மாற்றம்  

                                                                 சாந்தி நாதன்

 

 "ராதிகா, நீ போய் டிரஸ் மாத்திண்டு வா. மணி எட்டரை ஆறது பார். நான் டேபிளி்ல் எல்லாத்தையும் வச்சுக்கறேன்." சொன்னபடியே  கனகா டிபன் தட்டுகள், சாம்பார், இட்லி  போட்ட ஹாட் பாக்ஸ் என்று ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைக்கவும் அலுவலக உடையில் மகன் கௌதமும் கணவர் சுந்தரமும் வந்து அமரவும் சரியாக இருந்தது.

         "அம்மா, உன் கைப் பக்குவமே தனி. பத்து நாளா இதை ரொம்ப மிஸ் செய்தேன்."...இட்லியை சாம்பாரில் முக்கி வாயில் போட்டுக்கொண்டு எதிரில் வந்து அமரும் மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னான் கௌதம்.

     சமையல் அறையிலிருந்து பாக் செய்து தயாராக வைத்திருந்த மூன்று காரியர்களை வேகமாக டேபிளில் வைத்த கனகா, "பத்து நாள் டூர் முடிஞ்சு ராத்திரி வந்து படுத்தவ காலை எட்டு மணிக்கு தான் எழுந்து வந்தேன். அதுக்குள்ள எம் மருமக டிபன், மதிய லஞ்சுக்கு தக்காளி சாதம், பொரியல் எல்லாம் தயார் செஞ்சு இதோ ஆபிஸ் போகவும் அழகா ரெடி ஆயிட்டா. பத்து நாளா பெண்டாட்டிக்கு கூடமாட உதவாம உக்கார்ந்துகிட்டு  உன் ஆம்பிளைத் தனத்தை காமிச்சிருக்கேங்கறது நல்ல புரியிது. மனைவியா வரவ படிச்சவளா உத்தியோகத்துக்குப் போறவளா இருக்கணும்னு எதிர்பார்க்கறவன் அவளுக்கு வீட்டுவேலையிலே உதவி செய்யறது தானே நியாயம் . நான் இல்லத்தரசி தான். ஆனா நீங்களெல்லாம் சின்னவங்களா இருந்தப்ப உங்கப்பா காலை வேளைகளில் எனக்கு எவ்வளவு உதவி செய்வாருன்னு உனக்கு மறந்து போச்சா?" ஆவேசமாக பேசும் மனைவியைபு பார்த்து " உம் பிள்ளைக்கு உரைக்கற மாதிரி நல்ல சொன்ன கனகம்.." சிரித்தபடி பாராட்டும் மாமனாரை பார்த்த ராதிகா, "அவரு என்னை சீண்டுவதற்காக விளையாட்டா சொன்னதை நீங்க சீரியசா எடுத்துக்காதீங்க " என்றவாறு  வாசலில் காத்துநிற்கும் அலுவலக காரை நோக்கி நடந்தாள். "ஏய் ராது, லஞ்ச் பேக் மறந்துட்டுப் போறியே" என்றபடி பையோடு காரை நோக்கி விரையும் மகனை ரசித்தபடி நின்றனர் பெற்றோர்கள்.

Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தனை சாந்தி நாதன்

ரௌத்திரம் பயில்

Tribute to Thatha - Aadhu