உள்ளத்தனையது உயர்வு சாந்தி நாதன்

 

உள்ளத்தனையது    உயர்வு

சாந்தி  நாதன்

 

    ௐரு கையில் பருப்பு சாதக்கிண்ணத்தையும் மறு கையால் சுற்றிச் சுற்றி ௐடும் மகனைப் பிடித்து நிறுத்திக் கொண்டும், நவின் சாப்பிடு என்று மிரட்டி, அவன் வாயில் உணவைத் திணித்துக் கொண்டிருந்தாள் லதா. பாதி விழுங்குவதும் மீதியைத் துப்புவதுமாக ஆட்டம் காட்டும் மகன் மீதும் கடந்த மூன்று நாட்களாக  வேலைக்கு வராமல் கழுத்தறுக்கும் மீனாவின் மீதும் லதாவிற்குக் கோபமாக வந்தது. டேய் ௐழுங்காக சாப்பிடப் போறயா இல்லையா என்று ௐரு அடி கொடுத்து டேபிளில் உட்கார வைத்தவுடன் ஓ என்று அலறத் வங்கினான் நவீன்.

    என்னடா ரொம்ப கலாட்டா பண்ற  ௐழுங்கா சாப்பிடு மகனை அதட்டியவாறே அங்கு வந்த ஸ்ரீதர் என்ன இன்னிக்கும் மீனா வரலையா போன் செஞ்சாளா  அவ ௐண்ணும் பண்ணலை நான் பண்ணினபோதும் ஸ்விட்ச் ஆப்னு வரது.  இன்னிக்கு பேசாம லீவ் போட்டுடலாம்னு பாக்கறேன் சொல்லிக் கொண்டே மகனை தூக்கிக் கொண்டு குளியலறையில் நிற்க வைத்து ஆடையிலும் உடலிலும் முழுதும் அப்பிக் கொண்டிருந்த உணவை அப் புறப் படுத்தி குளிப்பாட்டி உடை மாற்றி சோபாவில் உட்கார வைத்து ஹாலையம் சுத்தம் செய்தாள்.

  அவ   குழந்தைக்கு உடம்பு சரியில்லேனு தானே மீனா லீவு போட்டிருக்கா காரணமில்லாம அவ இதுவரை லீவே போட்டதில்லையே,  நாலு மாதக் குழந்தையா நவீனை எடுத்துண்டு நீ உங்க அம்மா வீட்டிலேந்து  வந்ததலிருந்தது ஒரு வருஷத்துக்கும் மேலா அவ எவ்வளவு பொறுப்பா அவனைப் பார்த்துக்கறா இப்ப என்ன கடந்த இரண்டு நாளா உங்கம்மா வீட்டில குழந்தையை விட்டுட்டு ஆபிஸ்  போறமாதிரி இன்னிக்கும் விடலாமே நான் வேணா உன்னையும் குழந்தையையும் அங்க டிராப் பண்ணிட்டு  ஆபிஸ் போறேன், வேணும்னா உன்னையும் ஆபிஸிலே கொண்டு விட்டுட்டு லேட்டாக் கூடநான் போகிறேன்.  

       இல்லீங்க நான் கிளம்ப லேட்டாகும். ரெண்டு நாளா வீட்டு வேலை எதும் செய்யாம வீடே அலங்கோலமா கிடக்கு. பக்கத்துவீட்டு வேலைக்காரம்மா இப்ப வந்து வேலையெல்லாம் செஞ்சு தரதா சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்ல நேத்து அண்ணா குழந்தை ஆகாஷை முத்தம்  கொடுக்கறாப் போல கிட்டப் போயி கன்னத்தில ரத்தம் வர அளவுக்குக் கடிச்சிருக்கான்.நவின்  முந்தா நாள் பெரியவ கீர்த்தனாவைக் கடிப்பதற்குத்  துரத்திண்டு ஓடி அவ கீழே விழுந்து முட்டியில காயம். .

ஓரு நிமிஷம் சும்மாயில்லாம இவன் ஓடி  அடிக்கற லூட்டியை சமாளிக்கற வயசா எங்க அப்பாம்மாக்கு அண்ணாவும் அண்ணியும் குழந்தைங்க கிட்ட இதெல்லாம் சகஜம்னு பெருந்தன்மையா இருந்தாலும்  

எனக்குத் தான் மனசு சமாதானம் ஆகலை. நவீனை நல்ல நாலுசாத்து சாத்தினேன். அந்த சமயம் லதாவின் போன் ஒலிக்க, எதிர் முனையில் அப்பாவின் குரல். இல்லப்பா இன்னிக்கும் அவ வரலை .....சரிம்மா அவளுக்கு என்ன கஷ்டமோ  நீ குழந்தையை  இங்க கொண்டு விட்டுட்டு ஆபிஸ் போ. இல்லப்பா இவரை அனுப்பிட்டு பக்கத்து வீட்டுவேலைக்கார அம்மாவை வச்சு வீட்டு வேலையெல்லாம் முடிக்கணும். அதுக்கு மேல நான் வருவதாயிருந்தால் போன் செய்யறேன்.  ... திடீரென்று நினைவு வந்தவளாய் அப்பா ஆகாஷ் எப்படியிருக்கான் நவீன் கடிச்சதில இன்பெக்க்ஷன் ஆகி குழந்தைக்கு ஜூரம் ஏதும் வந்திடுமோன்னு ஒரே கவலையாயிருக்கு. அண்ணியும் பாவம் மெட்டர்னிட்டி லீவுமுடிஞ்சு இப்பத் தான் ஜாயின் பண்ணியிருக்காங்க...... அவள் பேச்சை தொடர்வதற்குள் மாமனாரிடமிருந்து போனை வாங்கிக் கொண்டஅண்ணி கல்பனா ஆகாஷ் நன்றாகத் தானிருக்கான். நீ ஏன் இதை இவ்வளவு சீரியஸா எடுத்துண்டு கவலைப் படறே நவீன் இங்க வந்தா வீடே கலகலப்பாஆ யிடறது உன அண்ணாவும்  நானும் அவனோட துறுதுறுப்பையும் சுறுசுறுப்பையும் ரொம்ப ரசிக்கிறோம். சரி, நீயும் ஸ்ரீதர் குழந்தையோட கிளம்பி இங்க வாங்க இங்கயே பிரேக்பாஸ்ட் சாப்பிடலாம்னு அம்மா சொல்லறா .கிளம்பி வாங்க என்றாள். இல்லை மன்னி நான் ஏற்கனவே இட்லி சட்னி செஞ்சாச்சு..  நான் கிளம்பி வர லேட்டாகும். அப்பா கிட்ட விபரம் சொல் லியிருக்கேன். சரியா.... போனை வைத்து கணவருக்கும் தனக்கும் தட்டுகளை வைத்த லதா. தூங்கி வழியும் மகனை படுக்கையில் விட்டுவிட்டு வந்தாள்.

    குளித்து அலுவலக உடையில் வந்த ஸ்ரீதர்  நீ ஏன் டிபனெல்லாம் பண்ணிண்டு சிரமப் படறே அந்த வேலைக்காரம்மா வேலையை முடித்தவுடன் நாம கிளம்புவோம். வழியில் ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டுக்கலாம்.....அப்புறம் நவீனை உங்கவீட்டில  வீட்டுட்டுபோகலாம்னு நினைச்சேன்.     

    என்னது உங்க பிள்ளையை வச்சிண்டு ஹோட்டலா..... ஆக்ச்டுவலா நான் இன்னிக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா  சார்ஜ்ஜில் போட்டிருந்த லாப்டாப்பை நவீன் எட்டி இழுத்த்ததில் அது எதோ பிராப்ளம் ஆகி சரியா வேலை செய்யலை. அதானால நீங்க பாட்டுக்குக் கிளம்பிப் போங்க நான் இரண்டு நாளா போற ஆட்டோ டிரைவரை  கொஞ்சம் லேட்டா வரச் சொல்லியிருக்கேன். நான் அதில போயிக்கறேன். சொல்லியபடியே சாப்பிடத் துவங்கினாள் லதா.

     லதா, போனமுறை நான் என் அப்பா அம்மாவைப் பாக்க அண்ணா வீட்டுக்கு கோவை போனபோது  அவன் புதுசா கட்டிண்டிருக்கற வில்லாவை பார்த்து ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னேனில்லையா  எங்க அக்காவும்  இப்ப பக்கத்தில ஒண்ணு புக் பண்ணி வேலை நடந்துண்டு இருக்காம். அந்த பில்டர் இப்ப சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் அதே போல வில்லா பிராஜக்ட் ஆரம்பிக்கப் போறாராம். அண்ணா என் போன் நம்பரை அவருக்குக் கொடுத்திருந்த்ததில் அவர் இரண்டு நாள் முன்னாடி என்னை காண்டாக்ட் செய்தார்.  நேற்று எனக்கு ஆபிஸில் வொர்க் லோட் அதிகமில்லாததால்  மூணு மணிக்கே கிளம்பி அவருடைய ஆபிசுக்குப் போனேன். அவர் கட்டப் போகிற வில்லாவின் மினியேச்சர் மாடல் காண்பித்தார். ரொம்ப் பிரமாதமாக இருக்கு. அண்ணாவின் நண்பர் என்பதால் நமக்கு ரேட்டிலும் கன்செஷன் தருவதாகச் சொல்கிறார். நேற்ரறு நீ. ரொம்ப மூடியாக இருந்ததால் இதைப் பத்தி நான் பேசலை. இந்த வீக் எண்ட் நீ வந்து பார்த்து ஓகே சொன்னா நாமும் ஒரு வில்லா புக் பண்ணிடலாம். நாம் தினம் போய் பாக்கணும்னு இல்லை. அவரே எல்லாம் பொறுப்பாகச் செய்வார்னு அண்ணா சொன்னார்.

     என்னது வில்லாவா நாம இப்ப வாங்கிக் குடியிருக்கற இந்த பிளாட்டுக்கு என்ன குறைச்சல்..... மீனா இப்படியே தொடர்ந்து வராவிட்டாலும் நம்ப வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கற பேபிகேரில் நவீனை சேர்க்கலாம்னு இருக்கேன். நேத்து அவனையும் அழைச்சிண்டு அங்க போயிருந்தேன். உற்சகமா விளையாடினான். நாலு குழந்தைகளோடு பழகினால் இவனும் விஷமம் குறைஞ்சு கொஞ்சம் சமர்த்து ஆகலாம்னு தோண்றது. அந்த இடமும் ஸ்டாபும் ரொம்ப நன்றாக இருக்க.றதால இங்க சேர்த்துவிட்டா யூ.கே.ஜி வரைக்கும் கவலையில்லை. அதுக்கு மேல் வகுப்புகளுக்க அவங்களே நல்ல கூலில் அட்மிஷனுக்கு ஹெல்ப் பண்ணுவாங்களாம். அதனால வில்லா பத்தியெல்லாம்  இப்ப நினைக்கவே வேண்டாம்னு தோண்றது

      இத பார் லதா எங்க அம்மா அப்பா இங்க வந்தா  நாம சின்ன ரூமில் படுத்துண்டு  நம்ம பெரிய ரூமை அவங்களுக்குக் கொடுக்க வேண்டியிருக்கு. இன்னும் பெரிய வீடா போனா அவங்களுக்குன்னே ஒரு ரூம் இருக்குமில்லையா நவீன் வளரவளர படிப்பு செலவெல்லாம் அதிகமாகிவிடும். அதனால இப்பவே நாம பெரிய வீடா வாங்கறது நல்லது தானே அதுவுமில்லாம இந்த பிராஜெக்ட் முடிஞ்சு பிராப்பர்டி கைக்கு வந்த பிறகுதான் இ.எம்.ஐ. கட்ட ஆரம்பிக்கப் போறோம். அது முடிய இரண்டு வருஷம் ஆகும். அதுக்குள்ள இந்த பிளாட் லோனும் முடிஞ்சிடும். கொஞ்சம் நிதானமா யோயிச்சுப் பார் என்றான் ஸ்ரீதர்.

     எப்பவோ வந்துட்டு ரெண்டு மூணு நாள் தங்கிட்டுத் திரும்பற உங்க பேரண்ட்சுக்காக பெரிய வீட்டுக்கு மாறணும்னு நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு .இப்ப எனக்கு நான் ஆபிஸில் செய்து முடித்திருக்கும் ப்ராஜெக்ட் தவிர எதைப் பற்றியும் நினைக்க முடியலை. ஒரு மாசத்துக்கும் மேலா என் டீமும் நானும் பாடுபட்டு உழைச்ச உழைப்புக்கு பலனா அதனுடைய முதல் பார்ட் சக்ஸ்புல்லா வந்திருக்கு. பிராஜக்ட்டின் கன்கூலிடிங் பார்ட்டுக்குத் தேவையான மெட்டிரியல்ஸ் இதிலியே கவர் ஆகிட்டதால அடுத்த பார்ட்டை   நல்லவிதமா சுலபமா முடிச்சிட முடியும். ஹெட்ஆபிஸிலிருந்து எங்க டீமையும் குறிப்பா என்னையும் பாராட்டி மெயில் அனுப்பியிருக்காங்க. கூடிய சீக்கிரம் அதனுடைய அடுத்த பகுதி பற்றிய மீட்டிங்  மற்றும் அந்த ப்ராஜக்ட் ஹெட் தேர்வு எல்லாம் இருக்கும். அதனால என் மனசெல்லாம் அதில தானிருக்கு. இதுவும் என் வில்லா பிளானுக்குஒத்துப் போறமாதிரி வரது பார்.நீ பிரமோஷனில் அடுத்தலேவலுக்கு உயரந்து வரப்போற சமயம் நம்ப லிவிங் ஸ்டைலும் உயரப் போறது சண்டே நாம இந்த பில்டரைப் பார்க்கப் போறோம் பதிலுக்குக் காத்திராமல் கார் சாவியோடு கிளம்பிச் சென்றான் ஸ்ரீதர்.

      வேலைகளை முடித்துக் கொண்டு லதா உடை மாற்றிக் கொண்ட நேரம் ஆட்டோ வந்து சேர அலுவலகப் பை குழந்தையின் பை ஆகியவற்றை டிரைவரிடம் கொடுத்துவிட்டு தோளில் குழந்தையை சார்த்தியவாறே வீட்டைப் பூட்டிக்  கொண்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள் லதா. கொஞ்ச நாள் முன்னாடி இன்னொரு கார் வாங்கலாமான்னு கேட்டார். இப்ப என்னடான்னா வில்லாவாம் அர்த்தமில்லாம ஆசைபடறதும் அகலக் கால் வைக்கறதும் தேவையா  இவங்க அண்ணா மாதிரி வாழணும்னு நினைச்சிருந்தா இவரும் அவரை மாதிரி ஒரு  பெரிய பிஸினஸ்மேன் வீட்டு மாப்பிள்ளையா  போயிருக்க வேண்டியதுதானே..... மனதில் குமுறும் எண்ணச் சுழலினிடையே ஆட்டோ அம்மா வீட்டு   வாசலில் நிற்பதை உணர்ந்து வீட்டிற்குள் நுழைந்தாள் லதா.

     வாம்மா.... மகளை வரவேற்றபடியே தூங்கும் குழந்தையை அவளிடமிருந்து வாங்கி படுக்கையில் கொண்டுவிட்டு வந்தார் மூர்த்தி. இந்த மீனா கழுதையால அம்மாவையும் உன்னையும் சிரமப் படுத்த வேண்டியதாயிருக்கு.....ஏண்டி இந்த சாக்கிலயாவது நீ குழந்தையோட இங்க வந்திட்டுப் போறது  ரொம்ப சந்தோஷமாயிருக்கு. சொன்ன  அம்மா கமலம்  மீனாவும் பாவம் காரணமில்லாம இப்படி வராம இருக்க மாட்டாளே. போன மாசம் நீ ஆபிஸ் வேலையில மூழ்கி இருந்து லேட்டா வீட்டுக்குப் போன போதும் சனி ஞாயிறு கூட ப்ராஜெக்ட் வேலையில நீ  பிஸியா இருந்தப்பவும் வீட்டு வேலை குழந்தை வேலைன்னு நேரம் காலம் பார்க்காம பொறுப்பா அவ  உழைச்சதை நினைச்சுப் பாரு என்றாள்.

    அதை நான் இல்லைன்னு சொல்லலியே  ...... நானும் அவளுக்கு வஞ்சனையில்லாம பணமாவும் பண்டமாவும் எவ்வளவு கொடுத்திருக்கேன் தெரியுமா அவ எங்க வீட்டிலிருந்து லேட்டா கிளம்பற போதெல்லாம் ஆட்டோ வச்சி அனுப்பறது அவ குழந்தைகளுக்கும் இங்கியே சாப்பாடு பண்ணி எடுத்துண்டு போகச் சொல்றதுன்னு ரொம்பப் பரிவோடத் தான் நடத்தியிருக்கேன். அவளுக்குன்னு ஒரு செல்போன் வாங்கித்தந்து

அதுக்கு பில்லும் நான் தான் கட்டறேன். கஷ்டம்னு அப்பப்ப அவ வாங்கிக்கற பணத்துக்கு நான்  கணக்கே வச்சிக்கறதில்ல.ஆனா அவளால இப்ப போன் செஞ்சு  விபரம் சொல்லக் கூடமுடியலை என்றாள் ஆத்திரமாக....... சரி எனக்கு நேரமாகிறது. காலையில  நவீன் கொஞ்சம் காய் பருப்பு மிக்ஸ் பண்ணின சாதம் சாப்பிட்டான். எழுந்த பிறகு ஏதாவது கொடு. குழந்தைகி ட்ட அவனைத் தனியா விட்டுடாதீங்க. ஒரு நிமிடம் உள்ளே சென்று தொட்டிலில் தூங்கும் ஆகாஷைப் பார்த்து அவன் பிஞ்சுக் கன்னங்களை உற்று நோக்கி காயம் ஏதுமில்லாததை செக் செய்து ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டபடி இதமாக அவன் தலையை வருடிவிட்டு வெளி வந்தாள். சாப்பாட்டு விட்டு போ என்ற அம்மாவிடம் டிபன் சாப்பிட்டிருக்கேன் வேண்டாம்மா என்றபடி ஆட்டோவில் கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தாள் லதா

     தன் இருக்கையில் அமர்ந்து சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்ட சமயம் லதா கொஞ்சம் என் ரூமுக்கு  வரீங்களா என சீனியர் இண்டர்காமில் அழைக்க, பரவசமும் படபடப்பும் பொங்கி எழும் உணர்வோடு அவரது அறைக்குள் நுழைந்தாள் லதா .வாங்க உட்காருங்க  என்றவுடன் தாங்க்யூ சார் என்றபடி அமர்ந்தவள் ஏற்கனவே அங்கு வந்து அமர்ந்திருக்கும் சக ஊழியர் சந்திர சேகரைப் பார்த்து ஒரு புன்முறுவலை வெளியிட்டாள்.

     ப்ராஜெக்ட்டை பத்தி ஹெட்ஆபிஸிலிருந்து வந்த மெயிலைப் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்... உங்களையும்  உங்க டீமையும் ரொம்ப பராட்டியதோடு மட்டுமில்லாம .அடுத்த கட்ட வேலைகளும் இதே மாதிரி எவிஷியண்ட்டாவும் வேகமாவும் நடக்கணும்னும்னு  உத்திரவு போட்டு எனக்குத் தனியா ஒரு  மெயில் வந்திருக்கு. அந்த வேலைகளுக்கு மெயின் இன்சார்ஜா நம்ம சந்திரசேகரை செலக்ட் பண்ணி நீங்களும் உங்க டீம் மெம்பர்ஸ்ஸும்  அவருக்கு முழு  ஒத்துழைப்பு கொடுத்து நல்லவிதமாக வேலையை முடிக்கணும்னு குறிப்பிட்டிருக்காங்க. இதற்கான அபிஷியல் ஆர்டர் மெயில் இன்னும் ஓரிரு நாளில் வரும். தொடர்ந்து அவர்  பேசியது எதுவும் புரியாத நிலையில் லதா சிலையாக அமர்ந்திருந்தாள். என்ன லதா மௌனமாக இருக்கீங்க எனி டவுட் என்றவரை ஏறிட்டவள்  இது வரை இந்த ப்ராஜெக்டில் எந்த விதத்திலும் சம்பந்தப் படாத மிஸ்டர் சேகர்  இதன் தலைமைப் பொறுப்பு ஏற்பது எப்படி சரிவரும் என்பதுதான் மை ஒன் அண்ட் ஒன்லி டவு ட் என்றாள் இகழ்ச்சி தெனிக்கும் குரலில். .

இது ஹெட் ஆபிஸின் தீர்மானம் என் தனிப் பட்ட  முடிவல்ல. நீங்கள் மிகுந்த திறமைசாலி என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நீங்கள் திருமணமாகி சிறு குழந்தையோடு இருக்கும் பெண்மணி. இறுதிப் பகுதியின் வேலைச் சுமையை  குடும்பப் பொறுப்புகளிடையே ஒரு பெண்ணால் சமாளிக்க முடியாது என்று மேலிடம் முடிவு செய்திருக்கலாம்  என்றார் .இது நாள் வரை  இந்த நிறுவனத்தில் தோன்றாத ஆண் பெண் ஊழியர் வேறுபாடு பெரிய விஷயமாக இப்போது பேசப்படுவது ஆச்சரியமாக இருக்கு ௐ . கே சார், திரும்பிப் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறி தன் இருக்கையை அடைந்தாள் லதா. 

     அவள் வருகையை எதிர்பார்த்துக்காத்திருந்த டீம் மேட் கவிதாவிடம் நடந்த விபரத்தைக் கூற , சேகர் நம்ப எம். டி.யை காக்கா பிடிப்பதைத் தவிர ஆபிஸ்வேலை எதும் உருப்படியாக செய்ததில்லை. நம்ப டீம் ஆளுங்க இதைக் கேட்டா ரொம்ப வருத்தமும் கோபமும் அடைவாங்க.

என்றாள் கவிதா ,சோகமாக.  எனக்கு ரொம்ப தலைவலிக்கிறது. அரை நாள் லீவு  அப்ளை பண்ணிவிட்டு வீட்டுக்குக் கிளம்பறேன்,  பொங்கி வரும் அழுகையை மறைத்துக் கொண்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்த  சோபாவில் உட்கார்ந்து அழத் துவங்கினாள் லதா. அழுதபடியே சோபாவில் சரிந்து தூங்கி விட்டவள் சிறிது நேரத்தில் கண் விழித்து அப்பாவிற்கு போன் செய்தாள். ஸ்ரீதர் ஆபிஸிலிருந்து அங்க வந்து நவீனைக் கூட்டிண்டு வருவார். நான் அப்பறமா பேசறேன். போனைக் கட் செய்த பின் ஸ்ரீதருக்கும்  குழந்தையைக் கூட்டிவரச் சொல்லிவிட்டு முகம் கழுவி வந்தாள் .இரவுக்கான சமையலை நிதானமாக முடித்து குளித்து ஆடை மாற்றிக் கொண்டு வர ஸ்ரீதரும் குழந்தையோடு உள்ளே வந்தான்.  தாவி வரும் மகனை புன்னகையோடு லதா வாங்கிக் கொள்ள லதா, இவன் கீர்த்தனவோடு உட்கார்ந்து கொண்டு உங்க மன்னி ஊட்டிவிட சமத்தா டின்னர் சாப்பிட்டான். உன்கிட்ட எப்படி ரகளை செய்வான். சரி என்ன ஒரே வாசனையாயிருக்கே என்ன ஸ்பெஷல் என்பவனைப் பார்த்து சிரித்தவாறே ரொம்ப நாளைக்கப்பறம்  இன்னிக்குத் தான் ஒழுங்கா சமைச்சிருக்கேன். கைகால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் என்றாள்.  காலையிலேந்து நவீனைப் பார்க்கவேயில்லையே சொல்லிக் கொண்டே உள்ளே வந்த பக்கத்து பிளாட் ராஜம் மாமியைப் பார்த்தவுடன் அவரிடம் ஓடிய குழந்தையை கையில் தூக்கிக் கொண்ட மாமி, மாமா இவனோடு விளையாடக் காத்துண்டு இருக்கார். நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்றபடி குழந்தையோடு சென்றார். மனைவியின் சமயலை பிரமாதம் என்று பாராட்டிக் கொண்டே ஸ்ரீதர் உண்டு முடிக்க, லதாவும் சாப்பிட்டு உள் வேலைகளை  முடித்துக் கொண்டு வந்தாள். விளையாடிண்டே குழந்தை தூங்கிட்டான். சொன்னபடியே தோளில் குழந்தையோடு அடுத்தவீட்டு மாமா வர, அவரிடமிருந்து ரொம்ப தாங்க்ஸ் மாமா என்றபடி நவீனை வாங்கிப் படுக்கையில் போட்டான் ஸ்ரீதர்.

    இன்னிக்கு உன்னோட சாப்பாடு ஏ.ஒன். அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன் லதா.....இனிமே தினமும் இப்படி வகைவகையா சமைச்சுப் போட்டுண்டு வீட்டோட இருக்கறதாமுடிவு பண்ணிட்டேன்  என்றாள் லதா  அமைதியாக. புரியாமல் பார்க்கும் கணவனிடம் நான் வேலையை ரிசைன் பண்ணப் போறேன் என்று அலு வலகத்தில் நடந்தவற்றை சொன்னாள்.

 உங்க ஆபிஸில் எடுத்துள்ள முடிவு ரொம்ப அநியாயம் தான். ஒத்துக்கறேன். அதே சமயம் அவங்க உன் வேலையைப் பாராட்டியிருக்காங்களே தவிர உன்னை உதாசீனப் படுத்தலியே அப்படியிருக்கும்  போது நீ தடாலடியா லேலையை விடறதா சொல்றது சரியில்லை .நாய் வித்த காசு குறைக்காதுங்கறது போல இவ்வளவு நல்ல கம்பெனி, உன்னுடைய இத்தனை வருடசர்வீஸ்  இதையெல்லாம் நினைச்சிண்டு நீ பாட்டுக்கு வேலைக்குப் போறதுதான் நல்லது..... தொடர்ந்து அவனைப் பேச வி டாமல், இத பாருங்க என்னை விட எந்த விதத்திலும் உயர்ந்த தகுதியில்லாத அந்த சந்திரசேகருக்குக் கீழே வேலை செய்யணும்னு நினைக்கவே எனக்குப் பிடிக்கலை. ஒரு பெண் பாடுபட்டு அமைச்சுக் கொடுத்திருக்கற அஸ்திவாரத்தில  ஆண் என்கிற ஒரே தகுதியை வச்சிண்டு  விஷயம் தெரியாத ஒருத்தன் அவஉதவியோட மாளிகை எழுப்பி பாராட்டைசம்பாதிப்பானாம் இதுஎந்த விதத்தில நியாயம் ஆத்திரமாகக் கேட்டாள் லதா.

    இதபார் லதா அநாவசியமா உணர்ச்சிவசப் படாம கொஞ்சம் பிராக்டிக்கலா யோசி. காலையில நான் எவ்வளவு எதிர்பார்ப்போட அந்த வில்லாவைப் பத்தி பேசினேன்னு மறந்து போச்சா நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே  நம்ம எதிர்கால வளர்ச்சிக்காகவும் பொருளாதார உயர்வுக்காகவும் இரண்டு பேரும் வேலை பார்க்கணும்ங்கற என் விருப்பத்தை நான் தெளிவா சொல்லியிருக்கேன். நாம இருவரும் வேலைக்குப் போனாதான் அந்த லட்சியங்கள் நிறைவேறும். வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு எல்லாத்திலும் நான் உனக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்னு சொன்ன மாதிரியே இப்பவரைக்கும் நடந்துண்டுவரேன்...

   எதிர் கால வளர்ச்சின்னா பெரிய பங்களா கார் போன்ற பகட்டுத்தனம் மட்டுமல்ல. குழந்தைகளை நல்ல பண்பாளர்களாக அறிவாளிகளாக வளர்க்கிறது.ம் அதில வரது. நம்ப எதிர்கால பிளான்படி நவீனுக்கு துணையா இன்னொரு குழந்தை பெத்துக்கற ஐடியா கூட நமக்கு  இருக்குங்கறது நினைவிருக்கா இதெல்லாத்துக்கும் மேல என்னோட தன்மானத்தை இழந்து என்னைஅங்கே வேலைக்குப்  போக வற்புறுத்த மாட்டீங்கன்னு நம்பறேன். போன் ஒலிக்க, லதா  அதை எடுத்தாள்.

அம்மா, நான் தான் மீனா, பேச்சை அவள் தொடர்வதற்குள் மூணு நாளா பேசாதவ இப்ப எதுக்கு போன் செய்யறே நான் கொடுத்த போன் கட்டற பில் எல்லாம் மறந்து போச்சா கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேனே அந்த நன்றிகூட இல்லையா என்னை விட ஏமாந்தவளா யாராவது கிடைச்சு அங்க வேலைக்கு போக  ஆரம்பிச்சிட்ட போலிருக்கு. போனை வை உன்னோடு பேசவே பிடிக்கலை. தொடர்பைத் துண்டித்தவள் குழந்தை அருகில் சென்று படுத்து சிறிது நேரத்தில் உறங்கிவிட்டாள்.

     காலையில் சிறிது தாமதமாகக் கண் விழித்த லதா ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவனுக்கும் தனக்கும் காபியைக் கலந்துகொண்டு வந்தாள். மௌனமாக இருவரும் காபி குடித்து முடித்த  சமயம்  குழந்தையும் விழித்துக் கொள்ள அவனுக்கும் அவசரமாகப் பாலைக் காய்ச்சி ஆறவைத்த படியே அவன் பல்லைத் தேய்த்து முகம்    துடைத்து பாலை ஆற்றி அவனுக்குக் குடுக்கத் துவங்கினாள்.

     சார்..... வாசலில் யாரோ அழைக்க, யாரு என்றுகேட்டபடி ஸ்ரீதர் வாசலுக்குச் சென்றான். நைந்து போன காலணிகள், பரட்டைத் தலை, சாயம் போன சட்டை அழுக்கு லுங்கி என்று எதிரில் நிற்பவன் யார் என்று தெரியாமல் ஸ்ரீதர் விழிக்க, நான் உங்க வீட்டில வேலை செஞ்ச மீனாவோட புருஷன் பெருமாள்....நேத்து ராத்திரி மீனா அம்மாவுக்கு போன் செஞ்சா. அவ விபரம் சொல்றதுக்குள்ள அம்மா கோபமா ஏதேதோ பேசி போனை கட் பண்ணிட்டாங்க. நாலைஞ்சு நாள் முன்னாடியே மகனுக்கு ஜுரம்னு சொல்லி லீவு போட்டா எங்கம்மா கைவைத்தியத்தில ஜுரம் விடாததால ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதா போச்சு  அப்போன்னு பாத்து எங்க சொந்தக்கார ஆளு இறந்துவிட்ட தகவல் வர, நான் கிளம்பிப் போயிட்டேன். மீனா, எங்கம்மா, மூத்த மக கைக்குழந்தை எல்லாருமா கிளம்பி ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க.எங்க போறாத நேரம் பஸ்ஸை விட்டு இறங்கின அம்மா கால்தடுக்கி ரோட்டில விழுந்து அந்த அதிர்ச்சியில மயக்கமாகிட்டாங்க. ஆஸ்பத்திரி எதிரில இருந்ததில இரண்டு மூணு பேர் உதவியோட  அம்மாவை உள்ள அழைச்சிட்டுப் போயிருக்கா. அவங்களுக்கு கால் பிராக்சர் கைகள் எல்லாம் ரத்த காயம். அவங்களை அட்மிட் செஞ்ச பிறகு குழந்தைக்கு ஏதோ டெஸ்ட்எல்லாம் பார்த்திட்டு

ட்யூப் வழியா மருந்து ஆகாரம் கொடுக்கணும்னு சொல்லி  அவனையும் வார்டில் போட்டிருக்காங்க. அப்பத்தான் மீனா எனக்கு தகவல் சொல்றதுக்கு போனை தேடியிருக்கா. அம்மா கையில இருந்த பையில இருந்த போன் அவங்க கீழே விழுந்த போது ரோடிலேயே விழுந்து காணாமப் போயிடிசுசு. நல்ல வேளை பர்ஸ் மீனாகிட்ட இருந்ததால எதையோ வாங்கி சாப்பிட்டு அம்மா பெட்டுக்கும் குழந்தை வார்டுக்கும் மாறி மாறி ராவெல்லாம் தூங்காம மகளையும் இழுத்துக்கிட்டு அலைஞ்சிருக்கா. எனக்கும் போன இடத்தில காரியம் முடிய தாமதம் ஆனதில நேத்து சாயங்காலம் தான் திரும்பிவர முடிஞ்சுது. குழந்தைக்கு உடம்பு பரவாயில்லைன்னு மருந்து மாத்திரை கொடுத்து டிஸ்சார்ஜ் செய்ததால அம்மா மீனாவை. வீட்டுக்குப் போயிட்டு வான்னு அனுப்பிச்சிருக்காங்க .பக்கத்துப் பெட்காரஙக கிட்டவும் நர்ஸம்மா கிட்டவும் அவங்களைப் பாத்துக்க சொல்லிட்டு அவளும் அப்பதான் வீடு வந்து சேர்ந்திருந்தா. வீட்டை சீராக்கி சமைச்சு எனக்கும் பசங்களுக்கும் சோறு போட்டவ அம்மாகிட்ட பேசிட்டு சாப்பிடறேன்னு சொல்லி என் போனிலிருந்து  பேசிணா. அவங்க பேசின பேச்சில நொந்து போயி ஒரே அழுகை.. இவ்வளவு நாள் உண்மையா உழைச்சதுக்குப் பலன் இது தானான்னு புலம்பிக்கிட்டு சாப்பிடாமயே படுத்துக்கிட்டா. நான் அம்மாவைப் பாக்க ஆஸ்பத்திரிக்குப் போறவழியில தகவல் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்....போகத் திரும்பியவனை கொஞ்சம் நில்லுப்பா. நடந்தது என்னன்னு தெரியாம ஆபிஸ் தொல்லையில லதா கோபமா பேசிட்டா. அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இன்னும் கொஞ்ச நாள் மீனா வீட்டிலிருந்து  உன் அம்மாவையும் குழந்தையையும் பார்த்துக்கிட்டு வேலைக்கு வரட்டும்.  மருந்துசெலவுக்கு ஏதாச்சும் பணம்தரேன் .வாங்கிட்டுப் போ...... வேணாம் சார் ஏற்கனவே நாங்க அம்மாகிட்ட  நிறைய கைமாத்து வாங்கியிருக்கோம். அதை கொஞ்சம் கொஞ்சமா   எப்படியாவது திருப்பித் தந்திடறோம் நாங்க இல்லாதவங்க.தான். உங்களை மாதிரி பணக்காரங்களை அண்டிப் பிழைக்கறவங்க தான் .அதுக்காக  உழைச்ச உழைப்புக்கு பலனா எம் பெண்டாட்டி மோசமான பேச்சுகளை கேட்டுக்கிட்டு வேலைக்குப் போறதை நான் அனுமதிக்கறதா இல்லை. வயசான  எங்க அம்மாவுக்கு எலும்புசேர நாளாகும். அதுக்கு அப்புறமும் பழைய மாதிரி நடமாடி குழந்தைகளைப் பாத்துக்க அவங்களால முடியும்னு தோணலை. அதால இனி  எங்கியும் எம் மீனாவை நான் வேலைக்கு  அனுப்பறதாயில்லை.  ரோஷமான ஆம்பிள்ளையா என்னைநம்பி வந்தவளையும் பெத்த அம்மாவையும் எங் குழந்தைகளையும் நாள் முழுக்க உழைச்சுக் காப்பதறதுன்னு முடிவெடுத்திருக்கேன். நீங்க கொடுத்த போனுக்கு பதிலா வேற போனும் வாங்கிக்கொடுத்திடறேன்னு அம்மா கிட்ட சொல்லிடுங்க... பதிலுக்குக் காத்திராமல் அகன்றான் பெருமாள்.

    ஹாலில் உட்கார்ந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த லதா தன் ஆத்திரமும் ஆவேசமும்  நிறைந்த வார்த்தைகள் ஒரு நல்ல மனசை எவ்வளவு நோகச் செய்துவிட்டது  என்று நி னைத்து வெட்கமும் வேதனையும் அ டைந்தாள்.

    அதேசமயம் ஸ்ரீதருக்கும் பெருமாளின் வார்த்தைகள் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்க நேத்து நான் பேசினதுக்கு என்னை மன்னிச்சிடு  லதா. படிக்காதபெருமாள் வந்து இந்த படித்த முட்டாளின் கண்ணை திறந்துவிட்டான். . நீ விரும்பியபடி உன் ராஜினாமா கடிதத்தை மெயில் பண்ணிடு.  இப்ப. நாம போயி மீனாவை நேரில் பார்த்து சாரி கேட்டுட்டு வரலாம். தொடர்ந்த அவ வேலைக்கு வரதைப் பத்தி அவளே முடிவெடுத்துக்கட்டும் என்றான் புது மனிதனாக.


Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu