மனு நீதி

                                                               மனு  நீதி 


                                          -சாந்திநாதன் 

பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தன் பள்ளிக்கூட கதைகள் ஏதையோ சொல்லிக் கொண்டு தட்டில் இருக்கும் பொங்கலை  சாப்பிடும் ராகவ்வைப் பார்த்தவாறே செருப்புகளைக் கழற்றிய அனுஷா ,” என்னமா உனக்கும் அப்பாவுக்கும் மிச்சம் வைக்காம இவனுக்கு எல்லாத்தையும் கொடுத்திட்டியா?” சொல்லியவாறே மகன் தட்டிலிருந்து ஒரு ஸ்பூன் பொங்கலை வாயில் போட்டுக் கொண்டவள் “எப்படியம்மா நீ பண்ற பொங்கல் மட்டும் இவ்வளவு டேஸ்டாயிருக்கு?” என்றாள். “அம்மா, கொத்சோட சாப்பிட்டுப் பார். இன்னும் சூப்பராயிருக்கும்” சொன்னபடியே கொத்சைக் கலந்து அம்மாவின் வாயில் ஒரு ஸ்பூன் பொங்கலை ஊட்டினான் மகன். “அம்மாவுக்கு நான் வேற கொண்டு வரேன் நீ சாப்பிடு கண்ணா “என்ற பத்மா, “மத்தியானம் உங்க சமையல்காரி சரசா போன் செஞ்சா.அவ குழந்தைக்கு ரொம்ப பீவரா இருக்கறதால வேலைக்கு வரமாட்டாளாம். உனக்கும் உங்க அக்கா சுவாதிக்கும் சொல்லச் சொன்னா. அப்பத்தான் உங்க அப்பாவும் கிளம்பிண்டு இருந்தார். அவர் தான் உன்னோட மாஸ்டர்பீஸ் பொங்கல் பண்ணிடு. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவா என்றார். அதனால எல்லாருக்கும் சேர்த்துதான் பண்ணியிருக்கேன் .இப்ப சாப்பிடறயா?  மிருதுளா கொஞ்சம் முன்னாடி காலேஜிலிருந்து வந்தா.  சுவாதி, அவகணவர்,மிருதுளா எல்லாரும் ஏதோ ரிசப்ஷனுக்குப் போறாளாம் அதுக்குள்ள அசைன்மெண்டு எதுவோ முடிக்கணும்னு அவ அவசரமா கொஞ்சம் பொங்கலை சாப்பிட்டு விட்டு ஓடிட்டா. பால் கூட வேண்டாம்னுட்டா, . அவ அப்பாவுக்குப்  பொங்கல் பிடிக்குமேன்னு நான் கொஞ்சம் ஹாட் பாக்ஸில் போட்டுக்  கொடுத்தனுப்பிச்சேன். கிளம்பறதுக்கு முன்னாடி அடி வயித்துக்கு ஆதாரமாய் சாப்பிட்டுப் போகலாமில்லையா? இரு உனக்கு தட்டில எடுத்துண்டு வரேன்.”

     

         “இப்ப வேண்டாம்மா. கோபால் வந்த பிறகு நாங்களே இங்கு வந்து அப்பாவோட சாப்பிடறோம். இவர்  நாளைக்கு ஆபிஸ் வேலையா மும்பை போறார். அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு சொன்னார். ராகவ், அம்மா வீட்டுக்குப் போறேன். நீ கொஞ்ச நேரம் விளையாடிட்டு ஹோம் ஒர்க் பண்ண வரணும் தெரிஞ்சுதா? “ அவனுக்குப் பூஸ்டு தரவேயில்லை. இருடா குழந்தை” “ பாட்டி, பொங்கல் நிறைய சாப்பிட்டிருக்கேன். பால் வேண்டாம்.” சொன்னபடியே ராகவ் வெளியே ஓடினான்

         மகனின் ஸ்கூல் பையையும் தன் கைப்பையையும் எடுத்துக் கொண்டு கிளம்பியவளை “ ஒரு நிமிஷம் இரு அனு. விளக்கு ஏத்திட்டு வரேன் குங்குமம் எடுத்துண்டு வரேன்.” பத்மா உள்ளே சென்ற அடுத்த நிமிடம் அனுவின் கைபேசியில் அப்பா என்ற எழுத்தோடு அவரது எண்ணிலிருந்து கால் வந்தது.  “சொல்லுங்கப்பா”  “யாரு வினாயகம் சார் மகள் அனுவா..... உங்கம்மா அருகில் இருந்தா கொஞ்சம் தள்ளி வாம்மா. நான் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டுக்காரன் சுந்தரமூர்த்தி பேசறேன்.” அவசரமாக வாசலுக்கு வந்தவள், “ சொல்லுங்க சார். அப்பா உங்க வீட்டுக்கு வந்திருக்காறா?”  “இல்லையம்மா வழக்கம் போல ஆறு மணி பஸ்ஸை விட்டு இறங்கி உங்க அப்பா ரோடை கிராஸ் செய்யும் போது எதிரில் வேகமா வந்த கார் இடிச்சு கீழே விழுந்துட்டார். கார்காரன் நிறுத்தாம போயிட்டான்.  வாக்கிங் போயிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த நான் கூட்டத்தைப்  பார்த்திட்டு எட்டி பார்த்தா ,நம்ம சார்.... அதுக்குள்ள நம்ம ஏரியா ஆள் போன் செஞ்சு ஆம்புலன்ஸ் வரவழைச்சுட்டார். நான் ஆம்புலன்ஸில் போறேன். உனக்கும் உங்க அக்காவுக்கும் தகவல் சொல்லிட்டேன். மெயின் ரோடில் இருக்கும் ஈஸ்வர் கிளினிக்கு வா.”. போன் கட்டானது.

 

      குங்குமச்சிமிழுடன் கூடத்தில் நிற்கும் தாயைத் திரும்பிப் பார்த்த அனுவிற்கு பதட்டம் அதிகமானது. அதே நேரம் எதிர்புறத்தில் பதைபதைப்புடன் வரும் மிருதுளாவைப் பார்த்தவுடன் அவளை நோக்கி விரைந்தாள். “சித்தி, தாத்தாவுக்கு.....” தேம்புபவளை “தெரியும்டா செல்லம்.நீ கண்ணைத் துடைச்சிண்டு உள்ளே போ. பாட்டிகிட்ட இப்ப எதுவும் சொல்லாதே. நான் எங்கேனு கேட்டா எதோ  போன் வந்தது பேசறான்னு  எதையாவது சொல்லி சமாளி. ராகவ்வையும் உள்ளே கூப்பிட்டுக்க” கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு நடக்கத் துவங்கிய அனு எதிரில் காலியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறி ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள்.

         

          “ கொஞ்சம் வேகமாப் போங்கஎங்க அப்பா ஆக்ஸிடெண்ட் ஆகி  ஆஸ்பத்திரியிலிருக்கார்.” “அம்மா, நான் இந்த ஏரியா ஆளுதான்.சாரையும் அம்மாவையும் நல்லாத் தெரியும். பஸ் ஸடாண்டுல எல்லாரும் கூட்டமா பேசிக்கறதைப் பார்த்து நம்ம சாராயிருக்குமான்னு டவுட் வந்து தான் நான் அவர் வீட்டுப் பக்கம் வந்து விசாரிக்கலாம்னு வந்தேன். தங்கமான குணம் .அவருக்கு ஒண்ணும் ஆகாது.” சொல்லிக்  கொண்டே ஆஸ்பத்திரிக்குள்     நுழைந்தான்.  “ரொம்ப தாங்க்ஸ்பா” பணத்தைக் கொடுத்து விட்டு பதட்டமாக நுழைபவளை ஓடி வந்து அணைத்துக் கொண்ட சுவாதி “அனு, அப்பா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருடி” எனக் கதறினாள். “ஐயோ நிஜமாவா சொல்ற?”  ஆமாம் அனு கீழே விழுந்ததிலே தலையில ஆழமா அடிபட்டு அதிக இரத்தம் போயிருக்கு. ஆஸ்பத்திரிக்கு வரும் போதே அவர் மிகவும் மோசமான நிலையில் இருந்திருக்கார். சிகிச்சை ஏதும் பலனளிக்கவில்லை என்று டாக்டர் சொன்னார். “ போகவர ஆட்டோ ஏற்பாடு பண்ணித் தரோம்னு எத்தனை தடவை சொன்னோம். அப்பா பிடிவாதமா மறுத்துட்டார்.” “சுவாதி, இப்போ அதைப் பற்றி பேசி என்ன பிரயோசனம். உங்க அம்மாவுக்கு இதை எப்படிச் சொல்லப் போறோம்னு நினைச்சுப் பார்.” சந்துரு கூற, “ஆமாங்கஇந்த அதிர்ச்சியை அவங்க எப்படித் தாங்குவாங்கன்னு தெரியலையே......” பெண்கள் இருவரும் அழுகையை அடக்கமுடியாமல் தவிக்க, மிருதுளாவிடமிருந்து போன் வந்தது. “அம்மா, சுந்தரம் அங்கிள் மனைவியும் இன்னும் ரெண்டு  மாமிகளும் வந்தாங்கஅவங்களோட திடீர் வருகையால பாட்டி கலவரமாகி அவங்களைத் துருவித்துருவி கேள்விகேட்டு தாத்தாவுக்கு அடிபட்டு இருப்பதைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. விஷயத்தைச் சொல்லச் சொல்லவே அப்படியே மயங்கிட்டாங்கமா. எல்லாருமா ஆசுவாசப்படுத்தி எழுப்பி உக்கார வச்சுருக்கோம். தாத்தா எப்படி இருக்காரு? நீங்க யாருமே ஏன் போன் போடலை.?””  கண்ணம்மா,, பாட்டிக்கு எதாவது குடிக்கக் கொடு. நாங்க எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவோம்”  தாத்தாவைப் பாக்காம தண்ணி கூட குடிக்க மாட்டேங்கறாங்க. ராகவ் வேற ஒரே அழுகை. ரொம்ப பயமா இருக்கும்மா....... தாத்தா எப்படியிருக்காருன்னு சொல்லவேயில்லையே....” விம்மலைக் கட்டுக் படுத்த இயலாமல் போனைத் துண்டித்தாள் சுவாதி.

 

           தயங்கியபடியே அங்கு வந்த சுந்தரமூர்த்தி அவர்களிடம் ஒரு தாளை நீட்டினார் “சார் மேல மோதின கார் நம்பர் இதுதான். விபத்தை நேரில் பார்த்த கூட்டத்தில ஒருத்தர் நம்பரை நோட் செஞ்சிருக்காரு. நம்ம ஏரியாவில புதுசா ஒரு பெரிய வீடு கட்டிக் குடி வந்திருக்கவங்க வீட்டு வண்டின்னும் சொன்னாரு. நீங்க ரெண்டு பேரும் மனசை கொஞ்சம் தேத்திக்கிட்டா தானே அம்மாவை இந்த அதிர்ச்சியிலேந்து மீட்கமுடியும். மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் தலைமை டாக்டர்கிட்ட பேசி போஸ்ட்மார்டம் செய்யாம டெத் சர்டிபிகேட் வாங்கப்  போயிருக்காங்க. நான் ஆம்புலன்ஸ் புக் பண்ணி்டேன். உங்க ரெண்டு பேருக்கும் குடிக்க ஏதாவது வாங்கி வரட்டா?”” வேண்டாம் சார். சமயத்தில நீங்க செஞ்சிருக்கற உதவிக்கு......” அனு சொல்ல, நான் சமயத்தில போய் என்னம்மா பிரயோசனம். சாரைக் காப்பாத்த முடியலையே?”.......

 

               துக்கமும் களைப்பும் மேலோங்க கண்மூடி அமர்ந்திருந்த சகோதரிகள் இருவரும் தங்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தனர். அரசுப் பள்ளியில் வாத்தியாராக வேலைப் பார்த்து ஓய்வு பெற்றவர் வினாயகம். மாணவர்களிடம் அவர் ஒரு தந்தையைப் போல பழகிய பண்பு, நேர்மை தவறாத நடத்தை, உண்மையான உழைப்பு ஆகியவை அவருக்குப் பரிசாக நல்லாசிரியர் என்ற புகழைத் தேடித் தந்து நிம்மதியான ஓய்வுக் காலத்திற்கு உறுதுணையாக இருந்தது. இறைவன் கொடுத்த வரமாக அவர் கைபிடித்த மனையாள் பத்மா கணவரின் மனமறிந்து நடந்து குடும்பத்தை  அழகான கோயிலாய் நடத்தி வந்தாள். இவ்வினிய இல்லறத்திற்கு இனிமை சேர்ப்பது போல் முதல் பெண் சுவாதியும் அடுத்து அனுஷாவும் பிறந்தனர். “ரெண்டும் பொட்டைப் பிள்ளைங்களா பிறந்திருக்கே” சில உறவுகளின் ஏளனம் கலந்த அனுதாபக் குரலோ “என்னதான் பார்க்க ரம்பையா ரதியா இருந்தாலும் இவனுக்கு வர சொற்ப ஓய்வூதியத்தை வச்சி சொத்து பத்து ஏதுவுமில்லாத வினாயகம் எப்படி இதுங்களை கரையேத்துவான் என்ற உற்றாரின் விமர்சனங்களோ தம்பதிகளை மனம் வாடச்செய்யவில்லை. மாறாக செல்வத்தில் சிறந்த கல்விச் செல்வத்தை என் கண்மணிகளுக்கு எப்பாடு பட்டாவது  வாரி வழங்க வேண்டும். வாழ்வில் அவர்கள் உயர்வு பெற இதுதான் சிறந்த வழியென வினாயகம் உறுதிபட நம்பினார். மகள்களின் மனதிலும் ந்த எண்ணத்தை வே௹ன்றச்  செய்தார். தாயின்  அழகும் அடக்கமும் தந்தையின் அறிவாற்றலும் மதி நுட்பமும் இருவருக்கும் இறைவன் தந்த கொடையாய் இயல்பாய் அமைய பள்ளிப் படிப்பு முதல் கல்லுரியில் முதுகலைப் படிப்பு வரை உதவித்தொகையில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

 

          மூத்தவள் சுவாதி  வணிகவியல் முதுகலைப் பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே கல்லூரியில் நடந்த காம்பஸ் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு  ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தாள்.. இளையவள் பள்ளி இறுதி வகுப்பில் பெற்ற  அதிக மதிப்பெண்களால் அவள் ஆசைப்படி பொறியியல் பட்டப் படிப்பில் சிரமமின்றி சேர   முடிந்தது. தமக்கையின் தூண்டுதலால் அவள் கணிணித் துறை வகுப்புகளுக்கும் சென்று அத்துறையில் பெற்ற சான்றிதழ்கள்  படிப்பு முடிவதற்குள் ஒரு  மென்பொருள் நிறுவனத்தில்  வேலையில் அமர உறுதுணையாக இருந்தது.

 

       .ஒரு நண்பரின் இல்லத் திருமணத்திற்குச் சென்ற வினாயகத்தின் குடும்பத்தை அந்நண்பர் தன் உறவினர் ஒருவருக்கு அறிமுகப் படுத்தினார்.  அவருக்கும் அவரது மனைவிக்கும் சுவாதியைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது. தொடர்ந்து அவர்களோடு உரையாடியதில் தங்கள் மகனுக்கு சுவாதி மிகப் பொருத்தமாக இருப்பாள் என்று தீர்மானித்து விட்டனர். அந்தஸ்த்தில் தங்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ஆயிற்றே என்ற வினாயகம் குடும்பத்தினரின் எண்ணத்திற்கு மாறாக அவர்களின் நட்புணர்வோடு கூடிய பண்பும் அநாவசிய அலட்டல் இல்லாத இயல்பும் அவர்களுக்கும் திருப்தி அளிக்கவே செய்த்து. பெண் பார்க்க வந்த சந்துரு சுவாதியின் நிபந்தனைப் படி அவளது பெற்றோரின் பராமரிப்பு மற்றும் தங்கையின் எதிர்கால வாழ்க்கை எல்லாவற்றிலும்  தன்னால் எந்த இடையூறும் இருக்காது என்பதையும் அவள் எப்போதும் போல அவர்கள் தேவைகளைப் பொறுப்பேற்று நிறைவேற்றலாம் என உறுதி கூறியதால் விரைவில் அவர்கள் திருமணம் இனிதே நடந்தது.

 

         அனுவும் வேலையில் சேர்ந்து குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிது ஏற்றம் காணத்துவங்கியது. இந்நிலையில் சுவாதி ஒரு ஆண்மகவைப் பெற்றாள். பிரசவ விடுப்பு முடிந்து தொடர்ந்து வேலைக்குச் செல்லத் துவங்கும் போது  குழந்தையை பார்த்துக் கொள்ள சந்துருவின் பெற்றோரின் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. கோவையில் மருத்துவராக இருக்கும் மூத்தமகனிடம் அவர்கள் இடம் மாற, வினாயகம் பத்மா அந்தப் பொறுப்பை மனமுவந்து ஏற்றனர் .சந்துரு  வழி உறவினனான கோபால் பணி இடம் மாறி அதே நகரத்திற்கு வந்தவன் சந்துருவைப் பார்க்க அடிக்கடி வீட்டிற்கு  வருகை தந்து அக்குடும்பத்தில் எல்லாருடைய அன்புக்கும் பாத்திரமானான். ஓரளவு வசதி படைத்தவனாக இருந்தாலும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து மாமாவிடம் வளர்ந்த அவன் உறவுகளுக்கு ஏங்கி வந்ததால் இவர்களோடு ஒன்றிப் பழகி அனுவைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை சந்துரு வழியாக வெளிப்படுத்தி எளிய முறையில் திருமணமும் நடந்தேறியது.

 

       அடுத்த வருடமே அனுவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஓரிரு மாதங்களில் வினாயகம் பணி ஓய்வு பெற்றார். அதுவரை அரசினர் குடியிருப்பில் இருந்த அவர்கள் வீடு மாறவேண்டிய கட்டாயம். தினமும் குழந்தைகளைப் பெற்றோரிடம் கொண்டுவிட்டு வேலைக்குச் செல்வதும் திரும்ப வந்து குழந்தைகளைக் கூட்டிச் செல்வதற்கும் மாற்றாக ஒரே ஏரியாவில் அருகருகே இருப்பது நல்லது என ஒரு மனதாகத் தீர்மானம் செய்தனர். பத்மாவின் வீட்டு நிர்வாகத் திறமையால் அவள் சேமித்த தொகையில் பல வருடங்களுக்கு முன்பாக அவர்கள் வாங்கிய மனையொன்று அன்று அதிகம் வளர்ச்சியடையாத ஏரியாவில் இருந்தது. ஆனால் தற்போது நகர விரிவாக்கல் காரணமாக அது நன்கு வளர்ச்சி பெற்ற இடமாகி அரசாங்க அப்ரூவலோடு  மனைகள் விற்பனை நடந்து வந்தது. சந்துரு,கோபால் வினாயகத்தின் மனைக்கு அருகிலேயே கிடைத்த மனைகளை வாங்கி உடனடியாக வீடு கட்டவும் துவங்கி விட்டனர். அவரவர் ரசனைக்கும் வாழ்க்கைத் தரத்திற்கேற்பவும் அழகிய இரு பங்களாக்கள் உருப்பெற்று  வரத்துவங்கியது. மகள்கள் இருவரும் பெற்றோர் விருப்பப்படி அவர்கள் இடத்தில் அத்தியாவசிய வசதிகள் கொண்ட ஒரு எளிய வீட்டை பெற்றோருக்குக் கட்டித்தந்தனர். வினாயகம் கட்டிட வேலைகளை  மேற்பார்வையிடுவதற்கு அன்றாடம் சென்று வர வசதியாக சிறிது தூரத்தில் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து எல்லாரும் ஒன்றாகத் தங்கி வந்தனர். எவ்வித இடர்பாடும் இன்றி குறித்த காலத்தில் வீடுகள் தயாராகி புதுமனை புகுவிழாவும் நிறைவாக நடந்தது.

 

        வினாயகம் குழந்தை வளர்ப்பில் பத்மாவிற்கு உதவி செய்ததோடு மட்டுமின்றி அக்கம்பக்கத்தில் இருந்த வசதி குறைந்த குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இலவசமாக வகுப்பு எடுத்து வந்தார். அதனால் ஏரியா வாசிகளின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர் ஆனார். ஒத்த வயதினரான சுந்தரமூர்த்தி இவரது சிறந்த நண்பரானார். அவர் மூலமாக சிறிது தொலைவில்  இயங்கிவரும் ஆதரவற்ற சிறுவர்களுகான பள்ளியைப் பற்றி தெரிந்து கொண்டவர் ஒருநாள் அங்கு நேரில் சென்றார்.

       ஒரு பழைய வாடகை இல்லத்தில் பள்ளியும் குழந்தைகள் தங்கும் விடுதியும் இருத்தது. சுமார் முப்பது குழந்தைகள் வரை தங்கிப்படித்து வந்த அந்த இல்லத்தின் பொறுப்பாளர் முரளி தன்  கைப்பணத்தைக்கொண்டும் சில நல்ல மனிதர்களின்  நன்கொடைகள் மூலமாகவும் இயன்றவரை இல்லத்தை பற்பல சிரமங்களுக்கிடையே நடத்தி வந்தார். அரசாங்க உதவித் தொகைகளுக்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கும் எவ்வித பலனுமில்லை. ஆசிரியர் பணிக்கு வந்தவர்களும் தரப்பட்ட சொற்ப ஊதியத்தைக் காரணம் காட்டி சிரத்தையின்றி கற்பிப்பதும் அடிக்கடி வேலைக்கு வராமல் இருக்கும் அவலநிலை ஒருபுறம் என்றால் விடுதியின் ஒழுகும் கூரைகளும், குடிநீர் பற்றாக்குறை, முறையற்ற மின்சாரத் தொடர்பு  போன்ற சிக்கல்கள் மறுபுறம் இருந்தாலும் சிரமங்களுக்கிடையே பள்ளியைத் தொடர்ந்து நடத்தும் முரளியை மனமார பாராட்டினார் வினாயகம்.

 

         “முரளி உங்க தொண்டு உள்ளத்தை ரொம்பப் பாராட்டணும். நீங்க செய்யற  இந்த சேவையில் நானும் பங்குபெற ஆசைப்படறேன். பணம், காசால உதவற அளவுக்கு எங்கிட்ட வசதியில்லை. ஆனா தினமும் மாலை வேளைகளில் இங்குவந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர என்னால் முடியும்.”  என்னால் சம்பளம் ஏதும் தரமுடியாதே” தயக்கமாய் முரளி கூற, “ஊதியத்தை எதிர்பார்த்து நான் இதைச் செய்வதாக நான் சொல்லவில்லை.  ஒரு குடும்பத் தலைவனா என் கடமைகளை நிறைவேற்றிவிட்டேன். என் குழந்தைகளும் அவர்கள் குடும்பங்களும் எங்களை நிம்மதியா ஆனந்தமா வாழவைச்சிண்டு இருக்கற இந்த நிறைவான நிலையில் சமுதாயத்திற்கு என் பங்களிப்பா இதை செய்ய விரும்பறேன். மதியம் மூன்று மணி வாக்கில் எங்கள் ஏரியாவிற்கு வர பேருந்து எண் 145 உங்கள் பள்ளி வாசலில் நிற்கிறது. அதே வண்டி 6_6.30மணிக்கு இங்கு வருகிறது. அதில் திரும்பிப் போய் விடலாம். அதில் தான் நான் இப்போது வந்தேன். எனவே எனக்கு இங்கு வருவதில் எந்த சிரமமுமில்லை. கி திரும்பிச் செல்ல பேருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில் அங்கிருந்த குழந்தைகளோடு பேசியும் முரளியோடு கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்தும் நேரத்தைக் கடத்திப் பின் வீடு வந்து சேர்ந்தார்.

 

       அன்று இரவே மனைவி. மாப்பிள்ளைகள்,  மகள்களிடம் இதுபற்றிப் பேசினார். ”எதுக்கு மாமா இந்த வயதில் இந்த அலைச்சல்?”  மாப்பிள்ளை கேட்க, கடவுள் அருளில் எனக்குப் பெரிதாக எந்த உடற் கோளாறும் இல்லை. என் பேரக் குழந்தைகளும் என் வழிகாட்டுதல் இன்றி தங்கள் பொறுப்புணர்ந்து பாடங்களைப் படிக்கிறார்கள். அப்படியே அவர்களுக்கு என் தேவை இருப்பினும் ஏழு மணிக்குள் நான் வீடு வந்து விடுவேனே.....” “சரிப்பா, நீங்க ஆசைப்படற மாதிரிப் போயிட்டுவாங்க. ஆனால் போகவர ஒரு ஆட்டோ அரேஞ்ச் பண்ணிடறோம்.” ......மகள் முடிக்கும் முன் “அதெல்லாம் வேண்டாம். மத்தியான வேளையில் பஸ்ஸில்கூட்டமே இருக்காது. வீட்டிலிருந்து  பஸ் ஸ்டாப்பிற்கு அஞ்சு நிமிஷத்தில போயிடலாம். அந்த பள்ளி வாசலிலே பஸ் ஸ்டாப்.”  பிடிவாதமாக பஸ்ஸில் பள்ளிக்குச் செல்லத் துவங்கி விளையாட்டுப் போல் நான்கு வருடங்கள் ஓடிவிட்டன.

      

      “பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து விட்டது. நாம கிளம்பலாம்”. காத்திருந்த ஒரு மணிநேரம் யுகமாக நீண்டு  முடிவுக்கு வர, “சார் நான் ஆம்புலன்ஸ்ஸில் ஏறிக்கறேன். நீங்க அவங்கஅவங்க காரில் முன்னாடி கிளம்புங்கஉங்க அம்மாவிடம் பக்குவமா செய்தியைச் சொல்லுங்க”. மௌனமாகத் தலையசைத்தபடி காரில் வீடு வந்து சேர்வதற்குள் உடல் ஆம்புலன்ஸ்ஸை விட்டு வீட்டிற்குள் வந்து இறக்கப்பட்டது. உணர்வற்று மயங்கி விழுந்த தாயை தேற்றும் வழிதெரியாத மகள்களும் கதறி அழுதனர்.

 

        மறநாள் காலையிலேயே திரண்டு வந்த ஜனத்திரள் வினாயகத்தை வாய்ஓயாது புகழ்ந்தும் காரை ஏற்றிக் கொன்றவனை மனதார சபித்தும் குமுறிக் கொண்டிருந்தனர். தாய்தந்தையற்ற கோபால் முன்வந்து அவர் மகனாய் இறதிக்கடமைகளைச் செய்து முடிக்கசகல மரியாதைகளுடன் வினாயகத்தின் பூதஉடல் எரியூட்டப்பட்டது.

 

       வீடு திரும்பி யாவரும் மூலைக்கொருவராய் அமர்ந்திருக்க,தகவல் அறிந்த முரளி ஓடோடி வந்தார்.” கடைசி முறையா அவரைப் பார்க்கக் கூட முடியாத பாவி ஆகிட்டேனே. சாரின் வழிகாட்டுதலால் படிப்பில் முன்னேறி வந்த இல்லக் குழந்தைகளின் நிலை திரும்பவும் பழைய மாதிரியே ஆயிட்டதே.” பத்மாவின் காலடியில் அமர்ந்து புலம்புபவரின் பேச்சை இடைமறிப்பது போல் தயங்கியபடியே ஒரு தம்பதியர் உள்ளே வந்தனர். பத்மாவின் அருகில் வந்து நடுங்கும் கரங்களைக் கூப்பி வணங்கி நிற்க, “யார் இவர்கள்” என்பதுபோல் ஏறிட்டாள் பத்மா.

 

        “அம்மா, எங்க பையன் தான் உங்க கணவர் மேல கார் ஏத்தின பாவத்தைச் செஞ்சவன். பக்கா லைசென்ஸ் இல்லாத நிலையில்  எங்களுக்குத் தெரியாம காரை எடுத்திட்டுப் போனவன்  விபத்து நடந்ததும் பயந்து போயி நிறுத்தாம வீடு வந்துட்டான். மெள்ள விபரம் தெரிஞ்சு விசாரிச்சப்பதான் அவர் இறந்து விட்டாருங்கறது தெரிஞ்சுது.....” அவரைப் பத்தி இந்த ஏரியாவில ஒருத்தொருத்தரும் பேசறதைக் கேக்கக்கேக்க அவனோட தப்பு இன்னும் பூதாகாரமா எங்களுக்குத் தெரியுது.....” கணவர் நிறுத்த, “இருந்தாலும்  பெத்தவங்க என்ற முறையில்  வெக்கத்தை விட்டு உங்ககிட்ட மடிப்பிச்சை கேட்டு வந்திருக்கோம். மறுக்காம உதவுங்கம்மா” சொன்னபடி பத்மாவின் காலில் விழுந்து வணங்கினாள் அந்தப் பெண்.

      

     “என்ன உதவிக் கேக்கப் போறீங்கஉங்க பிள்ளை மேல கம்ப்ளெய்ண்ட் கொடுக்கவேண்டாம்னு தானே? அதெல்லாம் முடியாது. விபத்தை நேரில் பார்த்தவங்க  போலீஸ் ஸ்டேஷனுக்கு எங்ககூட வந்து சாட்சி சொல்லத் தயாரா வந்திருக்காங்கநீங்க கிளம்புங்க. நாங்களும் இப்போ ஸ்டேஷனுக்குப் போகணும்.” சந்துரு கோபமாகக் குரல் எழுப்பினான். “ சார், உங்க நியாயமான கோபம் புரியுது. ஆனா இளவயதுக்குரிய அவசரத்தாலயும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமலும் எங்க மகன் அறியாம செஞ்ச இந்தத் தப்பை எண்ணி அவனும் வருந்தி அழுதுக்கிட்டு இருக்கான்.அவனுக்கு வெளி நாட்டில் மேற்படிப்புக்கு அட்மிஷன் கிடைச்சிருக்கு. இது அவன் வாழ்நாள் லட்சியம். கோர்ட், கேஸ் எல்லாம் வந்தா அவனது எதிர்காலமே என்னவாகும்னு மனசொடிஞ்சு உக்காந்திருக்கான்.” ....”சிறிது இடைவெளி விட்டவர்,” அதனால இந்த பாவகாரியத்துக்கு பிராயச்சித்தமா நீங்க என்ன கேட்டாலும் நாங்க செய்யத் தயார்....” “ எங்க அப்பா உயிரைத் திருப்பித் தரமுடியுமா உங்களால? எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு.? கிளம்புங்க” ஆத்திரப் படும் அனுவைக் கையமர்த்தினாள் பத்மா.

 

       “இந்த கேசை வாபஸ் வாங்கினா பதிலுக்கு நீங்க எவ்வளவு தருவீங்க?” அமைதியாகக் கேட்கும் பத்மாவை அதிர்ச்சியுடன் எல்லாரும் பார்க்க,”அம்மா என்ன பேசறீங்க? ”பெண்ணின் அதட்டலைக்   காதில் வாங்காமல் “உங்களால் அதிகபட்சமாக எவ்வளவு தொகை தரமுடியும்?” திரும்பவும் கேட்பவளைப் பார்த்து,”அந்தப் பாவப் பணம் நமக்கு எதுக்கு அத்தை?” கோபால் கேட்டான்

 

     “அப்பாவோட உயிருக்கு விலை பேசற எண்ணம் எப்படீம்மா உனக்கு வந்தது.?  ஒரு வேளை நாங்களெல்லாம் உன்னை  கைவிட்டு விடுவோம்னு பயப்படறியா?.... நேத்து ராத்திரி உன் மூத்த பேரன் விஷயம் கேட்டுத் துடிச்சிட்டான். பிலானியிலேந்து நான் உடனடியா  வர முடியாதே தாத்தாவின் சிரிச்ச முகத்தைக் .கடைசியா பாக்கற அதிர்ஷ்டம் எனக்கு இல்லாம போச்சேன்னு அழுதான். அப்போ அவன் ஒரு சம்பவத்தை ஞாயபகப் படுத்தினான். ஒரு வாட்டி அவன் டூவீலரில் வீட்டுக்கு வேகமா வரும்போது ஒரு நாய் குறுக்க ஓடிவந்து வண்டியில அடிபட்டுண்டு ஊளையிட, சத்தம் கேட்டு அப்பா வெளியில வந்தாராம். இவனைப் பார்த்து கோபமா முறைச்சவர் உள்ளே போய்ய் பாட்டியைக் கேட்டு இதுக்கு சாப்பிட ஏதாவது கொண்டான்னு சொல்லிட்டு அதோட கால்காயத்தைத் துடைச்சு மருந்து போட்டுக் கட்டிவிட்டாராம். அதோட கால் நல்ல குணமாற வரைக்கும் தினமும் அதுக்கு சாப்பாடு வைச்சபின் தான் அவர் சாப்பிடுவாராம். இதைச் சொல்லச் சொல்ல அஸ்வின் அப்படி அழுதான். அதே மாதிரி அனுவோட பெண் ராதிகா மணிபாலிலிருந்து போன் பேசும் போது “நம்ம குடும்பத்தில முதல் டாக்டர் நீதான் நன்றாகப் படிச்சு கஷ்டப்படறவாளுக்கெல்லாம் நீ இலவசமா மருத்துவம் பார்க்கணும். அப்போ உன் கிளினிக்கில்  தாத்தா உனக்கு அஸிஸ்டெண்டா வேலை பார்க்கப் போறேன்னு சொன்னாரு பெரியம்மான்னு “அழுதா.  ஆனா அம்மா என்னடான்னா”......... “பேசி முடிச்சிட்டயா சுவாதி? இப்ப நா பேசறதை எல்லாரும் கேக்கணும். நீங்களெல்லாம் என்னைப் புரிஞ்சிடது  இவ்வளவு தானா? வாழ்க்கையில அத்தியாவசியத் தேவைகளுக்கு மேல எதுக்கும் ஆசைப்படக்  கூடாதுங்கற உறுதியுடன் வாழ்ந்தவர் எம் புருஷன். நானும்  அப்படியேதான் வாழ்ந்துண்டு வரேன். பெத்த பிள்ளைகளைப் போல எங்கமேல பாசம் காட்டற மாப்பிள்ளைகளோ பெண்களோ என்னைக் கைவிட்டுவிடுவாங்கற பயம் எனக்கு இல்லவே இல்லை. அவரோட ஆயசு நேத்தோட முடியணும்னு விதிச்சிருக்கு.அறியாம நேர்ந்து விட்ட தப்புக்காக அந்த இளம்பிள்ளையைத் தண்டிக்கறதால போன உயிர் திரும்பி வரப் போறதா? ஏற்கனவே பயந்து போய் மனக்குழப்பத்தில இருக்கற அந்த பையன் நம்ம எடுக்கற ஆவேசத்தீர்மானத்தால ஏதாவது தப்பான  முடிவுக்கு வந்துட்டா அந்த பாவம் நமக்குத் தானே?...... உயிரோட இருத்தவரைக்கும இவர் எப்பவும் அந்த இல்லத்தைப் பத்தித்தான் நினைச்சுண்டிருந்தார். மழைக்காலம் வந்தாலே அந்த ஒழுகும் கட்டடத்தில பசங்களை வச்சிண்டு முரளி சார் படற பாட்டைச் சொல்லி  வருத்தப்படுவார்.  நமக்கு பொருளாதார வசதி இருந்தா ஏதாவது பண்ணியிருக்கலாம்பார்.  அந்த நல்லெண்ணம் இந்த விபத்து  மூலம் நிறைவேறப் போறதுன்னு  தோண்றது....... “ இவர்தான் முரளி அந்த இல்லத்தை நடத்தறவர். உங்களால முடிஞ்ச தொகையை  அவர்  சொல்லற  விதத்தில் அவருக்குக் கொடுத்திடுங்கோ. மழை காலத்துக்குள்  அவர் கட்டிடத்தை சரிபண்ண உதவியாயிருக்கும். ஊரார் பிள்ளைகளைக் காப்பாத்தற புண்ணியம் உங்க பிள்ளைக்கு நல்ல எதிர்காலத்திற்கு வழிகாட்டும். அவரோட தன்னலமில்லாத ஆசை நிறைவேற நானும் ஒரு வழிகாட்டியா இருந்தேன்ற நிம்மதியோட  இருக்கப் போற கொஞ்ச நாளை கழிச்சிடுவேன்” இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை அடக்கமுடியாமல் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அம்மாவை  ஓடிவந்து கட்டிக் கொண்ட மகள் இருவரும் “எங்க அப்பாவிற்கு எல்லாவிதத்திலும் பொருத்தமான அம்மா “என்றனர் கண்ணீருடன்.

 

       “அம்மா  அந்த இல்லத்தை முழுவதும் சரி பண்ணி அந்தக்குழந்தைகளுக்குத்  தேவையான மத்த எல்லா வசதிகளையும் செஞ்சு தரோம்னு சத்தியம் செய்யறோம்” வணங்கி இருவரும் விடைபெற கூடியிருந்த அனைவரும் மௌன மொழியில் இறந்தவரின் ஆத்மாவிற்கு  அஞ்சலி  செலுத்தினர்.  

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu