அகர முதல
சாந்தி நாதன்
அலுவலகத்திலிருந்து உற்சாகமாக உள்ளே
வந்த சுரேந்தர் கார் சாவியை ஆணியில் மாட்டியபடியே " பாக்யா, ஹரீஷ், சிந்து இங்க வாங்க" என அழைத்தான்.
படித்துக் கொண்டிருத்த இருவரும்
அறையிலிரு்து வெளிவர, பாக்யாவும் கணவனுக்கு காபி கோப்பையை
எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். "இங்க பாருங்க " என்று ஒரு அழைப்பிதழை
மேஜையின் மீது வைத்தவன்," எங்க எம்.டி.மகன் முகுந்த்
நிச்சயதார்த்த இன்விடேஷன். பெண் வீடும் பெரிய இடம். மும்பையி்ல் பெரிய
பிசினஸ்மென். கல்யாணம் மும்பையில் என்பதால் என்ங்கேஜ்மெண்ட் இங்க எல்லாரையும்
கூப்பிட்டு செய்கிறார். ஆபிஸ் ஸ்டாஃப் எல்லாரும் குடும்பத்தோட வரணும்னு கண்டிப்ப சொல்லியிருக்கார்
. ஞாயிற்றுக்கிழமை உங்க ரெண்டு பேருக்கும் லீவு தான். எல்லாரும்மா போகலாம்."
"இன்விடேஷனே
அமர்களமா இருக்கே" ஹரீஷ் கூற, " சிட்டியிலேயே
பெஸ்ட்மேரேஜ் ஹால். காட்டரிங்கும் பெரிய பார்ட்டி. முகுந்த் அவங்க அப்பா
இடத்துக்கு வரப் போறார். அதனால நாம இந்த ஃபங்ஷனக்குக் கண்டிப்பாப் போய் அவரோட
நெருங்கிப்பழகறதுக்கு ஒரு ஆரம்பம் உருவாக்கிக்கணும். "பிள்ளைகள் இருவரும் உற்சாகமாக தலையசைக்க,
பாக்யா மௌனமாக நின்றாள். "என்ன ஒண்ணும் பேசாம நிக்கறே. நீ
வந்துதான் ஆகணும். எல்லாரும் ஜோடியா வரும்போது நீ வரலைன்னா நல்லா இருக்காது.
சிந்து, நீ வழக்கமா போற ப்யூட்டி பார்லருக்கு உங்க
அம்மாவைக் கூட்டிக் கிட்டுப் போய் சிக்னு மாத்திக்கிட்டு வருவாயாம்"
அதெல்லாம் ஒண்ணும்வேண்டாம் நான் இயல்பா இருக்கறமாதிரி வரலாம்னா வரேன். இல்லைன்னா
நான் வரலை."பாக்யா திடமாகக் கூற, "அம்மா,
நீ இப்பவே அழகாதானிருக்கே அந்த இடத்துக்குத் தகுந்த மாதிரி உன்
தோற்றத்தைக் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கணும்னு அப்பா சொல்ல வரார். அதானேப்பா?
அது என் பொறுப்பு. சரியா?" "ஓ.கேம்மா,
உங்கம்மா இது வரைக்கும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போனதில்லை.
அதனால சொன்னேன்."
குறிப்பிட்ட நாளும் வந்தது.
நால்வரும் கிளம்பி குறித்த நேரத்துக்கு மண்டபத்தை அடைந்தனர். அருகில்
அமர்ந்திருக்கும் மனைவிக்கு சுரேந்தர் காரை ஓட்டியபடியே அவள் அங்கு எப்படி நடந்து
கொள்ளவேண்டுமென வகுப்பு எடுத்துக் கொண்டே வந்ததையும் மௌனமாக ஒரு சின்ன
தலையசைப்போடு பாக்யா எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வந்ததையும் பின் இருக்கையில்
அமர்ந்து கொண்டிருந்த இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி துவங்க சிறிது அவகாசம் இருந்ததால் எம்.டி. கிருஷ்ணன் விருந்தினர்கள்
அருகில் மனைவி சகிதம் வந்தார். சுரேந்தர் தன் குடும்ப உறுப்பினர்களை அறிமுகம்
செய்து கொண்டிருக்கும் போது, "அப்பா,"என்று
கூப்பிட்டுக் கொண்டே அங்கு வந்த முகுந்த் நால்வரையும் பார்த்து "ஹலோ"
என்றான். அடுத்த நிமிடம் சற்றுப் பின்தள்ளிநின்ற பாக்யாவை உற்றுப் பார்த்து,
"நீங்க லட்சுமிடீச்சர் தானே, என்னை அடையாளம் தெரியலையா? மதுரையில உங்க
கிட்ட படிச்ச முகுந்த்" என்றான் உற்சாகமாக. ஒரு நிமிடம் யோசித்த பாக்யா,
"ஆமாம் இப்ப நினைவுக்கு வருது. ஆனா நீங்க என்னை
எப்படி மறக்காம இருக்கறீங்க, சட்னு அடையாளம்
கண்டுபிடிச்சீங்கன்னுதான் ஆச்சரியமா இருக்கு" என்றாள் பாக்யா." என்னது
நீங்க வாங்கன்னு பேசறீங்க? அப்ப இருந்த மாதிரி அதே சிம்பிள் அண்ட்
ஸ்வீட்டாக இருக்கறதால சுலபமா அடையாளம்
காணமுடிஞ்சுது" என்றவன் தன் பெற்றோரைப் பார்த்து, "அப்பா, நீங்க முதல்ல யூ.எஸ். போயிட்டு
கிடடத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு தானே நானும் அம்மாவும் அங்க வந்தோம். அப்ப நாங்க
மதுரையில தாத்தா வீட்டில இருந்தப்ப நான் படிச்ச ஸ்கூலில் இவங்க டீச்சர். தமிழும்
மாரல் சயின்ஸ்ஸும் எடுப்பாங்க. தமிழ் மேல எனக்கு இப்பவும் பற்றும் மரியாதையும்
இருக்கறதுக்கு இவங்க தான் அடித்தளம் அமைச்சுக் கொடுத்தாங்கன்னு சொல்லணும். நிறைய
இளைஞர்கள் மம்மி, டாடின்னு கூப்பிடற மாதிரி கூப்பிடாம எம்மகன் அழகா அம்மா அப்பான்னு தான்
சொல்வான்னு அம்மா பெருமையா சொல்வாங்க
இல்லையா அது கூட இவங்க தமிழ் மொழியின் சிறப்பு, தேசிய
உணர்வுன்னு நிறைய கதைகள் மூலமாகவும் சின்னச்சின்ன பாட்டுகளாகவும் சொல்லி எங்க
மனசில பதிய வச்சது மூலமாகவும் எங்க இயல்பில் கலந்திருக்கும்னு தோணுது.""
+
"ஆமாங்க, இப்ப எனக்குக் கூட நினைவுக்கு வருது.
ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா இவங்க சொன்ன கதை, பாட்டுன்னு
நிறைய சொல்லுவான் அப்பாவும் அம்மாவும் ஆர்வமா கேப்பாங்க. நாங்க யூ.எஸ்.
கிளம்பறசமயம் ஸ்கூல் போய் டீ.சி. வாங்கப் போனபோது இவங்க கல்யாணம் நிச்சயமாகி இருப்பதால்
வேலையை விட்டுட்டுப் போயிட்டதாக
சொனனாங்க". இப்ப அவனோட பிரியமான
டீச்சரை சந்திச்சது அவனுக்கு மட்டுமில்லை நமக்கும் பெருமை தாங்க. வாங்க எங்க மருமகளுக்கு
உங்களை அறிமுகம் செய்யறேன். நீங்களும் வாங்க சுரேந்தரைப் பார்த்து சொல்லியபடியே
எம்.டி.யின் மனைவி பாக்யாவோடு நடக்க,கணவனைப் பார்தது
ஒரு அர்த்தம் கலந்த புன்னகையை வீசியவாறே பின் தொடர்ந்தாள் பாக்யா என்கிற
பாக்கியலட்சுமி
-----------------------------------------------
Comments
Post a Comment