நியாயத்தின் மறுபக்கம்

                                                    நியாயத்தின் மறுபக்கம்

  • -சாந்தி நாதன்

 

“அப்பா,அம்மா ரெடியா? கல்யாண மண்டபம் இங்கிருந்து ரெம்ப தூரம். பெங்களூர் டிராஃபிக்கில் இப்ப கிளம்பினாதான் நீங்க கரெக்டான நேரத்துக்குப் போய் சேர முடியும்.” அலுவலகம் செல்லத் தயாராக மாடியிலிருந்து இறங்கியவாறே கௌசிக் கேட்க, “இதோ நாங்க ரெடி. பட்டு வேட்டி சட்டையில் சுந்தரமும் அவருக்குப் பின்னால் புடவையை சரி செய்தவாறே  வசுமதியும் வந்தனர். நெருக்மாககக் கட்டிய மல்லிகைப் பூவை மருமகள் கலா, “அத்தை இந்தாங்க “ என்றபடி நீட்ட, “ஏம்மா நீ வச்சுக்கலை? ஆர்த்திக்கும் வைக்கலை போலிருக்கே” பள்ளிச் சீருடையில் நிற்கும் பேத்தியைப் பார்த்துக் கொண்டே கேட்டாள். சாயங்காலம் வந்து விளக்கேற்றிய பிறகு நான் வச்சுப்பேன். ஸ்கூலுக்குப் பூவெல்லாம் வைக்கக் கூடாது “ பதில் சொல்லியபடியே தனக்கும் கணவனுக்கும் காலை உணவுக்குத் தட்டுகள் வைத்தாள்.

 

          அவர்களுக்கான காலை உணவை மேசையில் கொண்டு வைத்த ரத்னா, “அப்பா,அம்மா டிபன் சாப்பிடலையா” என்று கன்னடத்தில் கலாவை விசாரிக்க, “என்னப்பா நீங்களும் டிபன் சாப்பிடறீங்களா? ரத்னா கேக்கறா பாருங்க” கௌசிக் கேட்க, “அங்க போனதும் டிபன் சாப்பிடச் சொல்வாங்க. மணி எட்டு கூட ஆகலை இப்ப வேண்டாம். “ரத்னா இவர்கள் சொல்வதைப் புரிந்து கொண்டு இரு கோப்பையில் மிதமான சூட்டில் பாலும் வாழைப் பழங்களையும் கொண்டு வைத்தாள். “நீங்க கல்யாணத்துக்குப் போறீங்கன்னு தெரிஞ்சு வீட்டிலேயிருந்து வரும்போதே பூக்கட்டி எடுத்து வந்திருக்கா” கலா பேசப் பேச வாசலில் பள்ளி வேன் ஹாரன் கேட்க, அஸ்வின், ஆர்த்தி தத்தம் பைகளோடு வாசலுக்கு விரைந்நனர். டேபிளின் மீது அஸ்வின் விட்டுச் சென்ற ஒரு நோட்டைப் பார்த்த ரத்னா, “அஸ்வின்” என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடிச் சென்று அவனிடம் நோட்டைக் கொடுக்க, தாங்க்ஸ் ஆண்டி இதை விட்டுட்டு போயிருந்தா பனிஷ்மெண்ட் கிடைச்சிருக்கும்.” சொல்லியபடியே  கை அசைத்து இருவரும் வண்டியேறிச் சென்றனர்.

 

         “ராத்திரி ஹோம் ஒர்க்கில் எங்கிட்ட சந்தேகம் கேட்டு எழுதிட்டு இங்கேயே வைத்திருக்கான். நானும் கவனிக்கலை. தாங்க்ஸ் ரத்னா” இருவருக்குமான மதிய உணவுப்பைகளோடு வந்தவளைப் பார்த்து கலா சொல்ல, “இந்தப் பொண்ணு நல்ல பொறுப்பா, சூட்டிகையா இருக்கா” சுந்தரத்தின் பாராட்டில் முகம் சுளித்த வசுமதி, “கல்யாணத்தில பார்க்கறவங்க எல்லாம் மகனும் மருமகளும் வரலையான்னுக் கேப்பாங்க. யாராச்சும் ஒருத்தர் வரலாமில்ல”........”எங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு முக்கியமான வேலையிருக்கு.  லீவும் அதிகமில்லை” வெடுக்கென்று பதில் சொல்லிய கலா ரத்னாவிடம் மாலை உணவு, மறுநாளைக்கான ஏற்பாடுகள் பற்றி பேசச்சென்றாள். “பிள்ளையைப் பேசக் கூட விடாம இவளே பேசிடறா”  அம்மாவின் முணுமுணுப்புக் காதில் விழுந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் “இதோ நம்ம டிரைவர் மஞ்சுநாத் வந்துட்டான் .அவனுக்கு இந்த மண்டபம் தெரியும். கரெக்டா கூட்டிட்டுப் போயிடுவான். முடிஞ்சா அவனை அங்கு சாப்பிடச் சொல்லுங்க. இல்லையென்றால் அவன் ஹோட்டல்ல சாப்பிட்டுப்பான். அவனுக்கு நான் பணம் கொடுத்திருக்கேன். “எங்களுக்கும் ஊபர் வந்திட்டது. கலா, வா.” இரு கார்களும் ஒன்றாக்க் கிளம்பி திசைக்கொன்றாய் பயணித்தது.

 

        “ நான் மஞ்சுநாத் பக்கத்தில உட்கார்ந்து அவனோட பேசிட்டே வரப்போறேன். நீ பின்னாடி சௌகரியமா உட்கார்ந்து  வா. அங்க போன பழைய உறவுக்காரங்களோட நிறைய பேசணுமில்லையா? அதனால இப்போ கொஞ்சம் .....” கணவரின் கிண்டல் பேச்சில் எரிச்சாலகி, ”அவனோடப் பேசறதுக்கு உங்களுக்குக் கன்னடம் தெரியுமா என்ன?” “அம்மா, நம்ப மனைகிட்டே நிறைய தமிழ்காரங்க இருக்காங்க. அதனால எனக்கும் எங்க அம்மாவுக்கும் தமிழ் நல்லாப் புரியும். கொஞ்சமா பேசவும் வரும்.” என்றான். இதற்கு பதில் ஏதும் சொல்ல விரும்பாதவளாய்  கடுத்த மனத்தோடு கண்ணை மூடிக்கொண்டு வசுமதி இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

           “போனமுறை நீங்க வந்தபோது  நான் லீவில் ஊருக்குப் போயிருந்தேன். அதனால நான் இப்பதான் உங்களைப் பார்க்கறேன்.” பேச்சை ஆரம்பித்தான் மஞ்சு. “ஆமாம் அப்ப வீட்டு வேலைக்குக் கூட ஒரு வயசான அம்மா தானிருந்தாங்க” .“அது எங்க அம்மாதான் சார்.  பாப்பா ரெண்டும் சின்னதா இருக்கும் போது அம்மா தான் இங்க வேலை பார்த்தாங்க. +2 வகுப்புப் படிக்கும் போது அப்பா இறந்துட்டாரு. மேல படிக்க வசதியுமில்லை ஆசையுமில்லை நிரந்தரமா ஒரு வேலையும் கிடைக்கலை.  அப்ப அம்மா சார் கிட்ட என்னைப் பத்தி சொல்லியிருக்காங்க. என்னை வரச் சொல்லிப் பேசி என்னை கார் டிரைவிங் வகுப்புல சேர்த்து விட்டாரு. லீவு நாட்களில் என்னை வரச்சொல்லி அவர் பக்கத்துல உட்காரவச்சு வண்டி ஓட்டவைப்பாரு. அதனால நல்ல பிராக்டிஸ் ஆக லைசென்ஸ்ஸும் சீக்கிரம் வாங்கிட்டேன்.” ரத்னா எம் மாமா பொண்ணு தான். எங்க வதுவை முடிஞ்சு  எங்களுக்கு ஒன்னரை வயசில ஒரு குழந்தையும் இருக்கு. அம்மாவால முன்னமாதிரி  காலையில எழுந்து வேலைக்கு வர முடியறது இல்லை. அதனால ரத்னா இங்க வரா. குழந்தையும் எங்க ரெண்டுபேரை விட அவங்க பாட்டி கிட்டதான் ஒட்டுதலா இருக்கான். காலையில் ரத்னா இங்க வரதுக்குள்ள  ஓரளவு வீட்டு வேலையை முடிச்சுடும். நானும் கிளம்பறதுக்கு முன்னே அம்மாவுக்கு உதவிட்டு தான் வருவேன். அம்மா குழந்தையைப் பாத்துக்கிட்டு நிம்மதியா இருக்காங்க. சாயங்காலம் மேடம் பாங்கிலிருந்து சீக்கிரம் வந்துடுவாங்க. அதனால ரத்னா முன்னாடி வீட்டுக்குப் போயிடுவா. சாருக்கு வேலை முடிய லேட் ஆவும் அதனால நான் நேரம் கழிச்சு தான் வீடு போவேன். சார் புண்ணியத்தில எங்க குடித்தனமும் நல்லபடியா போயிட்டிருக்கு.”


        “ கேக்கவே  மனசுக்கு நிறைவா இருக்குப்பா. மண்டபம் நெருங்கிடுச்சு போலிருக்கு. நீ காரை பார்க் பண்ணிட்டு அங்கியே இரு. டிபன் ஏதும் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.” “இன்னிக்கு சீக்கிரம் வந்ததால எதுவும் சாப்பிடலை. சார். ஆனா சார் பணம் கொடுத்திருக்காரு. நான் பக்கத்தில ஏதாவது ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறேன். நீங்க உள்ளே போங்க.”


       “பையன் உன் போன் நம்பரை எனக்குக் கொடுத்திருக்கான். நான் உள்ளே போயிட்டு கொஞ்ச நேரத்தில் உன்னைக் கூப்பிடுவேன். எங்களோடு நீயும் இங்கியே சாப்பிடலாம்.” சொன்னபடியே அவனையும் சாப்பிட வைத்த பிறகே திருமண விழாவை பார்க்க அமர்ந்தார் சுந்தரம்.


         நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் சுற்றத்தினரோடு பழைய கதைகள் பேசி மகிழ்ந்ததில்  நேரம் விரைவாகச் சென்றது.  கல்யாண சம்பிரதாயங்கள் முடிந்து மதிய உணவிற்கு அமரும் முன்பு சுந்தரம் மறக்காமல் மஞ்சுநாத்தைக் கூப்பிட்டு சாப்பிடவைத்தார். எல்லாரிடமும் பிரியாவிடைப் பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர மதியம் மூன்று மணி ஆகிவிட்டது.


       வீட்டிற்கு வந்தவுடன் ரத்னா மஞ்சுநாத்தைக் கடைக்குச் சென்று சில மளிகைப் பொருட்களும் பழம் காய்கறிகள் வாங்கி வரும்படி சொல்ல அந்த வேலைகளை முடித்து கௌசிக்கின் அலுவலகம் சென்றான் மஞ்சு. நெடுந்தூரம் சென்று வந்த களைப்பும் வயிறு முட்ட உண்ட கல்யாண விருந்தும் சேர்ந்து இருவரும்  நீண்ட உறக்கத்திற்குப் பின் விழித்து அறையை விட்டு வெளிவரவும் பள்ளி வாகனத்திலிருந்து குழத்தைகள்  இறங்கி உள்ளே வரவும் சரியாக இருந்தது.


  “ ஹாய் , தாத்தா, பாட்டி” கையை ஆட்டியபடி சொன்னவர்கள் , உள்ளிருந்து வந்ந ரத்னாவிடம், “ஆண்டி தக்காளி ரைஸ்ஸும் உருளைக்கிழங்கு ரோஸ்டும் சூப்பர். என் பிரண்ட்ஸ் பாதி காலி பண்ணிட்டாங்க.” ஆர்த்தி சொல்ல, “இனிமே ஒரு எக்ஸ்ட்ரா டப்பா எடுத்திட்டு பேகணும் போல. இப்ப என்ன செஞ்சிருக்கீங்க “ என்றான் அஸ்வின்.  முதல்ல ஷூ சாக்ஸ் கழட்டிட்டு கை கால் வாஷ் பண்ணிட்டு வாங்க, ஆலு பராத்தாவும்  தக்காளி குருமாவும் ரெடியாயிருக்கு.” புன்னகையுடன் பதில் சொல்லியபடியே அவர்கள் லஞ்ச் பைகளை எடுத்துக் கொண்டு சென்றாள். குழந்தைகள் இருவரும் சிறிது நேரத்தில் உடை மாறி வந்து சாப்பிடத் துவங்க, “நீங்க எடுத்துக்கிறீங்களா” ரத்னாவின் ஜாடை மொழிக்கு பதிலாக “வேண்டாம் டீ மட்டும் போதும் “ என்றாள் வசுமதி.


       இஞ்சி, ஏலக்காய் மணத்தோடு வந்த சூடான டீயை ருசித்த சுந்தரம் “ரத்னா, டீ சூப்பர்” வாய் திறந்து பாராட்டியபடியே நாளிதழைப் படிக்கத் துவங்கினார். ரத்னாவோட இரு குழந்தைகளும் ஏதோ சிரித்துப் பேசியபடியே டிபன் சாப்பிட்டுப் பாலையும் குடித்துவிட்டுப் பள்ளிப் பாடங்களை எழுத அறைக்குள் செல்ல, டி.வி.யில் எதையோ பார்க்கத் துவங்கினாள் வசுமதி. கிச்சனில் இரவு உணவுத் தயாரிப்பிலும் மறுநாளைக்கான கறிகாய்களைக் கழுவி நறுக்கிக் கொண்டும் ரத்னா பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள். கணவன் அருகில் வந்தமர்ந்த வசுமதி, இன்னிக்கு மகன் கிட்ட நாம கண்டிப்பா பேசிடவேண்டியது தான். ஊரிலிருந்து வந்த நம்மகிட்ட உட்காந்து இந்த வாண்டுகள் பேசமாட்டேங்குது. ஆனா ஆண்டி, ஆண்டின்னு வேலைக்கு வந்தவளைச் சுத்தி பேசிச் சிரிக்குதுங்க. நீங்களும் உங்க பங்குக்கு அந்த டிரைவரை உபசரிக்கறதும் ஒரு டம்ளர் டீக்கு வேலைப் பார்க்க வந்தவளைப் பாராட்டறதும் பத்திக்கிட்டு வருது.” மனைவி மீது எழுந்த கோபத்தில் அவளுக்கு சூடாக பதில் தர வாய் திறந்தவர் உள்ளே நுழையும் கலாவைப் பார்த்து,”வாம்மா,” என்று வரவேற்றார். “கல்யாண மண்டபத்துக்குச் சரியா போயிட்டீங்களா”? கேட்டபடியே கைகால் கழுவிக் கொண்டு வந்து ரத்னா இரவுக்காக தயார் செய்திருக்கும் உணவுகளை சரிபார்த்தாள். நாங்க ரெண்டு பேரும் சப்பாத்தி காய்கள் தான் இரவு சாப்பிடுவோம். குழந்தைகள் காய்களோடு தயிர் சாதம் தான் எடுத்துப்பாங்க. உங்களுக்கு சூடா தோசையோ இட்லியோ நான் செஞ்சுதரேன். ரத்னா நீ கிளம்பு” மூன்று கிண்ணங்களில் மூவருக்கும் அழகாக நறுக்கிய பழங்களைக் கையில் கொடுத்துவிட்டி மேலும் மூன்று மூடி போட்ட கிண்ணங்களை குழந்தைகளுக்கும் கௌசிக்கிற்கும் வைத்துவிட்டுக் கிளம்பினாள் ரத்னா.


         “ரெண்டு பேருக்கும் அடுத்த வாரம் பரிட்சை துவங்குகிறது. அவங்களைப் பார்த்துட்டு வரேன். அதுக்குள்ள ராத்திரிக்கு என்ன சாப்பிடறீங்கன்னு தீர்மானிச்சு வையுங்க.” சொன்னபடியே மாடிக்குச் சென்றாள் கலா.   இரவு உணவிற்கு யாவரும் மேசையில் அமர, “எனக்கு வெறும் மோர் சாதம் கொஞ்சமா போதும்மா” சுந்தரம் சொல்ல, “எனக்கும் அதுதான்” வசுமதியும் அதே போல் சாப்பிட்டாள். குழந்தைகள் உறங்கச் சென்று விட்டனர். கலாவும் சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு வந்துவிட நால்வரும் ஹாலில் அமர்ந்தனர்.

 

 “என்னப்பா விருந்து சாப்பாடு பலமா? ரெண்டு பேரும் இப்ப ரொம்ப கொஞ்சமா சாப்பிட்டீங்களே?” “வயசாவுது இல்லையா? ஒரு வேளை நல்லா சாப்பிட்டா அடுத்த வேளைக்கு எதுவும் இறங்கமாட்டேன்னுது.” கணவரைத் தொடர்ந்த வசுமதி ,”மொத்தத்தில சமைக்கவும் பிடிக்கலை. சாப்பிடவும் பிடிக்கலை.”கணவனுக்குப் பேச்சைத் துவங்க அடித்தளம் போட்டாள். “அம்மாவுக்கு வரவர வேலை செய்யவே முடியலை. ரெண்டு பேருக்கு தான் என்றாலும் எல்லாந்தானே  செய்யவேண்டியிருக்கு? பேசாம நம்ம வீட்டை வாடகைக்கு விட்டுட்டு உங்கிட்ட வந்துடலாம்னு தோணுது. ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுக்கிட்டு நாளை நகர்த்தறதைக் காட்டிலும் உங்ககூட வந்திருந்து நிம்மதியா சந்தோஷமா காலத்தை ஓட்டிடலாம்னு பார்க்கறோம்”....கணவன் நிறுத்தியதைத் தொடர்பவளாய் “என்னதான் ஆளுங்களை வைத்து நீங்க வேலைக்குப் போனாலும் வீட்டைப் பொறுப்பா பார்த்துக்க வீட்டுப் பெரியவங்க கூட இருக்கறது நல்லதில்லையா? ஆர்த்தியும் எப்ப வேணா வயசுக்கு வர பருவத்தில இருக்கா. இதையெல்லாமும் யோசிச்சுதான்”, “அத்தை, இதைப் பத்தியெல்லாம் இந்தக் கால குழந்தைகளுக்கு சரியான முறையில் சொல்லிப் புரிய வச்சுட்டா போதும். அவங்க சமாளிச்சுக்குவாங்க”....


       “இப்ப என்ன சொல்லவரே? நாங்க வந்து எங்க பிள்ளைகூட இருக்கக் கூடாதுங்கறயா?”  “ஆர்த்தி பிறந்தபோது மாமாவும் வேலையிலிருந்து வீ.ஆர்.எஸ். வாங்கப் போறார்னு தெரிஞ்சு இவரு உங்களை இங்கேயே வரச் சொல்லிக் கேட்டபோது எங்களுக்கு இந்த ஊர் கிளைமெட் ஒத்துக்காதுன்னு மறுத்தவங்களுக்கு இப்ப மட்டும் ஒத்துக்குமா?” கலாவின் கிண்டல் கலந்த பேச்சால் கோபம் வந்தாலும் பதிலுக்கு வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள் வசுமதி. இதுவரை  மௌனமாக இருந்த கௌசிக் “ நீங்க இங்க வரப் போறது முடிவானதிலிருந்து என் ரெண்டு தங்கைகளும் எனக்கு மாறி மாறிப் போன் செஞ்சுப் பேசிக்கிட்டிருக்கறதை நான் கலாவுக்குக்குக் கூட இதுவரைக்கும் சொல்லலை. ரெண்டு பேருக்கும் நல்லபடியா கல்யாணம் முடிக்க மூத்த மகனாய் நான் உங்களுக்கு துணையாய் நின்றேன். ஆனா எனக்குத் திருமணமாகி அஸ்வின் பிறந்து கலா திரும்ப வேலைக்குப் போக வேண்டிய நிலையில்  நீங்க மக வயிற்றுக் குழந்தையைப் பார்த்துக்கப் போறதுதான் உங்க முதல் கடமைன்னு எங்களைப் புறக்கணிச்சிட்டீங்க. அப்ப கலாவின்  பெற்றோர்தான் உதவிக்கு வந்தாங்க .கலாவோட அண்ணிக்கு அப்ப இரண்டாவது பிரசவ நேரம் என்பதால் ஆறுமாதக் குழந்தை அஸ்வினைப் பார்த்த்க் கொள்ள கலாவின் அப்பா எங்களோடு தங்கிவிட்டார். பிறகு அஸ்வினை டேகேரில் விட்டதும்  அவனுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போவதும் எங்களை வதைத்தெடுத்த காலகட்டங்கள்.  இரண்டாம் முறை ஆர்த்தி பிரசவத்திற்கு கலா அம்மா இங்கு வந்து சில மாதங்கள் இருந்தபோத மாமா தன் மகனின் குழந்தைகளை பார்த்துக் கொண்டு மகனும் மருமகளும் தங்கள் வேலைகளைக் கவனிக்க உதவினார். ஆனா நீங்க அந்த சமயங்களில் எங்களைப் பற்றிய நினைப்பு கூட இல்லாமதானே இருந்தீங்க? இத்தனைக்கும் உங்க முதல் மாப்பிள்ளையின் சொந்த நிறுவனத்தில தான் உங்க பெண்ணும் வேலைப் பார்த்தா. குழந்தையைக் காப்பகத்தில் விட்டா தூக்கமாத்திரை கொடுத்திடுவாங்க. அதனால என் குழந்தை அம்மாகிட்டதான் வளறனும்னு அவ சொல்லும் போது எங்க குழந்தைகளைப் பத்தி நீங்க நினைச்சுப் பார்த்தீங்களா? அப்படி ஓடி ஓடி பேரன் பேத்திகளை வளர்த்தீங்களே  இப்ப அவங்க கூட வந்து இருக்கும்படி உங்களைக் கூப்பிடலையா”? வசுமதி எதுவோ பேசத் துவங்க, “இரும்மா நான் இன்னும் முடிக்கலை ... சின்னத் தங்கை ஒரு பள்ளிக் கூடத்தில வேலைபார்த்தா. அவங்க மாமியார் நாட்டுப்புறம். அவங்களுக்கு குழந்தையை நல்லபடியாக வளர்க்கத் தெரியாதுன்னு எதோ காரணம் சொல்லி அந்தப் பொறுப்பையும் நல்லபடியாக செஞ்சு முடிச்சிட்டீங்க. பசங்க எல்லாம் பெரியவங்களாயிட்டாங்க. அதனால இனிமே அவங்களுக்கு உங்களைப் பற்றி கவலையில்லை.அப்படித்தானே?”


        “முடிவா என்னதாண்ட சொல்றே? மக வீட்டுல போய் தங்கச் சொல்றியா? பெத்தவங்களைப் பாத்துக்கற கடமை பிள்ளைக்கில்லையா?” ஆங்காரமாகக் குரலெடுப்பவளை, “ஏம்மா இப்படிக் கத்தறீங்க? பெத்தவங்களைப் பாத்துக்கற கடமை ஆண் பெண் வித்தியாசமின்றி எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கு. அதே சமயம் நீங்க பாரபட்சம் காட்டி அவங்களுக்கு மட்டும் உதவி செஞ்சதால அவங்களுக்கு உங்க பொறுப்பை ஏத்துக்கற கடமை அதிகமாகவே இருக்கு. எனக்கு இது பத்தி அறிவுரை சொல்ல அவங்களுக்குத் தகுதியே இல்லை.புரிஞ்சுதா?” கோபமாகப் பேசி நிறுத்தியவனைப் பார்த்து, ”கௌசிக், நீ பேசினது வார்த்தைக்கு வார்த்தை நிஜம். இவளும் உன் தங்கச்சிகளும் சுயநலமிகளா இருப்பது புரிஞ்சும் நான் கண்டுக்காம இருந்ததும்  பெரிய தப்புதான். ரெண்டு பெண்களும் இப்பெல்லாம் வீட்டுப்பக்கம் அதிகமா வரதில்லை. அதனால இரண்டு பேருக்கும் ஒருவிதமான பயமும் பாதுகாப்பில்லாத உணர்வும் அதிகமாகிக் கிட்டே போவுது. இதுக்கு என்ன தீர்வுன்னு நீயே சொல்லு.” சுந்தரம் மெல்லிய குரலில் கேட்க, ”அப்பா என் பேச்சு உங்களைப் புண்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க. இங்க வந்து எங்களோடு இருக்கறதுல நடைமுறை சிக்கல்கள் நிறைய வரும். குழந்தைகளின் படிப்பு இப்ப பெரிய சவாலான விஷயமா ஆகிட்டு வரது. அஸ்வின் இப்ப எட்டாம் வகுப்பில் இருக்கான். அவனுக்குப் பாடங்களில் உதவி செய்ய கலாவே நிறைய படிச்சுத் தன்னை தயார் படுத்திக்க வேண்டியிருக்கு. அதோட அவனுக்கு விளையாட்டிலும் நல்ல ஆர்வம் இருப்பதால் வார இறுதி நாட்களில் பாட்மின்டன் வகுப்புகளுக்கு நான் கூட்டிட்டுப் போறேன். ஆர்த்திக்கு நல்ல குரல் வளமும் பாட்டில் ஆர்வமும் இருப்பதால வாரத்தில் இரு நாட்கள் கலாவும் இந்தக் குடியிருப்பில் இருக்கும் இன்னொரு பெண்ணின் அம்மாவும் பாட்டு வகுப்புக்கு  மாறி மாறி அழைத்துக் கொண்டு போறாங்க. இதோட எங்க வேலையில் நாங்க முன்னேறவும் அதை நல்லபடியாக  காப்பாத்திக்கவும் நிறைய முயற்சிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருக்கு. இந்த வீட்டிற்கான மாத ஈ.எம்.ஐ. ,பிள்ளைகளின் எதிர்காலம், எங்களின் ஓய்வுக்காலத்திற்கான பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்காக இருவரும் வேலைக்குச் சென்றாக வேண்டிய நிர்பந்தம். இந்த நிலையில் நீங்கள் இங்கு வந்திருந்தால் உங்களோடு நேரம் செலவிட எவ்வளவு தூரம் சாத்தியம்? பாஷை புரியாத ஊர், ஒவ்வாத, கிளைமேட் போன்றவை உங்களுக்கு மேலும் சிரமத்தை தான் தரும். இதுக்கெல்லாம் நல்ல தீர்வாக நான் சொல்லப் போறதை நீங்க சரியான முறையில் புரிஞ்சுக்கிட்டு யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க.... சீனியர் சிடிசன் ஹோமைப் பத்தி உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். குடும்பத்துக்காகத் தங்களின் விருப்பு வெறுப்புகளை மறந்து உழைத்து ஓய்ந்த முதிய வயதினர் ஜோடியாக தங்கள் ஒத்த வயதினருடன் அநாவசிய பொறுப்புச் சுமைகளை விடுத்து நிம்மதியாக  காலம் கழிக்க  ஏற்ற முறையில் நிறைய ஸ்தாபனங்கள் சகல வசதிகளுடன் நடந்து வருகின்றன. பல பெற்றோர்கள் தாங்களாகவே இதில் தங்க விரும்பிப் போகின்றனர். ஒரு புறம் வயதானவரைப் புறக்கணித்தல் என்ற விமர்சனமும் நம் கலாசாரத்துக்கு ஒப்பாத மேல்நாட்டு பழக்கம் இது என்று பேசி வருகின்றனர் ஆனால் புராணகால நடைமுறையில் கிருகஸ்தாஸ்ரமம் என்ற நிலைக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடப் பட்டுள்ள வானப்பிரஸ்தம் என்பதை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றமாதிரி  வசதிகளுடன் உருவாக்கப்பட்டவை தான் இந்த இல்லங்கள் என்று நான் நினைக்கிறேன். உங்கள் ஒப்புதலுடன் நான் அங்குவந்து நல்ல இல்லமாகப் பார்ப்பதுடன்  உங்கள் வீட்டிற்கும் நல்ல ஆளாகப் பார்த்து வாடகைக்கு விடுவதும்  என் பொறுப்பு. இதற்கான செலவும் என்னுடையது. எப்ப வேண்டுமானாலும் நீங்க எங்களைப் பார்க்க வந்து தங்கலாம். நாங்களும் உங்களைப் பார்க்க வரலாம். வாடகைப் பணம், பென்ஷ்ன் தொகை இவற்றைக் கொண்டு நீங்கள் விரும்பியதை அனுபவிக்கலாம். நிச்சயமாக என் ஓய்வு நாட்கள் இந்த முறையில் தான் இருக்கும் இருவருமாகப் பேசி  சுயமாக சிந்தித்து     உங்கள் முடிவை நிதானமாகச் சொல்லுங்கள் .உங்கள இருவருக்கும் கடவுள் அருளால் வயதுக்கான சிறு உபாதைகளைத் தவிர, எத்த விதமான உடற்கோளாறுகள் இல்லை .அதனால் இந்த மாற்றம் உங்களுக்கு சத்தோஷத்தைதான் கொடுக்கும்னு நான் நம்பறேன். எதிர்காலத்தில் உடற்கோளாறுகள் ஏற்பட்டு உங்களில் ஒருவர்  பாதிக்கப்பட்டால் நல்ல மகனாய் உங்களைப் பாதுகாத்து கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன்.”....அதிகம்  பேசாத மகனின் இந்த அதிரடிப் பேச்சால் பிரமித்து நிற்கும் பெற்றோர்களுக்கு “குட் நைட்” என்று சொல்லி கலா பின்தொடர மாடியேறினான் கௌசிக்.

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu