட்க, பொங்கி எழுந்தார் ஈஸ்வரன். “உங்களை எதுக்குடா கேக்கணும்? உங்களோட நிஜமான கவலைக்கெல்லாம் தீர்வா உங்கம்மாபோய் சேர்ந்தாச்சு. புரியலையா? ஒருத்தன் பிளான் போட்டபடி சிங்கப்பூர் டூர் பேகலாம். அடுத்தவன் மாமனாரின் விழா ஏற்பாடுகளை நிம்மதியா கவனிக்கலாம், ஆஸ்பத்திரி நெடியிலிருந்து இன்னொருத்தர் தப்பிச்சாச்சு. என்ன அதிர்ச்சியா இருக்கா? நான் ரூமைவிட்டு வெளிய வந்தபேது வார்ட் பாய் பிளட் டெஸ்டுக்கு கொஞ்சநேரம் கழிச்சு வரச்சொன்னதால திரும்பி உள்ள நுழையப் போனவன் உங்க பேச்சைக் கேக்கும்படி ஆயிடுத்து.” ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தவர் “ முந்தா நாள் இரவு சரியாத் தூக்கம் வராம காலையில எழுந்து மொட்டைமாடியில உலாத்திண்டு இருந்தேன். அப்படியே சுவர் ஓரமா உக்கார்ந்து இருந்தப்ப தான் நான் இருக்கறது தெரியாம உங்க மகாநாடு நடந்தது. ஒரு வார்த்தை விடாம நானும் கேட்டேன். இப்ப உங்களுக்கு ஒண்ணு ஞாபகப்படுத்தறேன். நீங்க மூணுபேரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில எங்களை உங்க ஊருக்கு வரவைச்சீங்க. உங்க அம்மா “குழந்தைகள் அதிசயமா கூப்பிடறா. போலாமேன்னு சொன்னதால  எனக்கு இஷ்டமில்லாட்டாலும்  ஒத்துண்டு  கிளம்பி வந்தோம். ஆனா மூணு இடத்துலையும் நடந்த கசப்பான பல விஷயங்கள் என்ன..... யார் அதுக்குக் காரணம்ங்கறது அவாஅவா மனசுக்குத் தெரியும். அதுக்குப் பிறகு நான் இனி உங்க யார் வீட்டுக்கும் வரதில்லைன்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். ஒரு வேளை நான் முதலில் போய் உங்க அம்மா  இருந்திருந்தால்  அவ சுபாவப்படி எல்லாத்தையும்  மறந்துட்டு  மௌனமா சகிச்சிண்டு உங்க கூட இருந்திருப்பாளோ என்னவோ. அதனால இந்தக் கோபக்காரனைக் கூட வைச்சுக்க வேண்டி வருமோன்னு யாரும் பயப்படத் தேவையில்லை .பெறாத பெண் சுவர்ணாவும் ராமு அவன் மனைவி எல்லாருமே எங்களிடம் உண்மையான பாசத்தோடுதான் உழைக்கிறார்களே தவிர எந்த ஆதாயமும்  அவா எதிர்பார்க்கலை. ஆனா உங்கப் பேச்சையெல்லாம் கேட்டதில நானும் சில முடிவுகளுக்கு வந்திருக்கேன். இந்த வீட்டை என்னமாதிரி கோபக்கார, அனுசரித்துப் போகத் தெரியாத விடோயர்ஸ் நிம்மதியா தங்கக்கூடிய ஒரு ஹோமா மாத்தப் போறேன். ஏழை பணக்காரன் ஜாதி வித்தியாசம் கிடையாது. இந்தப் “பர்வத இல்லத்தின்” முதல்  அங்கத்தினர் நான்தான். ராமுவும் அவன் மனைவியும் தான் இதன் நிர்வாகிகள். மாதாமாதம் வர பென்ஷன் தொகை, பாங்கில் இருக்கற சேமிப்பு எல்லாத்தையும் வைச்சு செலவுகளைச் சமாளிச்சுடுவேன். என்னோட உழைப்பால கட்டின இந்த வீட்டைக் கோவில் போல பராமரிச்சு வந்த உங்க அம்மாவின் ஆத்மா இதை அறிஞ்சு சந்தோஷப்படும்.  ஊருக்காகப் பால் குடிக்கறதுன்னு வசனம் சொல்லுவாளே அது போல நீங்க உங்க அம்மாவின் உடலுக்குச் செய்யவேண்டிய காரியங்களை  முடிச்சிண்டு ஊருக்குக் கிளம்பலாம். மத்த சடங்குகள் என்னைப் பொறுத்தமட்டில் தேவையில்லை. இன்னும் சிறிது நாளில் நான்செய்ய வேண்டிய  சில ஏற்பாடுகளை செஞ்சுட்டு தகவல் சொல்றேன். அம்மா நினைவாக  ஒரு அன்னதானம் ஏற்பாடு பண்ணி அதையே இந்த் இலத்தினோட ஆரம்பநாளா பண்ணலாம்னு இருக்கேன். நீங்களெல்லாம் அன்னைக்கு வந்தா மூணு மருமகள்களுக்கும் பேத்திகளுக்கும் உங்கம்மா ஆசையா பண்ணி பாங்கில் வைச்சிருக்கற நகை எல்லாம் தந்து விடுகிறேன். அது தவிர இந்த வீட்டுல் உள்ள பொருட்களில் உங்களுக்கு தேவையானதையும் நீங்க எடுத்துண்டு போகலாம்.  அவள் தினப்படி போட்டிண்டு இருந்த  ஒரு ஜதை வளையல் ,தோடு , திரு மாங்கல்ய செயின் எங்கள் பெண் சுவர்ணாவுக்கும் ,அம்மாவின் மூக்குத்தியை என் உடன் பிறவா சகோதரி மீனாவுக்கும் தரப்போறேன்........ வெளியில் சாஸ்திரிகள் குரல் கேக்கிறது. போய் வேலையை ஆரம்பிங்க......கடைசியா ஒண்ணு கோழி மிதிச்சு  குஞ்சு முடம் ஆகாது, ஆனா குஞ்செல்லாம் ஏறி மிதிச்சிருக்கற இந்த சேவல் இப்ப முடமானாலும் சீக்கிரம் சமாளிச்சிண்டு எழுந்துடும்.” தலை கவிழ்ந்து கண்களில் பெருகும் நீரோடு  அவர்கள் வெளியேற, நீண்ட நேரம் பேசி  தொண்டை வரண்டு போனதால் செம்பிலிருந்த நீரை கடகடவென குடித்தார் ஈஸ்வரன்.

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu