தடை
தாண்டி நடை போடு
சாந்தி நாதன்.
"ஸ்வேதா, பிரசாத், நாங்க
போயிட்டு வரோம்.சூர்யா செல்லம் சமத்தா இரு. இந்த தாத்தா பாட்டி கூட ஜாலியா இருந்த
மாதிரி நாளையிலேந்து அந்த தாத்தா பாட்டி கூடவும் இரு. சம்மர் லீவுக்குக் கோவைக்கு எல்லாருமாக வந்துடுங்க.அங்க சுரேஷ், அ்ர்ச்சனா கூட நல்ல விளையாடலாம்." பேரனை அணைத்தபடி பாட்டி சொல்ல,
"சரி பாட்டி,… ...திரும்பி
சென்னைக்கு நாங்க வரும்போது எங்க கூட
தாத்தா பாட்டியை அனுப்பிடுவீங்களா பெரியப்பா?"ஏக்கமாய்
கேட்கும் தம்பி மகனைப் பார்த்து முறுவலித்த சந்திரன், "தாத்தாவோட
கண் ஆபரேஷன் நல்லபடியாய் முடியட்டும்.
இன்னும் ரெண்டு நாளில் அந்த தாத்தா பாட்டி வந்துடுவாங்க இல்லையா ? அவங்களும் உன்னை நல்லாப் பாத்துப்பாங்க சரியா? பிளைட்டுக்கு
டயம் ஆச்சு.சிரிச்சுக்கிட்டு எங்களுக்கு பை சொல்லு" . மூவரும் காரில் ஏற
வண்டி கிளம்பிச் சென்றது.
சந்திரன்,
பிரசாத் இருவரும் சங்கரி, ராமநாதனின்
பிள்ளைகள். சென்னையில் வசிக்கும் பிரசாத், ஸ்வேதா இருவரும்
பணியில் இருப்பதால் அவர்கள் மகன் சூர்யாவை
பார்த்துக் கொள்ளும் பொறுப்பை
ஏற்றுக் கொண்டு அவர்களோடு ராமநாதன் தம்பதிகள் இருந்து வந்தனர். அவ்வப்போது மூத்தவர்
குடும்பத்தோடு சென்னைக்கு வருவதும் லீவு கிடைக்கும் போதெல்லாம் பெற்றோர், மனைவி, மகனுடன் இளையவன் கோவைக்கு விஜயம் செய்வதுமாக இணைந்து
வாழ்பவர்கள். ராமநாதனுக்குக் கண் அறுவை சிகிச்சையை கோவையில் செய்தால் வீட்டில்
இருக்கும் பெரிய மருமகள் லதா பார்த்துக் கொள்வாள் என்பதால் சந்திரன் அவர்களை
அழைத்துப் போகிறார்.
"அம்மா, கமலாபாட்டி,
சங்கரன் தாத்தா, மாமா, ராகிணி ஆண்டி, ஷரீஷ், நாளைக்கு எப்ப வருவாங்க?" சூர்யா
ஆவலாய் கேட்க, " அவங்க ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை
மறுநாள் மதியம் வந்துடுவாங்க. ஹரீஷ் குட்டியோட நீ லஞ்ச் சாப்பிடலாம். இப்ப தூங்கப்
போகலாம் வா." "ஸ்வேதா, அம்மா உன்னோட பேசணுமாம்" போனை
மனைவியிடம் பிரசாத் கொடுப்பதற்குள் "நான் பாட்டியோடு பேசணும் " போனை
வாங்கிக் கொண்ட சூர்யா, "பாட்டி, நீங்களும்
தாத்தாவும் எப்படி இருக்கீங்க? பெரியம்மா, அண்ணா,
அக்கா எல்லாரும் நல்லா இருக்காங்களா? நீங்க இல்லாம நல்லாவே இல்லை"
குரல்கம்மிப் பேசும் பேரனை சமாதானம் படுத்துவது போல்," செல்லக்
குட்டி, கொஞ்சநாள் தானே அப்புறம் நாங்க வந்துடுவோமில்லை? பெரியப்பா உன்னைப்பத்தி தான் இங்கே
எல்லார் கிட்டயும் பேசிட்டே இருக்கார். சரி நேரமாவுது நீ ஏன் இன்னும் தூங்கப்
போகலை? அம்மாகிட்ட போனைக் கொடுத்திட்டு சமத்தா
தூங்கு"..... "சரி பாட்டி குட் நைட்". போனை அம்மா கையில் கொடுத்தான் சூர்யா.
"உங்க அப்பா, அம்மா,
தம்பி குடும்பம் எல்லாரையும் பார்த்திட்டு கிளம்பணும்னு தான்
நினைச்சோம். ஆனா சந்துருவுக்கு முக்கியமான வேலை இருக்குன்னு முன்னாடியே கிளம்பற
மாதிரி ஆயிடிச்சு. அவங்க கிட்ட தப்பா
நினைக்கவேணாம்னு சொல்லு."... "என்ன அத்தை இது?.உங்களைப் பத்தி
அவங்களுக்குத் தெரியாதா? மாமா எப்படி இருக்காரு? "
"சுரேஷ், அர்ச்சனா கூட ஒரே விளையாட்டு, கூடவே சூர்யாவைப் பத்தி
பேசிட்டே இருக்கார். இதபாரு கடவுள் அருளால நாங்க அங்க இல்லாதபோது உங்களுக்கு
ஒத்தாசைக்கு உன் பெத்தவங்க அங்க வரமாதிரி ஒரு
சூழ்நிலை அமைஞ்சிருக்கு. அவங்க மகனை முதல் முறையா பிரிஞ்சு வெளி நாட்டுக்கு
அனுப்பறாங்க. அந்த ஏக்கம் அவங்களுக்குக் கொஞ்சம் கூட வராம நல்லபடியா அவங்களைப்
பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. பிரசாத்கிட்டயும் இதை
சொல்லியிருக்கேன்.". மாமியாரின் வார்த்தைகளில் நெகிழ்ந்த ஸ்வேதா "சரி
அத்தை உங்க நல்லமனசு எல்லாருக்கும் வராது." என்றாள்.
ஞாயிறு
பகல் ஸ்வேதா ஆவலோடு எதிர்பார்த்திருந்த தம்பி குடும்பமும் பெற்றோர்களும் குறித்த
நேரத்துக்கு வந்து சேர்ந்தனர். பிரசாத் இன்முகத்தோடு வரவேற்று டாக்ஸியிலிருந்து
சூட்கேசுகளை மைத்துனன் மகேசுக்கு உதவியாக
இறக்கி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான். "அண்ணா" என்று ஓடி வந்த ஹரிஷை
பூரிப்பும் பெருமிதமுமாக சூர்யா அணைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். சிரிப்பும்
கும்மாளமுமாய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு அனைவரும் வரவேற்பறையில் வந்து உட்கார,
குழந்தைகள் உற்சாகமாய் விளையாடிக் கொண்டிரு்தனர். "ஸ்வேதா,
லஞ்ச் பிரமாதம். அத்தை தான் எக்ஸ்பர்ட் குக்னு நான்
நினைச்சிருந்தேன். நீங்க அவங்களையே
மிஞ்சிட்டீங்க..." ரஞ்சிதா மனமார பாராட்ட, " தம்பி
பாவம் இன்னும் கொஞ்ச நாளில் அவன்
பெண்டாட்டி சமையலத்தானே சாப்பிட்டு கஷ்டப்படணும், அதனால
நாம ஒழுங்கா சாப்பாடு செய்வோம்னு எங்க அக்கா அக்கறையா
சமைச்சிருக்காங்க.அதான்" என்றான் மகேஷ் குறும்புப் புன்னகையோடு. "
ஏய்
என்னடா எம் மருமகளைக் கிண்டல் பண்றியா? சப்பாத்தி,
குருமா, புலாவ் எல்லாம் அவ பிரமாதமாய்
செய்வாளே." கமலா பரிந்து கொண்டு பேச, "ஆனா
அவருடைய பேவரிட் ஐட்டம்ஸ் சாம்பார், காரக்குழம்பு,
அவியல் எல்லாம் எனக்கு சரியா செய்ய வரலையே,"ரஞ்சிதா குழந்தைத் தனமாய் பேசுவதை எல்லாரும் ரசித்தனர். "சமையலை
விடும்மா. ரஞ்சு ஆபீஸ் விவகாரத்தில எல்லாம் பெஸ்ட். அவளோட மேலதிகாரி இவளுக்கு
ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்து அவ கானடா போறவரைக்கும் மும்பையிலிருந்து ஒர்க் ப்ரம்
ஹோம் முறையில் வேலை பார்க்கலாம். அவ கிளம்பற தேதி கன்பர்ம் ஆனபிறகு வேலையை ரிசைன்
செய்யலாம்னு சொல்லியிருக்கார் தெரியுமா?
ஹரிஷ் பிளே ஸ்கூலில் ஏதாச்சும் ப்ரோக்கிராம்
எனறால் இவதான் புது மாதிரியா ஏதாச்சும் பிளான் போட்டு குழந்தைகளையும் தயார் செய்வா.
மொத்தத்தில் எங்க மருமக எங்க போனாலும் ஜெயிக்கற கெட்டிக்காரி." சங்கரன்
பெருமையாகப் பேசினார்.
"நீ மும்பையிலேயே பிறந்து வளர்ந்ததால
நம்ம சமையல் அவ்வளவா தெரியாம இருக்கலாம். இதெல்லாம் சுலபமா கத்துக்கமுடியும்
ரஞ்சு" ஸ்வேதா சொல்ல, "அத்தை நா எழுந்து வரதக்குள்ள சமையல்
வேலையெல்லாம் முக்கால்வாசி முடிச்சிடுவாங்க. சாயங்காலமும் நான் வரதுக்குள்ள
டின்னர் வேலை முடிச்சிட்டு இரண்டு பேரும் பேரனை கீழே விளையாட வைச்சுக்கிட்டே
வாக்கிங் போயிட்டு வந்துடுவாங்க. அத்தையோட சமையல் டிப்ஸ், அவங்க
சமைக்கும்போது ரெகார்ட் பண்ணி இருக்கற வீடியோ எல்லாம் வச்சு அங்க சமாளிக்க
முடியும்னு நினைக்கறேன்" ரஞ்சிதா பேச, " பூனாவில்
வேலைசெய்த பெண் எனக்கு உதவியா பாதி வேலையை
முடிச்சிடுவா. அப்பா ஹரீஷ் கூடவே இருந்து அவனுக்கு சரியா விளையாடுவார். அதனால
எனக்கு சிரமமில்லாம வேலை முடிஞ்சிடும்." கமலா விளக்கினாள். "ஹரீஷ் ரொம்ப
ஆக்டிவ். ஒரு நிமிஷம் கூட அவனால் சும்மா இருக்கமுடியாது. இங்க சூர்யா கூட எப்படி
ஆட்டம் போடறான் பாரு" சங்கரன் சொல்ல, "ஆமாம்
மாமா ஸ்கூல் நேரம் போக மீதி நேரம் எல்லாம்
எங்க அப்பா, அம்மா கூடத் தான் சூர்யா இருப்பான்.
நல்லநேரத்துக்கு நீங்க எங்க கூட இருக்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாவும்
திருப்தியாவும் இருக்கு" பிரசாத் பேசி முடிக்கவும், "சரி இப்ப நாம மத்த விஷயங்களைப் பத்தி பேசுவோம்" மகேஷ் சொல்வதைக் கேட்க எல்லாரும் தயாரானார்கள்.
" இந்த
கானடா பயணம் எங்க இரண்டு பேரோட நீண்ட நாள் கனவு. அதுக்கு ஏத்த மாதிரி அங்க இருக்கற
என் ஃபிரெண்ட்ஸ் உதவியால எனக்கு ஒரு நல்ல ஆபர் கிடைச்சிருக்கு. மார்ச் முதல் வாரம்
நான் கிளம்பற மாதிரி இருக்கும். என் ஆபிசில் ஜனவரியில் என்னை ரிலீவ் செஞ்சுடுவாங்க.
அந்த சமயத்துக்குள் பூனா வீட்டை காலி பண்ணி கார், பைக்
எல்லாம் வி்க்கணும். அப்பாகூட எனக்கு உதவியா அங்கு இருக்கப் பாத்தார். நான்தான்
வேணாம் என்று சொல்லிட்டேன். என் ஆபிஸ் நண்பர்கள் பிளாட் பிரெண்ட்ஸ் எனக்கு உதவறதா
சொல்லி இருக்காங்க. அப்பா அம்மாவுக்கு அங்கிருந்து ஏதாவது ஐட்டம்ஸ் வேணுமென்றால்
அதை பாக்கர்ஸ் மூலம் அனுப்பி விடுகிறேன். " "அதெல்லாம் எதுவும் தேவைப்
படாது மகேஷ். எங்க பேரண்ட்ஸ் ரூமில் காட், பெட், அல்மாரி எல்லாம் இருக்கு. நான் வேணுமான உனக்கு வீடு கிளியரன்ஸுக்கு
உதவிக்கு வரட்டுமா? ஸ்வேதா கூட உன் பேரண்ட்ஸ் இருப்பாங்க
என்பதால என்னால வரமுடியும். "பிரசாத் கேட்க "எதக்கு உங்களுக்கு வீண்
சிரமம்?. எங்களைப் பிரிஞ்சு இருக்கற ஏக்கம் என் பேரண்ட்ஸ்ஸை பாதிக்காதபடி உங்க
கூடவே வச்சுக்கப் போறீங்களே அதுக்கே நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொல்லணும்
தெரியுமா? அப்பா அம்மா உங்க வீட்டுக்கு அருகில்
ஒரு வீடு பார்த்துக்கிட்டு இருக்கத்தான் பிளான் பண்ணாங்க. ஆனாகடவுள் அருளால் உங்க
நேரடிப் பாதுகாப்பில் அவங்களை நான் விட்டுட்டுப் போறமாதிரி நிலமை உருவானது எனக்கு
பெரிய நிம்மதி. " "மகேஷ், இதில
எங்களுக்கும் ஒரு பெரிய ஆதாயம் கிடைச்சிருக்கு தெரியுமா? கொஞ்சநாள் முன்னாடி எங்க ஹெட் ஆபிசிலிருந்து என்பேரை அடுத்த
பிரமோஷனுக்கு ரெகமண்ட் செய்திருப்பதாகவும் என் ஒப்புதலை இம்மாத முடிவிற்குள்
தெரிவிக்க வேண்டும் என்றும் மெயில் வந்திருந்தது. அந்த போஸ்டை ஒப்புக் கொண்டால்
நிறைய டூர் போகவேண்டியிருக்கும். பேரண்ட்ஸ் இல்லாத சமயத்தில் வேலைக்குப் போகும்
ஸ்வேதா, சூர்யாவோடு அந்த சமயங்களில் தனியா சமாளிக்க
முடியுமா என்று தயக்கமாக இருந்தது. மாமா மாமி இங்க இருக்கப் போறாங்கன்னு
நிச்சயமானவுடன் நான் அந்த போஸ்டுக்கு ஒப்புதல் தெரிவித்து பதில்
அனுப்பிவிட்டேன்." பிரசாத் சொல்லி முடித்தவுடன் "ரொம்ப சந்தோஷம் "
மகேஷ் கைகுலுக்கியவாறே பேச்சைத் தொடர்ந்தான்.
"ரஞ்சிதாவையும் ஹரிஷ்ஷையும் கூடிய சீக்கிரம் பாம்பேயில் அவ பேரண்ட்ஸ்
வீட்டில் விட்டுவிட்டு மத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்கணும். நாங்க கானடா போறதில
அவங்களுக்குக் கொஞ்சம் வருத்தந்தான். ஒரே மகன் குடும்பத்தோடு ஆஸ்தேரிலியாவில்
தங்கிவிட்டான். இப்ப மகளும் போகிறாளே என்று இருக்குமில்லையா? இரண்டு பேரும் ரிடையர்மெண்டுக்குப் பிறகு ஒரு தடவை மகன் ஊருக்குப்
போனாங்க. ஆனா அவங்களுக்கு அவ்வளவு நீண்ட பயணம் சரிப்படவில்லை. இரண்டு வருஷத்துக்கு
ஒருமுறை பையன் குடும்பம் இங்கு வருவதே போதும்னு இருக்காங்க. பூனா பாம்பே அதிகத் தூரம்
இல்லையென்றாலும் அவங்க அநாவசியமா வரமாட்டாங்க. நாங்கதான் அப்பப்ப பாம்பே போயிட்டு
ஒரு ஷார்ட் விசிட் கொடுப்போம். இப்ப ரஞ்சிதா பேரனோட அங்க கொஞ்சநாள் இருக்கப்
போறதில சந்தோஷமா இருக்காங்க..... நான் கிளம்பறதுக்கு முன்னாடி அப்பாவோட சென்னை
பாங்க்குக்குப் போகணும். அம்மா ஆசைப்படி கோயில்களுக்குப் போகணும். நாளையிலேந்து
அதையெல்லாம் பார்ப்போம். " மகேஷ் பேசி முடித்தான்.
அடுத்து வந்த
மூன்று நாட்களில் மகேஷ் சென்னை வேலைகளை முடித்துக் கொண்டு பெற்றோர்,சகோதரி குடும்பத்திடம் பிரியாவிடைப் பெற்றுக் கொண்டு பூனா திரும்பினான். பூனா வீ்ட்டை முழுதும் காலி செய்வதற்கும் அலுவலகத்திலிருந்து
ரிலீவ் ஆவதற்கும் முன்பாக மனைவி குழந்தையை மும்பாய் அனுப்பி வைத்துவிட்டு பிளான்
படி வேலைகளை முடித்துக் கொண்டு மகேஷும் மும்பை வந்து சேர்ந்தான்.
" திருமணமான இந்த நாலு வருடத்தில ரஞ்சு, குழந்தை
நீங்க மூணு பேரும் எங்களோட அதிகமா தங்கினதேயில்லைன்னு நாங்க ஏக்கப் பட்டதுக்கு
மாற்றா இப்ப ஊரைவிட்டுப் போற சாக்கில் இங்க இருக்கறது ரொம்ப சந்தோஷமா
இருக்கு"மாமனார், மாமியாரின் அன்பு வார்த்தைகள்
உற்சாகமாக இருந்தது. அதே சமயம் தான் ஊருக்குச் சென்றபின் வால் பிள்ளை ஹரீஷை நாள்
முழுவதும் கண்காணிப்பது வயதான மாமனார் மாமியாரால் இயலாது என்பதால் அருகில் ஒரு
ப்ளேஸ்கூலில் அவனுக்கு அட்மிஷன் வாங்கினான்.
மார்ச் மாதம் கிளம்பும் தேதியை மனம் முழுவதும் ஆவல்பொங்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனின்
எண்ணங்களை தவிடுபொடியாக்கியது கொரானா எனும் பூகம்பம்.
வெளி நாட்டு விமானப் போக்குவரத்துகள்
காலவரையின்றி நிறுத்தப் பட்டது. உள்ளூர்களிலும் கடுமையான ஊரடங்கு அறிவிப்பு.பள்ளி,
கல்லூரிகள் மூடல் என தெடர்ந்து வந்தசெய்திகள் வாழ்க்கையின் போக்கையே மந்தநிலைக்கு தள்ளிவிட்டது "ஏன் மகேஷ்
இவ்வளவு அப்செட் ஆகறீங்க? உங்க பயணம் கொஞ்சம் டிலே
ஆகிறது.அவ்வளவு தான்" மருமகனை உற்சாகப் படுத்தும் விதமாக பேசிய ரஞ்சிதாவின்
அப்பா, மகளிடம் சொல்வது போல், "இனிமே சமையல் மாமி, வீட்டு வேலையாள் யாரும் கிடையாது .அம்மாவுக்கு அதிகம் வேலை
செய்யமுடியாது.வேலைகளை ஷேர் செயது பழகணும் " என்று சென்னபோது ரஞ்சிதாவிற்கு
மாமியார் மாமனாரின் அன்புமுகம் மனதில் தோன்றி மறைந்தது.
விஷயமறிந்து சென்னையிலிருந்து மாறி மாறி பெற்றோரும் சகோதரியும் மகேஷுக்கு
ஆறுதல் வார்த்தைகள் கூறி சமாதானப்படுத்தி வந்தனர். கமலம் மருமகளிடம் "ரஞ்சு,
அவன் மனசு ரொம்ப நொறுங்கிப் போயிருக்கும். நீதாம்மா அவனை பா்ர்துக்கணும்னு"
சொன்னபோது "கவலைப் படாதீங்க அத்தை நான் அவரை நல்லபடியா கவனிச்சுக்கறேன்.உங்க
பிரார்த்தனையெல்லாம் கூட இருந்து அவரோட வெற்றிக்கு வழிகொடுக்கும். நங்களும்
தைரியமா இருங்க." சொன்னமாதிரியே
மகேஷை உற்சாகப் படுத்தியும், ஹரீஷ்ஷின்
குறும்புகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டும் அலுவலக வேலை நேரம் துவங்குவதற்குள் வீட்டு
வேலைகளை துரிதகதியில் முடிப்பதுமாக பம்பரமாகச் சுழன்று வந்தாள் ரஞ்சிதா .வீட்டு
வேலைகளில் மனைவிக்கு உதவும் எண்ணத்தில் மகேஷ் வரும் நேரங்களில் கூடவே ஓடிவரும்
ஹரீஷ் தானும் உதவுகிறேன் என்று பாத்திரங்களை உருட்டுவதும் சோப்பை கொட்டுவதுமாக
இருவரையும் பாடாய் படுத்தி எடுத்ததால் ரஞ்சு"மகேஷ், நீங்க
அவனை ரூமுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் விளையாடிக்கிட்டிருங்க போதும். நான் இந்த
வேலையெல்லாம் முடிச்சிட்டு வரேன்." என்று அனுப்பிவிடுவாள். ஒரு நாள் கிச்சனில் வேலைபார்த்துக் கொண்டிரு்த
நேரம் அவள் தாய் அங்கு வந்து"ரஞ்சு,
ஆபிஸ் வேலைகளோடு நீ வீட்டு வேலைகளையும் தனியாக செய்யவேண்டியிருக்கே.
ஏன் மகேஷ் சும்மா தானே இருக்கான்? ஏதாவது உதவக் கூடாதா? உங்க அப்பா நான் வேலைக்குப் போறசமயம் கூடவே வந்து ஹெல்ப் பண்ணுவார்
தெரியுமா? உன் மாமியார் மகனை இதற்கெல்லாம்
பழக்காமல் சொகுசாக வளர்த்து வச்சிருக்காங்க" என்ற வார்த்தைகள் எதேச்சையாக
அறையை விட்டு வெளியே வந்த மகேஷின் காதுகளி்ல் விழுந்து நெருப்பென சுட்டது.
ரஞ்சிதாவும் சும்மாஇல்லாமல்"ஆமாம. எஙக அத்தையும் மாமாவும் எங்க ரெண்டு பேரையுமே
ரொம்ப சொகுசாகத்தான் பாத்துக்கிட்டாங்க. சமையல் செய்யறதே உங்களுக்குப் பெரிய
சிரமமான வேலையா இருக்கு. ஆன அவங்க வீட்டு நி்ர்வாகம், பேரனோட
முழுப் பொறுப்புன்னு ஒவ்வொண்ணையும் எவ்வளவு ஆசையா செய்வாங்க தெரியுமா? சமைச்சிட்டீ்ங்க இல்லை போய் உங்க ரூமில
அப்பா கூட ரெஸ்ட் எடுங்க, டீ.வி. பாரு்ங்க.தப்பி தவறி கூட பேரனோட
விளையாடி ஸ்டிரெயின் பண்ணிக்காதீங்க."மகளின் கிண்டல் பேச்சில் வாயடைத்து
நகர்ந்தாள் அம்மா.
அன்று இரவு மகேஷ் "ரஞ்சிதா, இன்னிக்கு
காலை பூனாவிலேந்து எங்க பழைய மானேஜர் பேசினார். நிலமை புரிஞ்சு ரொம்ப வருத்தப்
பட்டார். இப்போதைக்கு எனக்கு அவர் மூலமாக
சில ஆன்லைன் அசைன்மெண்ட் அனுப்புவதாகச் சொல்லியிருக்கார். இதை சரிவர
முடித்துக் கொடுத்தால் தொடர்ந்து இது போல சில வேலைகள் தருவதாகச் சொல்லியிருக்கார்.
இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி ஹெட் ஆபிசில்
எனக்கு ரீஎம்ப்ளாயின்மெண்ட் கிடைக்க முயற்சி செய்வதாகவும் சொன்னார்."
தயங்கியவாறே பேசும் கணவனை அணைத்தவாறே "உன்னோட திறமை உன்னைவிட மத்தவங்களுக்குப் புரியுது பார். ஜாலியா
இரு லேட் ஆனாலும் எல்லாம் சக்ஸசாக முடியும்" உற்சாகமாகப் பேசினாள் ரஞ்சிதா.
இப்படியே
நாட்கள் ஆமைவேகத்தில் போய்கொண்டிருந்தபோது ஒரு நாள்...... ஹாலில் அமர்ந்து கொண்டு
தன் அசைன்மெண்ட் வேலைகளில் மும்முரமாக இருந்தான் மகேஷ். ஒருஅறையில் ரஞ்சிதா ஆபிஸ்
வேலைகளில் ஆழ்ந்திருந்தாள். தங்கள் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ,ரஞ்சிதாவின் தந்தை எதற்கோ வெளியே வந்தவர், "என்ன சார் இது?" என்று குரல் உயர்த்த, திடுக்கிட்டு நிமிர்ந்தான் மகேஷ். ஒரு நோட்டில் ஸ்கெட்ச் பேனாவால்
வரைந்துகொண்டிருந்த ஹரீஷ் அந்த பேப்பர்களை கிழித்துப் போட்டு சுவற்றில் கிறுக்கித்
தள்ளிக் கொண்டிருந்தான். "பிள்ளைங்களைக் கொஞ்சம் அதட்டி வளர்க்கவேண்டாமா?"
தந்தையின் பேச்சைக் கேட்டபடி புயலைப் போல் அங்கு வந்தாள் ரஞ்சிதா.
"என்னப்பா, அவனை அதட்டி அடிக்கணுமா சொல்லுங்க
"... "கொஞ்சம் டீசண்டாகப் பழக்க வழக்கம் வரணும்னு சொல்லவரேன். "
" நாலு
வயசுக் குழந்தைக் களிமண் பொம்மை மாதிரி ஒரே இடத்தில உக்கார்ந்திருக்கறது தான் உங்க
அகராதியில டீசண்சின்னா அது எங்களுக்குத் தேவையில்லை. ஜெயில் மாதிரி நாள் முழுக்க
வீட்டுக்குள்ள அடைஞ்சுக் கிடக்கறது நமக்கே கஷ்டமா இருக்கும் போது இவ்வளவு நாள்
மத்த குழந்தைகளோடு ப்ளே ஸ்கூலில் பகல் எல்லாம் ஆடிக்கொண்டும் மாலை வேளைகளில்
காற்றாட பார்க்கில் விளையாடிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தும் இருந்த குழந்தை
என்னதான் செய்யும்? இது புரியறவங்களுக்குப்
புரியும்." ஆத்திரமாகப் பேசியபடியே மகனை இழுத்துக் கொண்டு "மகேஷ்
நீங்களும் உள்ள வாங்க" என்றபடி தங்கள் அறைக்குள் சென்றாள் ரஞ்சிதா.
தொடர்ந்து வந்த
சிலநாட்கள் அதிக உரையாடல் இன்றி மௌனத்தில் கழிந்தன."திடீரென ஒரு நாள் அப்பா,
அம்மா இங்க வாங்க உங்களோட கொஞ்சம் பேசணும்" ரஞ்சிதா கூப்பிட,
இருவரும் வந்து ஹாலில் அமர்ந்தனர். மகேஷ் மகனோடு ஒருபுறம் உட்கார
ரஞ்சிதா பேசத் துவங்கினாள். "என் பிரெண்ட் வீணாவை உங்களுக்குத்
தெரியுமி்ல்லையா இங்க தாதரில்தான் அவ
கணவரோடு இருக்கா. திருமணமாகி ஆறுவருடம் கழித்து கன்சீவ் ஆகியிருப்பதால் அவ பேரண்ட்ஸ்
அவளை சீக்கிரமாகவே டெலிவரிக்குச் சென்னைக் கூட்டிண்டு போயிட்டாங்க. அவ கணவர் ராம்
அவளைப் பார்க்க சென்னை போனவர் கோவிட் ரிஸ்ட்ரிக்க்ஷன் காரணத்தால் அங்கிருந்தே
ஆன்லைனில் ஆபிஸ் வேலைகளைப் பார்க்கப் போகிறார் டெலிவரி வரை அங்குதான் இருப்பாராம்..
அவளுடைய வீட்டிற்கு நாங்கள் போவதாக முடிவெடுத்து நான் அவளைக் கேட்டுக் கொண்டதற்கு
அவர்கள் சந்தோஷமாக ஒத்துக் கொண்டுவிட்டனர். சென்னையிலிருந்தபடியே வீணாவும் ராமும்
அவங்க பிளாட் அசோசியேஷன் செகரட்ரியிடம் பேசி எங்களை அங்கு தங்கவைக்க ஏற்பாடுகள்
செய்துவிடுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். வீட்டு சாவியும் பக்கத்து வீட்டில்
இருப்பதால் பிரச்னை இல்லை. கானடாவிலிருந்து மகேஷ் பிரெண்ட் கொடுத்துள்ள தகவல்படி
இவருடைய ஜாயினிங் டைமை ஜூன் மாதம் வரை எக்ஸ்டெண்ட் செய்துள்ளனராம். அதற்கு முன்பாக
ஆன்லைனில் ஜாயின் ஆகச் சொல்லியும் ஆபர் வரலாம் என்கிறார்கள். இப்போதைக்கு இவருடைய
பூனா ஆபிஸ் அசைன்மெண்ட் வேலைகளைச் சிறப்பாக செய்துவருவதால் அவர்களே மகேஷுக்கு ரீஎம்ப்ளாயிண்ட்மெண்ட்
கொடுத்தாலும் கொடுப்பா்கள் போலத் தெரிகிறது. இந்த நேரத்தில் மகேஷ் கொஞ்சம்
ரிலாக்ஸ் மனதோடு தன் வேலைகளில் கவனம் செலுத்துவது
ரொம்ப முக்கியம் என்று நான் நினைப்பதால் அவரைக் கூட கலந்து பேசாமல் தாதர்
பிளாட்டிறகு போவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நீங்களும்
நிலமையைப் புரிந்து கொண்டு இதற்கு ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்."....
"ரஞ்சிதா , இங்க என்ன குறைன்னு இப்படி ஒரு
முடிவுக்கு நீ வந்தருக்க? " கேட்கும் அம்மாவை ஏறிட்டாள் ரஞ்சிதா.
"அவங்க செய்யறது ஏதாவது சரியில்லைன்னா
அதைச் சுட்டிக் காட்டற உரிமை நமக்கு இல்லைன்னு நினைக்கறாங்க போல..." அப்பா
கிண்டலாகப் பேச,அப்படியெல்லாம் இல்லை மாமா"
அவசரமாக மறுக்கும் கணவனைப் பார்த்து, "மகேஷ்
,கொஞ்சம் பேசாம இருங்க. நான் சொல்லவந்ததை
இன்னும் முடிக்கலை" என்றவள் தொடர்ந்து. "நீங்க இதை எப்படி வேணாலும்
நினைச்சுகலாம், புரிஞ்சிக்கலாம்.அது உங்க விருப்பம்.
நான் உங்க மேல வருத்தப்பட்டோ கோபப்பட்டோ இதைச் செய்யலை. நமக்குள்ள இந்த கேப்
இப்போதைய அவசியத் தேவை. கூடிய சீக்கிரம் எங்க பணியிடம் குறித்த தெளிவு
கிடைச்சிடும்னு நான் உறுதியா நம்பறேன். அப்போ நாங்க இங்க வந்து உங்களோட அன்பான
வாழ்த்துகளோடதான் புது வேலையைத் துவங்குவோம். எங்க இருந்தாலும் உங்க தேவைகளை,
மற்ற உதவிகளைத் தொடர்ந்து உங்க மகளா கவனிச்சுப்பேன். சோ, கோபமோ வருத்தமோ படாம எங்களை அனுப்பி வையுங்க." தொடர்ந்து நிலவிய
மௌனம் ரஞ்சிதாவின் பேச்சில் தொனித்த எதார்த்தத்தை புரிய வைத்தது போலத் தோன்றியது.
Comments
Post a Comment