கல்யானமே வைபோகமே
சாந்தி
நாதன்
"சிவகுமார் வெட்ஸ் நந்தினி " மலர்களால் அலங்கரிக்கப்பட்ட
வண்ணப்பலகை வாயிலில் வரவேற்கும் அந்த பெரிய திருமணக்கூடம் விருந்தினர்களால்
நிரம்பி இருந்தது. வாயிலின் மறுபுறம் "சிவநேசன் குரூப்ஸ் உங்களை அன்புடன்
வரவேற்கிறது" என்று பளீர் எழுத்துக்கள் மின்ன, அதன்
அருகில் நின்றுகொண்டு வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தனர் மணமகன்
சிவகுமாரின் பெற்றோர் கதிரேசனும் சரஸ்வதியும். "எல்லாரும் நேரா டைனிங்
ஹாலுக்குப் போய் டிபன் சாப்பிடுங்க முகூர்த்தத்திற்கு இன்னும் நேரம் இருக்கு
" என்ற அவர்களின் அன்பு உபசரிப்பின்படி டைனிங் ஹால் நிரம்பி இருந்தது.
"ஹாய் கவிதா எப்படி இருக்கீ்ங்க" பட்டொளியும் தகதகக்கும்
நகையுமாக ஒரு பெண்மணி இன்னொரு சர்வாலங்கிருத பெண்ணைக் கேட்க, “பூமிகா, நீங்க
எப்படி இருக்கீங்க? டிபன் சாப்டாச்சா? வாங்க
சாப்பிடலாம் என்று அருகருகே அமர்ந்தனர்.
"நேத்து மாலை ரிசப்ஷனுக்கு நீங்க வரலை
போலிருக்கே" பூமிகா கேட்க, “இவர் ஆபிஸ் நண்பர் வீட்டுத் திருமண
வரவேற்பு போயிட்டோம். அது சரி கவிதா, உங்க பெண்
சங்கீதாவைத் தான் சிவகுமார் கல்யாணம் கட்டிக்கப் பேறதா நம்ம உறவுக்காரங்க மத்தியில
ஒரு பேச்சு இருந்தது. ஆனா
எப்படி......."
"
முதல்ல நாங்களும் அப்படித் தான் நினைச்சோம். பையன் வெளிநாடு போய்
அவங்க தொழில் அபிவிருத்திக்காக ஏதோ படிச்சிட்டு வரட்டும். அப்புறம் அவனோடு
பேசிட்டு சொல்றோம்னாங்க. கம்பெனியை விரிவுபடுத்தற வேலையில் மும்முரமாக இருக்கான் இப்ப
கல்யாணம் வேண்டாம்னு சொல்றதா மழுப்பினாங்க. அப்பவே நாங்க எங்க மகளுக்கு வரன் தேட
ஆரம்பிச்சிட்டோம். நம்ம தகுதி அந்தஸ்த்துக்கு ஏத்தமாதிரி கிடைக்கணும் இல்லையா?
சங்கீதாவும் இப்ப எதோ கோர்ஸ் சேர்ந்திருக்கா. அது முடிச்சபிறகு தான்
திருமணப் பேச்சை எடுக்கணும்னு கண்டிப்பா சொல்லியிருக்கா." கவிதா சொல்லி
முடிக்கவும், " சரியா சொன்னே கவிதா, உனக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் இந்தப் பெண் குமார்
ஆபிஸில் வேலைபார்க்கற பெண். அம்மாவும் தம்பியும் தான். இவ சம்பாத்தியத்திலதான்
குடும்பம் நடக்குது. தம்பி படிச்சிட்டு இருக்கானாம். பையன் பிடிவாதமா இவளைத் தான்
கட்டிக்குவேன்னு சொன்னதால இவங்களும் வேறவழியில்லாம சம்மதிச்சிருக்காங்க."
" இவ்வளவு விஷயம்
நடந்திருக்கு ஆனா கல்யாணத்துக்கு கூப்பிட வந்த சரஸ்வதி என்னடான்னா வரப்போற மருமகளைப் பற்றி அவ்வளவு பெருமையா
பேசினா. இந்த மாதிரி அறிவு, அடக்கம், அழகு
எல்லாம் நிறைஞ்ச பெண் நாங்களே தேடியிருந்தாலும் கிடைச்சிருக்காது. அவ தம்பிபடிப்பில
மட்டுமில்லை விளையாட்டிலும் நம்பர் ஒன்.
மேற்படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கு. அம்மாகாரியோ பூமாதேவி மாதிரி
பொறுமைசாலின்னு அளந்து தள்ளிட்டா."
"ஒரே பையன்னு செல்லமா வளர்த்து இப்ப அவனுக்குத் தலையாட்டி கல்யாணம்
வரைக்கும் வந்தாச்சு. அடுத்ததா ஒரு பெண் இருக்காளே அவ எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சிருக்கணுமில்லை ஒரு வேளை அவளும்
அண்ணன் காட்டிய வழியில்...." பேசிக் கொண்டிருந்தவள் அங்கு வரும் சரஸ்வதியைப்
பார்த்தவுடன் "டிபனே அமர்களமா
இருந்துச்சு. சாப்பாடு சாப்பிட வயிறு இடம்
கொடுக்குமான்னு தெரியலை" என்றாள்.
"சாப்பாட்டுக்கு இன்னும் நேரமிருக்கே. சரி முகூர்த்த நேரம்
நெருங்குது. வாங்க மண்டபத்துக்குப் போகலாம்" என்றாள். "ஏற்பாடெல்லாம் ரொம்ப விமரிசையா இருக்கே. செலவெல்லாம்
உங்களுதுதானா " கவிதா கேட்க, எங்க மாமனார் ஆரம்பிச்சு சாதாரணமா
நடந்து வந்த இந்த தொழில் இவர் மூலம் வளர ஆரம்பித்தது. ஆனா குமார் இதை பெரிய அளவுல
கொண்டு போயிட்டு இருக்கான். இதில எம்மருமகளும் கடந்த ஒரு வருஷமா ராப்பகலா பாடுபட்டிருக்கா. குமார் தன்னைத் திருமணம் செய்துகொள்வான்
என்ற எதிர்பார்ப்பில் அவள் இதைச்
செய்யவில்லை. ஒரு உண்மையான ஊழியனின் கடமையாகத் தான் அவ இதைச்செஞ்சிருக்கா.
குமார் அவனோட விருப்பத்தை எங்ககிட்டதான் முதல்லசொல்லி நாங்க அவங்க வீட்டுக்குப்
பெண் கேட்டுப் போனபிறகுதான் அவளுக்கும் அவ அம்மாவுக்கும் விஷயமே தெரியும். அவங்களோட
நிலமைக்கும் எங்க வசதிகளுக்கும் ஒத்து வராதுன்னு ரொம்ப தயங்கினாங்க. இவரும் நானும்
நிறைய பேசி தான் ஓத்துக்க வச்சோம். இதில யார் செலவு செஞ்சாங்கறது ஒரு விஷயமே
இல்லை." மூச்சு விடாமல் பேசியவள்,
"வாங்க போகலாம்" என்று இருவரோடும்
நடந்தாள்.
முன்னால் நடக்கும் சரஸ்வதிக்கு
முகச்சுழிப்புக் காட்டியவாறே இருவரும் திருமண அரங்கில் நுழைந்து அருகருகே அமர்ந்து
கொண்டனர். மேடையில் மணமகன் சிவகுமார்
மாப்பிள்ளை கோலத்தி்ல் கம்பீரமாக அமர்ந்து
புரோகிதரின் வழிகாட்டுதலின்படி
பூசை செய்து கொண்டிருந்தான். மணமேடையில் நடுநாயகமாக கடவுளின் பிரம்மாண்டமான
பதுமைகள் பூ அலங்காரங்களோடு காட்சியளிக்க, ஒருபுறம் குமாரின்
தாத்தா பாட்டியின் புகைப்படம் மாலை சூட்டப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. மறுபுறம்
மணப் பெண்ணின் தந்தையின் புகைப்படம் அதே போன்று இருந்தது.
" பெண்ணை அழைத்து வாங்க" புரோகிதர் குரல் கொடுக்க,
“போம்மா, உங்க
அண்ணியை அழைச்சிடடு வா " மகளை சரஸ்வதி அனுப்ப, அவளும்
உற்சாகமாக தலையசைத்துக் கொண்டு ஓடினாள். போன சிறிது நேரத்துக் கெல்லாம்
பதட்டமாக திரும்பி வந்த குமாரின் தங்கை ஆர்த்தி அம்மாவின் காதுகளில் ஏதோ
கிசுகிசுக்க, அவள் அப்பா கதிரேசனும் அதைக் கேட்டு
முகம் மாறினார். " என்னம்மா பெண் வரலையா? முகூர்த்த நேரம்
நெருங்கறதே?" புரோகிதர் கேட்க, "பெண்பிள்ளைங்க அலங்கார விஷயத்தில அவசரப் படமுடியுமா அய்யா? இப்ப வந்திடுவா" என்ற கதிரேசன் மனைவியிடம் நீ போய் பாரு என்று
சைகை செய்தார். "என்னாச்சுப்பா
பதட்டமாக எழ முயன்ற மகனின் முதுகி்ல் தட்டி ரிலாக்ஸ்" என்றார்.
நடந்ததைப்
பார்த்துக் கொண்டிருந்த விருந்தினர்கள் ஏதோ பிரச்சினை என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.
"நேத்து மாலை வரவேற்பிலேயே அந்தப் பொண்ணு சுரத்தை இ்ல்லாத மாதிரித்
தோணிச்சு" ஆமா கண்டிச்சு வளர்க்க ஆம்பிளை இல்லாத வளர்ப்பு சரியா விசாரிக்காம
சம்பந்தம் வைச்சிட்டாங்க. பூமிகா, கவிதா இருவருக்கும் சந்தோஷம் நிரம்பி
வழிந்தது. "கொஞ்ச நேரம் முன்னாடி சரஸ்வதி என்ன பேச்சு பேசினா, இப்ப பார்த்தியா "
மணமகளின் அறைக் கதவு மூடியிருக்க கதவைத்தட்ட கை எழுப்பிய சரஸ்வதி
உள்ளிருந்து எழுந்த உரையாடலைக் கேட்டு தயங்கினாள். "கடைசி நிமிஷத்தில இப்படி
அடம்பிடிக்கிறயேடி . இது உனக்கே நியாயமா படுதா"? அம்மாக்காரியின் கெஞ்சல் ...... "நியாயத்தைப் பத்தி நீ பேசறியா?
நான் முதலிருந்தே சொல்லிட்டுதானே இருந்தேன். நீ தான் கேக்கலை. உன்
மகனுக்கும் எல்லாம் தெரியுமில்லை ஏண்டா
பேசாமலிருக்க சொல்லேன்." அதட்டும் அக்காவின் குரலுக்கு, "ஆமாம்மா. அக்கா முதலிருந்தே சொல்லிட்டு தானே இருந்தா..... " கடவுளே,
தராதரம் தெரியாம சம்மந்தம் செஞ்சிருக்கயேன்னு உறவுஜனங்கள்
பழிப்புக்கு ஏத்தமாதிரி இது என்ன விபரீதம்,” ஆத்திரம் மண்ட கதவைத் தள்ளிக்கொண்டு
உள்ளே நுழைபவளைக் கவனிக்காமல்
"கட்டினவளையும் பெத்த இரண்டையும் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம
குடிச்சு சீரழிஞ்சு உன்னை நட்டாத்தில வி்ட்டுட்டுப் போய் சேர்ந்த அந்த ஆளு
போட்டோவை நேத்து மாலையோட மேடையில பார்த்தபோதே எனக்குப்பத்திக்கிட்டு வந்தது. ஒத்தை
ஆளா பாடுபட்டு எங்களை வளர்த்து ஆளாக்கிய எங்க தெயவம் நீ விதவைங்கறதால என் கழுத்தில
தாலி ஏறும் போது என்கண் முன்னாடி நிக்கமாட்டேன் அது அபசகுனம்னு முறண்டு பிடிக்கறதை
எப்படி என்னால ஒத்துக்கமுடியும்"..... "என் மருமகள் சொல்றது ரொம்ப சரி மணமேடையில பெத்தவங்க தான்
கூடவே இருந்து குழந்தைகளுக்கு முதல் ஆசீ்ர்வாதம் சொல்லணும். உங்க உழைப்பில
வளர்ந்து தன் வாழ்க்கையின் முக்கியமான திருமணவாழ்வில் நுழையும் உங்க மகளோட
நினைப்பு ரொம்ப நியாயமானது. தயங்காம கிளம்புங்க எந்த சாஸ்திர சம்பிரதாயமும் இதுக்கு தடை சொல்ல
முடியாது. வாம்மா நந்தினி அங்க எம் பையன் தவிப்போட காத்துக்கிட்டிருக்கான்"
சொன்னபடியே மாலையை நந்தினி்க்கு அணிவித்து ஒருகையால் அவளையும் மறுகையால் அவள்
தாயையும் பற்றிக்கொண்டு கம்பீர நடைபோட்டாள் சரஸ்வதி .பொங்கும் விழிநீரைத்
துடைத்துக் கொண்டு பின் தொடர்ந்தான் தம்பி சுரேந்தர்.
----------------------------------
Comments
Post a Comment